மருத்துவ சிகிச்சைக்காக தென் கொரியா செல்லும் வெளிநாட்டவர் எண்ணிக்கை உயர்வு!

- Muthu Kumar
- 03 Apr, 2025
மருத்துவ சிகிச்சைக்காக தென் கொரியா செல்லும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென் கொரியாவுக்கு கடந்த ஆண்டில் மட்டும் 17.7 லட்சம் வெளிநாட்டவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக சென்றுள்ளனர். 2023-ல் 6,05,768 பேர் சிகிச்சைக்காக சென்ற நிலையில் கடந்தாண்டு அந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 3 மடங்கு உயர்ந்துள்ளதாக தென் கொரிய சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து சிகிச்சை பெறுபவர்களை ஈர்க்க அந்நாட்டு அரசு கொண்டு வந்த திட்டங்களே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.மருத்துவ சிகிச்சைக்கு சென்றவர்கள் மூலம் அந்நாட்டுக்கு பல கோடி வெள்ளி வரை வருமானம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது கடந்த 2023-ல் கணிசமான தொகை இருந்ததாகவும் தெரிவித்தனர்.
தென் கொரியாவுக்கு 2009 முதல் 2024 வரை கிட்டத்தட்ட 50.5 லட்சம் வெளிநாட்டவர்கள் மருத்துவ சிகிச்சைகளுக்காகச் சென்றுள்ளனர்.இதில், ஜப்பானில் இருந்து 37.7% , சீனாவில் இருந்து 22.3%, அமெரிக்காவில் இருந்து 8.7% பேர் சென்றதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, 2024-ல் தைவான் நோயாளிகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 5 மடங்கு அதிகரித்து 83,456 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, அமெரிக்க நோயாளிகள் 101,733 பேர் தென் கொரியாவுக்கு சென்றது சாதனையாகப் பார்க்கப்படுகிறது.சிகிச்சை ரீதியாக 56.6% நோயாளிகள் தோல் மருத்துவர்களையும் 10% பேர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்களையும் பார்வையிடச் சென்றுள்ளனர்.
இதுமட்டுமின்றி, தென் கொரியாவில் வெளிநாட்டு மருத்துவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.2020 ஆம் ஆண்டில் 472 ஆக இருந்த வெளிநாட்டு மருத்துவர்களின் எண்ணிக்கை, 2024-ல் 546 ஆகவும் உயர்ந்துள்ளதாக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *