மீண்டு வருவதற்கான முயற்சிகளில் முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானி!

top-news
FREE WEBSITE AD

எதுவும் இல்லாமல் வாழ்க்கையில் உச்சத்தை தொட்டவர்தான் திருபாய் அம்பானி. ஆனால், வாழ்க்கையில் எல்லாம் இருந்தும் மாடிவீட்டு ஏழையாக சறுக்கியவர் அனில் அம்பானி.இந்த நிலையில்,சமீபகாலமாக மிகப்பெரிய சறுக்கல்களில் இருந்து மீண்டு வரும் அனில் அம்பானி தற்போது பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார்.

ஆசியாவின் மற்றொரு பணக்காரர் கெளதம் அதானி சறுக்கி மீண்டு எழுந்து வெளிநாடுகளில் முதலீடு செய்தது போல், இப்போது இவரது பாணியில், அனில் அம்பானியும் மீண்டு எழுந்து பூட்டான் நாட்டில் முதலீடு செய்கிறார். பங்குச் சந்தையில், கடந்த செப்டம்பர் மாதம் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும பங்குகள் சிறப்பான ஏற்றத்தை கொடுத்து வருகிறது.தற்போது, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் பூடான் நாட்டில் 1,270 மெகாவாட் சூரிய ஒளி மற்றும் நீர் மின் திட்டங்களை உருவாக்குவதற்கான திட்டங்களை அறிவித்ததுள்ளது.

மெகாவாட் சோலார் மற்றும் நீர்மின் திட்டங்களை அமைப்பதற்காக ட்ரூக் ஹோல்டிங்குடன் பூட்டானின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் நுழைவதாக அறிவித்துள்ளது. இதில், 500 மெகாவாட் சோலார் ஆலை மற்றும் 770 மெகாவாட் நீர்மின் திட்டங்கள் அடங்கும்.

இது பூட்டானின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இந்திய நிறுவனம் ஒன்றின் மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீடு ஆகும்.புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முதலீடுகளை அதிகரிக்க பூடான் அரசாங்கத்தின் வணிகப் பிரிவான ட்ரக் ஹோல்டிங் அண்ட் இன்வெஸ்ட்மெண்ட் (DHI) உடன் குழு கையெழுத்திட்டுள்ளதாக நிறுவனம் நேற்று தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.


ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் பவர் லிமிடெட் இணைந்து இதனை ஊக்குவிக்கும் விதமாக ரிலையன்ஸ் எண்டர்பிரைசஸ் என்ற புதிய நிறுவனத்தை ரிலையன்ஸ் அமைத்துள்ளது. இந்நிறுவனம் சோலார் மற்றும் ஹைட்ரோ திட்டங்கள் உட்பட பசுமை ஆற்றலில் கவனம் செலுத்தி புதிய பசுமை தொழில்நுட்பங்களை ஆராயும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, ரிலையன்ஸ் எண்டர்பிரைசஸ் கெலெபு மைண்ட்ஃபுல்னஸ் சிட்டியில் தலா 250 மெகாவாட் வீதம் 500 மெகாவாட் சோலார் ஆலையை இரண்டு கட்டங்களில் கட்டும் எனவும் இது அடுத்த இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த கூட்டணியின் நோக்கம், 770 மெகாவாட் திறன் கொண்ட சம்கார்ச்சு-1 நீர்மின்சாரத் திட்டத்தின் வளர்ச்சியில் ஆற்றின் நதி நீர்நிலைகளுக்கு பூட்டானின் சலுகை மாதிரியின் கீழ் செயல்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது.மேலும், ரிலையன்ஸ் குழுமம் பூட்டானின் நிகர-பூஜ்ஜிய இலக்குகளை ஆதரிக்கும் உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த பூட்டானில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களுடன் ஒத்துழைக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கூட்டணி ஒப்பந்தத்தில் அனில் அம்பானியுடன், ரிலையன்ஸ் பவர் லிமிடெட் நிறுவன மேம்பாட்டுத் தலைவர் ஹர்மன்ஜித் சிங் நாகி மற்றும் ட்ரூக் ஹோல்டிங் மற்றும் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி உஜ்வல் தீப் தஹல் ஆகியோர் கையெழுத்திட்டனர். இதில் ரிலையன்ஸ் எண்டர்பிரைசஸ் பூடான் முழுவதும் ஸ்மார்ட் விநியோகம் மற்றும் அளவீட்டு அமைப்புகளை அமைக்கும். அத்துடன் நிலையான தீர்வுகளுடன் நாட்டின் எரிசக்தி தேவைகளை ஆதரிக்கும்.ரிலையன்ஸ் குழுமத்தின் நீண்டகால அர்ப்பணிப்பு பூட்டான் மற்றும் அதன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் என்று நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேபோல், இந்த திட்டம் பொருளாதார வளர்ச்சி மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பூட்டானின் தற்போதைய மின் திறன் 2,452 மெகாவாட்டாக உள்ள நிலையில், பூட்டானுக்கும் இந்திய தனியார் நிறுவனத்திற்கும் இடையிலான கூட்டு முயற்சியாக சம்கார்ச்சு-1 நீர்நிலை திட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும்.ட்ரூக் ஹோல்டிங் மற்றும் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி உஜ்வல் தீப் தஹல் தெரிவிக்கையில் ரிலையன்ஸ் எண்டர்பிரைசஸ் மற்றும் ட்ரூக் ஹோல்டிங் இடையேயான கூட்டணி பசுமை ஆற்றல் மற்றும் மேம்பாடு ஆகிய துறைகளில் இரு நிறுவனங்களின் பலத்தையும் மேம்படுத்துகிறது.

ரிலையன்ஸ் உடன் கூட்டு சேருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் பூட்டான் ஆகிய இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் உலகத் தரம் வாய்ந்த தூய்மையான எரிசக்தி திட்டங்களை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

2002ஆம் ஆண்டுக்கு முன்னதாக அவரது தந்தை திருபாய் அம்பானி தலைமையில் தனது அண்ணன் முகேஷ் அம்பானியுடன் ரிலையன்ஸ் நிறுவன பொறுப்புகளை அனில் அம்பானி கவனித்து வந்தார்.2002 ஆம் ஆண்டு திருபாய் அம்பானி மறைந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படவே 2005 ஆம் ஆண்டு இவர்களது தாயார் கோகிலாபென் இருவருக்கும் ரிலையன்ஸ் நிறுவன சொத்துக்களை பிரித்து கொடுத்தார். அப்படி உருவான சம்ராஜ்ஜியத்தில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த அனில் அம்பானி ரிலையன்ஸ் குழுமம் பிரபலமடைந்தது.

ஆனால், கடந்த காலங்களில் சிக்கலில் சிக்கி அனில் அம்பானி திவாலானார். இன்றுவரை இவரது அண்ணன் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாகவும், முகேஷ் அம்பானி ஆசியாவின் முதல் பணக்காரராகவும் உள்ளார். தற்போது அனில் அம்பானி சறுக்கல்களில் இருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *