கொல்கத்தா அரசு மருத்துவமனை பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கில் திருப்பம் மேல் திருப்பம்!
- Muthu Kumar
- 23 Aug, 2024
இந்தியாவின் கொல்கத்தாவில் அரசு மருத்துவமனை ஒன்றில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியா முழுவதும் வீதிகளில் இறங்கி பெண்கள் போராடி வருகின்றனர். மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு பிறகும், பணிக்கு திரும்ப மேற்குவங்க மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் நாளுக்கு நாள் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கில் தொடக்கத்தில் இருந்தே சம்பவம் நடந்த கல்லூரியின் முதல்வரான சந்தீப் கோஷ் மீது சந்தேக கண்கள் பாய்ந்து வருகின்றன. குறிப்பாக, இந்த சம்பவம் பெரிய பிரச்னையாக வெடித்த உடனேயே தன்னுடைய கல்லூரி முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
சம்பவம் நடந்த உடனேயே காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல் தாமதம் செய்தது, கொல்லப்பட்ட பெண்ணின் பெற்றோர்களிடம் தவறான தகவல்களை அளித்தது சந்தீப் கோஷ் மீதான சந்தேகத்தை மேலும் அதிகரிக்க செய்தது. வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு சந்தீப் கோஷ் திருப்திகரமான பதில் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சந்தீப் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் உண்மை கண்டறியும் சோதனை நடத்த உள்ளனர். பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட இரவில் பணியில் இருந்த மற்ற நான்கு மருத்துவர்களுக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளது.
இந்த சோதனைக்கு சிறப்பு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. உண்மை கண்டறியும் சோதனையின் முடிவுகள்,நீதிமன்றத்தில் அனுமதிக்கப்படாவிட்டாலும், விசாரணை அதிகாரிகளுக்கு பெரிய அளவில் உதவுகிறது
கடந்த ஒரு வாரமாக சந்தீப் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் தினமும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் விசாரணையில் இன்னும் திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். உச்ச நீதிமன்றத்தில் இன்றைய விசாரணையின்போது கூட சந்தீப் கோஷ்க்கு எதிராக நீதிபதிகள் சரமாரி கேள்விகளை எழுப்பினர்.
"எப்ஐஆர் பதிவு செய்ய முதல்வர் ஏன் முன் வரவில்லை? அவரை யாராவது தடுத்தார்களா? அவர் ஏன் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்? இதற்கெல்லாம் காரணம் என்ன என்பதை நீதிமன்றம் அறிய விரும்புகிறது" என இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் கேள்வி எழுப்பியிருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *