3 வது முறையாக விண்வெளி சென்ற சுனிதா வில்லியம்ஸ்!

top-news
FREE WEBSITE AD

இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வௌி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் கடந்த 1998-ம் ஆண்டு அமெரிக்காவின் நாசா விண்வௌி ஆய்வு மையத்தில் இணைந்தார். 2006, 2012ல் இரண்டு முறை விண்வௌிக்கு சென்றுள்ளார். இதுவரை 322 நாட்களை அவர் விண்ணில் கழித்திருக்கிறார். இந்நிலையில் 58 வயதான சுனிதா வில்லியம்ஸ் 3ம் முறையாக விண்வௌி செல்ல திட்டமிட்டிருந்தார். அவருடன் மேலும் 2 நாசா வீரர்கள் அமெரிக்காவின் தனியார் நிறுவனமான போயிங் தயாரித்துள்ள ஸ்டார்லைனர் விண்கலத்தில் பயணம் செல்ல திட்டமிட்டிருந்தனர்.

கடந்த மே 7ம் தேதி அமெரிக்காவின் விண்வௌி ஆய்வு மையத்தில் இருந்து புறப்பட தயாரான ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து 90 நிமிடங்களுக்கு முன் அதன் பயணம் ரத்தானது. இதையடுத்து ஜூன் 1-ம் தேதி மீண்டும் ஸ்டார்லைனரின் விண்வௌி பயணம் திட்டமிடப்பட்டது. அதன்படி கவுன்டவுன் தொடங்கி 3 நிமிடம் 50 நொடிகளில் நிறுத்தப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஸ்டார்லைனரை ஏவுவதில் 2ம் முறை தடை ஏற்பட்டது. இதனால் சுனிதா வில்லியம்ஸ் 3ம் முறை விண்வெளிக்கு செல்லும் திட்டம் ரத்தானது.

இதனையடுத்து நேற்று முன்தினம் (புதன்கிழமை) இரவு 10.52 மணி அளவில் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு வெற்றிகரமாக புறப்பட்டுச் சென்றார். புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து 'அட்லஸ் 5' ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில், சுனிதா வில்லியம் மற்றும் மற்றொரு நாசா வீரர் பேரி வில்மோரும் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டனர். சுனிதா வில்லியம்ஸ் ஸ்டார்லைனர் விண்கலத்தை இயக்கினார். தொடர்ந்து சுமார் 27 மணி நேரம் பயணித்து, மலேசிய நேரப்படி நேற்று இரவு 1.30 மணியளவில் அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை வெற்றிகரமாக அடைந்தனர்.

சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்ததுமே மிகுந்த மகிழ்ச்சியடைந்த சுனிதா வில்லியம்ஸ், அங்கு நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, சர்வதேச விண்வெளி நிலையத்தின் பாரம்பரிய முறைப்படி மணி அடித்து, சுனிதா வில்லியம்ஸ் வரவேற்கப்பட்டுள்ளார். பயணம் வெற்றியடைந்ததை குறிப்பிட்டு கூக்குரலிட்டவாறு உள்ளே வந்த அவர், நடனமாடியபடியே அங்கிருந்த சக ஆராய்சியாளர்களை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தொடர்ந்து காற்றில் மிதந்தபடியே மீண்டும் நடனமாடி உற்சாகமடைந்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *