நான் முதலமைச்சராக இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை வராது-ஸ்டாலின்!

- Muthu Kumar
- 10 Dec, 2024
மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இந்த தீர்மானத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். அதில், எதிர்க்கட்சித் தலைவர் பேசும் போது, 'நாடாளுமன்றத்தில் உள்ள உங்கள் உறுப்பினர்கள் என்ன செய்தீர்கள் என கேட்டு உள்ளார்.' எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்த்து இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல போராட்டத்தில் ஈடுபட்ட நேரத்தில் அமைச்சர் மூர்த்தி அவர்கள் நேரடியாக சென்று மக்களிடம் பேசினார்.
அரசு ஆதரவாக உங்களுக்கு உள்ளது. போராட்டத்தை கைவிட சொன்னார். சட்டமன்றத்தில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார் என்பதை எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "எதிர்க்கட்சித் தலைவர் இவ்வளவு வேகமாக பேசும் காரணத்தால் நீங்கள் ஏதோ சாதித்துவிட்டோம் என்று நினைக்க வேண்டாம். இது தொடர்பாக தொடர்ந்து கடிதம் எழுதி உள்ளோம். தொடர்ந்து போராட்டம் நடத்தி உள்ளோம். நாடாளுமன்றத்தில் கண்டன குரலை பதிவு செய்து உள்ளோம்."
நாடாளுமன்றம் கூடி கலைகிறதே தவிர, தொடர் கூட்டம் நடப்பதாக நமக்கு செய்திகள் வரவில்லை. ஆனால் கிடைக்கும் நேரத்தை பயன்படுத்தி எதிர்ப்பு தெரிவித்து உள்ளோம். கனிம திருத்த சட்டம் கொண்டு வந்த போது எதிர்ப்பு தெரிவித்து உள்ளோம். ஆனால் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று தவறான தகவல்களை பதிவு செய்கிறீர்கள். கனிம சீர்த்திருத்த சட்டம் எங்கள் ஆதரவில் நிறைவேறவில்லை. எங்கள் எதிர்ப்பு நாடாளுமன்றத்தில் பதிவாகி உள்ளது. மெஜாரிட்டி அவர்களிடம் உள்ள போது என்ன செய்ய முடியும்.
திமுக அரசு எந்த விதத்திலும் அலட்சியமாக இருந்தது இல்லை. அரசை பொறுத்தவரை நிச்சயமாக சொல்கிறேன். ஏலம் விட்டாலும் சரி, நிச்சயமாக உறுதியாக அதற்கு உரிய அனுமதியை தர வாய்ப்பே இல்லை. நான் முதலமைச்சராக இருக்கும் வரையில் நிச்சயமாக ஒன்றிய அரசு இந்த திட்டத்தை கொண்டு வர முடியாது. வந்தால் தடுத்தே தீருவோம். நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் வரையில் நிச்சயமாக இந்த திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்.
இந்த விவகாரத்தில் நாங்கள் அலட்சியப்படுத்தவில்லை. எக்காரணம் கொண்டும் இந்த திட்டத்தை செயல்படுத்தவிடமாட்டோம். அப்படி ஒரு சூழல் வந்தால் அந்த பொறுப்பில் நான் இருக்கமாட்டேன் என கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *