ஸ்டார்லைனர் விண்கலம் செப்.6ம் தேதி சுனிதா வில்லியம்ஸ் இல்லாமல் பூமிக்கு திரும்பும்!

top-news
FREE WEBSITE AD

சர்வதேச விண்வெளி மையத்திற்கு போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ் பயணித்திருந்தார். இந்நிலையில் இந்த விண்கலத்தில் சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டிருப்பதால் சுனிதா வில்லியம்ஸ் இல்லாமல் வெறுமென செப்.6ல் பூமிக்கு வந்து சேர்கிறது.

பூமியிலிருந்து ஏறத்தாழ 400 கி.மீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு அடிக்கடி விண்வெளி வீரர்கள் சென்று ஆய்வு செய்வது வழக்கம். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாதான் இந்த பணிகளை மேற்கொண்டு வந்தது. சமீபத்தில் இந்த பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க நாசா முடிவெடுத்தது. இதற்காக போயிங் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.

போயிங் நிறுவனத்திற்கு விமான தயாரிப்பில் முன் அனுபவம் உண்டு, அதன் அடிப்படையில்தான் இந்த நிறுவனத்தை நாசா தேர்ந்தெடுத்தது. போயிங் நிறுவனம் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவின் மற்றொரு விண்வெளி வீரரான புட்ச் வில்மோர் என இருவரையும் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்து சென்று மீண்டும் பத்திரமாக பூமிக்கு கொண்டு வரும் பணியை ஏற்றுக்கொண்டது.

இதற்காக 'ஸ்டார் லைனர்' எனும் ஸ்பேஸ் ஷிப்பையும் தயாரித்தது. இந்த ஷிப் மூலம் கடந்த ஜூன் 5ம் தேதி அமெரிக்காவின் கேப் கனாவெரல் ஏவுதளத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சுனிதாவும், வில்மோரும் அனுப்பி வைக்கப்பட்டனர். இரண்டு நாட்கள் கழித்து, அதாவது ஜூன் 7ம் தேதியன்று ஸ்டார்லைனர் சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது.

ஆனால் இந்த பயணத்தை தொடங்குவதற்கு முன்னரே பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டிருந்தன. இரண்டு மூன்று முறை  ஸ்டார்லைனரின் பயணம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இப்படி இருக்கையில் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸையும், புட்ச் வில்மோரையும் மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

ஜூன் 7ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற சுனிதா மற்றும் வில்மோர் ஜூன் 14ம் தேதி மீண்டும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால், ஸ்டார் லைனரில் ஏற்பட்ட ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஆகியவை இந்த பயணத்தை மேலும் ஒரு வாரத்திற்கு தள்ளி போட்டது. இதன்படி ஜூன் 26ம் தேதி இருவரும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும்.

ஆனால், ஸ்டார்லைனரின் தொழில்நுட்ப கோளாறுகள் இன்னும் சரி செய்யப்படாததால், இன்று வரை இருவரும் பூமிக்கு திரும்பாமல் சர்வதேச விண்வெளி மையத்திலேயே சிக்கி தவிக்கின்றனர். இது நாசா விஞ்ஞானிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து பூமிக்கு திரும்ப 6 மணி நேரங்கள் தேவைப்படும். இந்த 6 மணி நேர பயணத்தில் த்ரஸ்டர் ஃபெயிலியர், வால்வு லீக்கேஜ் ஆகிவை இல்லாமல் இருக்க வேண்டும்.

ஆனால் இந்த பிரச்னை இன்னும் சரி செய்யப்படவில்லை. எனவே, வரும் 2025ம் ஆண்டு, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் க்ரூ விண்கலம், சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்கிறது. அதில், சுனிதாவும், வில்மோரும் திரும்புவார்கள் என நாசா அறிவித்திருக்கிறது.

அதேபோல ஸ்டார் லைனர் வரும் செப்.6ம் தேதி சுனிதா வில்லியம்ஸ் இல்லாமல் பூமிக்கு வரும் என்றும் கூறியிருக்கிறது. இது மெக்ஸிகோவில் உள்ள ஒயிட் சாண்ட்ஸ் விண்வெளி துறைமுகத்தில் தரையிறங்கும். சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து இதனை கிளப்பி விடும் வேலையை மட்டும்தான், போயிங் விஞ்ஞானிகள் செய்வார்கள்.

மற்றபடி, அது தரையிறங்கும் வரை ஆட்டோமேட்டிக்காக செயல்படும். இதனை ஹூஸ்டனில் உள்ள ஸ்டார்லைனர் மிஷன் கட்டுப்பாட்டு விஞ்ஞானிகள் மற்றும் புளோரிடாவில் உள்ள போயிங் மிஷன் கட்டுப்பாட்டு விஞ்ஞானிகள் கவனிப்பார்கள். அவசியம் என்றால் இவர்கள் கட்டுப்பாட்டை கையில் எடுப்பார்கள் என்று நாசா கூறியுள்ளது. ஸ்டார்லைனர் பூமியில் இறங்கியதும் இதில் எப்படி தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டது? ஏன் சரி செய்ய முடியவில்லை? என்பதை போயிங் நிறுவனம் ஆராயும். மறுபுறம் நாசாவும் தனது விசாரணையை தொடங்கும்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *