மோடி மேற்கொள்ளும் தியானம் தேர்தல் வெற்றிக்கா? இல்லை மன அமதிக்கா?
- Muthu Kumar
- 31 May, 2024
இந்தியாவில் நாளை 7 ம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.முடிவுகள் ஜூன் 4ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில் 132 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரியில் கடல் நடுவே சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த பாறையில் பிரதமர் மோடி நேற்று தொடங்கி 45 மணி நேரத்திற்கு தியானத்தை மேற்கொள்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு நேற்று மாலை வந்த பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு நேற்று மாலை வருகை புரிந்தார்.
இதை தொடர்ந்து மாலை 5:40 மணிக்கு பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் முடிந்ததும் மாலை 6 மணிக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் விவேகானந்தர் என்ற படகில் பயணித்து கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு சென்றார். பிரதமரின் வருகையை ஒட்டி பாதுகாப்பு வளையம் பலப்படுத்தப்பட்டுள்ளது.
விவேகானந்தர் பாறைக்கு சென்ற பிரதமர் தியான மண்டபத்தில் உள்ள சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர், சாரதா தேவி ஆகியோரின் சன்னதிகளிலும் , சுவாமி விவேகானந்தரின் முழு உருவ சிலைக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு அங்குள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்யத் தொடங்கினார்.
தொடர்ந்து 5 மணி நேரம் தியானம் அதன் பிறகு சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டார். நாளை மாலைவரை 45 மணி நேரத்திற்கு தொடர் தியானத்தை மேற்கொள்ளயிருக்கிறார். 5 மணி நேரத்திற்கு ஒருமுறை ஓய்வை தவிர பிரதமர் தூங்கப்போவதில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஓய்வு சமயத்தில் இளநீர், பழச்சாறு மட்டும் குடித்து முழு விரதம் மேற்கொள்கிறார். நாளை மாலை 4 மணிக்கு தியானத்தை நிறைவு செய்யும் பிரதமர் படகுமூலம் கன்னியாகுமரி கரைக்கு வந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து டெல்லி புறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *