ராமதாஸ் குறித்து பேசியதற்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்!

top-news
FREE WEBSITE AD

பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த 21ஆம் தேதி தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிக்கையில் "அமெரிக்க நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் அதானி குழுமத்தால் கையூட்டு வழங்கப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ள நிலையில், இது குறித்து தமிழக அரசு விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.

கடந்த ஜூலை மாதம் 10-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ரகசியமாக சந்தித்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்பின் நோக்கம் என்ன? இந்த ரகசிய சந்திப்பு குறித்தும் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியிருந்தார்.

எனினும் இதுதொடர்பாக திமுக தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் சென்னை கண்ணகி நகரில் மாண்டிசோரி மழலையர் வகுப்புகளை இன்று நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது, பாமக நிறுவனர் ராமதாஸ், அதானி தமிழ்நாட்டில் யாரை வந்து சந்தித்தார் என்று கேள்வி எழுப்பியிருக்கிறாரே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு ஸ்டாலின், "அவருக்கு வேறு வேலையில்லை. அவர் தினமும் ஒரு அறிக்கை கொடுப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஓகே…" என்று கோபமாக பதிலளித்து அங்கிருந்து சென்றார்.ராமதாஸ் குறித்து பேசியதற்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமக தலைவரான அன்புமணி டெல்லியில் கோபத்துடன் பேட்டியளித்திருந்தார்.

தொடர்ந்து தனது கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் பேசிய அன்புமணி, ராமதாஸ் குறித்த பேசிய ஸ்டாலினின் உடல்மொழியை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இதற்கு தகுந்த எதிர்வினையை நாம் காட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து அதன் அறிகுறியாக வடமாவட்டங்களில் சில பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது. மேலும் நாளை முதல் போராட்டத்தை தமிழகம் முழுவதும் தீவிரப்படுத்தவும் ஆலோசனை நடந்து வருவதாக பாமக தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அதே வேளையில் பாமகவின் போராட்டத்தை முறியடிக்க தமிழக உளவுத்துறை ஐஜி செந்தில் வேலன், டிஜிபி சங்கர் ஜிவால், கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் மாநகர ஆணையர்கள், மாவட்ட எஸ்.பிக்கள், சரக டிஐஜி, மண்டல ஐஜி ஆகியோருடன் பாதுகாப்பு முன்னெச்செரிக்கை தொடர்பான ஆலோசனைகளில் இறங்கியுள்ளனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *