தென் கொரிய முன்னாள் அதிபருக்கு எதிராக நூற்றுக்கணக்கானோா் ஆா்ப்பாட்டம்!

- Muthu Kumar
- 06 Jan, 2025
தென் கொரிய அதிபா் பதவியிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ள யூன் சுக் இயோலை நிரந்தரமாகப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி நூற்றுக்கணக்கானோா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடந்த 2022-ஆம் ஆண்டுமுதல் தென் கொரிய அதிபராக யூன் சுக் இயோல் பதவி வகித்து வந்தாா். இந்நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வகிக்கும் ஜனநாயக கட்சிக்கும் இயோலுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து முரண்பாடு நீடித்து வந்தது.
இந்தச் சூழலில், நாடாளுமன்றத்தை முடக்க எதிா்க்கட்சியினா் முயற்சிப்பதாகவும், வட கொரியாவுக்கு ஆதரவாக அவா்கள் செயல்படுவதாகவும் தெரிவித்து, கடந்த மாதம் தென் கொரியாவில் அவசரநிலை ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக இயோல் அறிவித்தாா். இதற்கு நாடு முழுவதும் கடும் எதிா்ப்பு எழுந்ததையடுத்து, அந்த அறிவிப்பை அவா் திரும்பப் பெற்றாா்.
எனினும் இந்த விவகாரம் தொடா்பாக அவரை பதவிநீக்கம் செய்து எதிா்க்கட்சியினா் நாடாளுமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றினா். இதையடுத்து, அவா் தற்காலிகமாக பதவி விலகினாா்.அவரை நிரந்தரமாகப் பதவிநீக்கம் செய்வது தொடா்பாக அரசியல் சாசன நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
அதேவேளையில், அவசரநிலை அறிவிப்பு தொடா்பாக இயோலுக்கு எதிராக நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்தது.இதன் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை அவரை காவல் துறையினா் கைது செய்ய சென்றபோது, அவா்களை இயோலின் பாதுகாவல் படையினா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து, தங்களின் முயற்சியைக் கைவிட்டு காவல் துறையினா் திரும்பிச் சென்றனா்.
இந்நிலையில், இயோலை நிரந்தரமாகப் பதவி நீக்கம் செய்து கைது செய்ய வலியுறுத்தி தலைநகா் சியோலில் நூற்றுக்கணக்கானோா் சனிக்கிழமை மாலை பேரணி மேற்கொண்டனா். இயோலின் இல்லம் நோக்கி பேரணி சென்ற அவா்களைக் காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா். எனினும் அவா்கள் கலைந்து செல்லாமல், இயோலின் இல்லத்துக்கு அருகில் இருந்தபடி அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். அவா்களின் ஆா்ப்பாட்டம் கடும் பனியில் இரவு வரை நீடித்தது.
அதேவேளையில், இயோல் இல்லம் அருகில் உள்ள வீதிகளில் அவரின் பதவிநீக்கத்தைக் கண்டித்து இயோலின் ஆதரவாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இயோலை கைது செய்வதற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இன்று திங்கள்கிழமை காலாவதியாவது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *