ராக்கெட் வீசிய ஹமாஸ் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல்!

top-news
FREE WEBSITE AD

இஸ்ரேலின் டெல் அவிவ் மீது நேற்றிரவு ஹமாஸ் அமைப்பு ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்திய நிலையில், இஸ்ரேல் ராணுவம் இதற்கு பதிலடி கொடுத்திருக்கிறது.இதில் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாலஸ்தீனத்தை இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க பல்வேறு ஆயுதம் ஏந்திய குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒன்றுதான் ஹமாஸ். இந்த ஹமாஸை இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிரவாத அமைப்பாக பட்டியலிட்டிருக்கிறது. இந்த அமைப்பு கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுப்பதாக கூறி 200 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் ராணுவம், காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது. இதில் 35 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். 75% பேர் குழந்தைகள் என பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐ நா பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின. இது நாள் வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

போர் காரணமாக காசாவுக்குள் நிவாரண பொருட்கள் எதுவும் வரவில்லை. இதனால் உணவுக்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உணவு கிடைக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தொற்று நோய் பாதிப்புகளும் தீவிரமடைந்துள்ளன.

மறுபுறம் இந்த போரை எதிர்த்தும், போரில் இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்காவின் நிலைப்பாட்டை எதிர்த்தும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் சூடுபிடித்துள்ளன. அமெரிக்காவில் மட்டும் 50க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராடும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை அந்நாட்டு காவல்துறை கைது செய்து வருகிறது. தற்போது வரை 900க்கும் அதிகமானோர் கைதாகியுள்ளனர்.

மாணவர் போராட்டம் லண்டன், பாரிஸ் என ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. சூழல் இப்படி இருக்கையில் 'சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால்' (ICC) போர் குற்றத்திற்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விரைவில் கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படி இருக்கையில் நேற்றிரவு இஸ்ரேலின் டெல் அவிவ் மீது ஹமாஸ் அமைப்பு ராக்கெட்களை வீசி தாக்குதலை நடத்தியிருக்கிறது. எனவே இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 35 பேர் பலியாகியுள்ளனர்.

ராஃபா எல்லையில் தஞ்சமடைந்துள்ளவர்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த தாக்குதலுக்கு பாலஸ்தீன அரசு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. காசா மீது போர் தொடுக்கப்பட்ட நிலையில், மக்கள் எகிப்து எல்லையான ராஃபால் தஞ்சமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *