பாஜக 230 இடங்களை வெல்லும் - கெஜ்ரிவால்!
- Muthu Kumar
- 12 May, 2024
சிறையில் இருந்து வெளியே வந்த உடன் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ள கெஜ்ரிவால், பாஜக எத்தனை இடங்களில் வெல்லும் என கூறியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் கைதான கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதையடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால் நேற்று முதல் வேலையாக அனுமன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து கட்சி அலுவலகத்திற்குச் சென்ற கெஜ்ரிவால் அங்கு ஆம் ஆத்மி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறிய சில கருத்துகள் ரொம்பவே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால், சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்ட வர மக்கள் ஒன்றாகத் திரள வேண்டும் என்றார். மேலும் நாடு முழுக்க பாஜகவுக்கு எதிராகப் பிரச்சாரத்தையும் செய்ய உள்ளதாகவும் அவர் பேசினார். இதற்கிடையே நடக்கவிருக்கும் லோக்சபா தேர்தலில் பாஜக எத்தனை இடங்களில் வெல்லும் என்பது குறித்தும் கூறிய கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ஆம் ஆத்மி தொண்டர்கள் மத்தியில் பேசிய கெஜ்ரிவால், "எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி தான் இந்த தேர்தலில் வெற்றி பெறும்.. அடுத்து அமையும் மத்திய அரசில் நிச்சயம் ஆம் ஆத்மி அங்கம் வகிக்கும். சிறையில் இருந்து வெளிவந்த பிறகு தேர்தல் வல்லுநர்களிடம் பேசினேன்.. ஆம் ஆத்மி தொண்டர்களிடமும் பொதுமக்களிடமும் பேசினேன்.. அவர்கள் அனைவரும் சொன்னது ஒன்று தான்.. பாஜக நிச்சயம் ஆட்சியைப் பிடிக்கப் போவதில்லை என்றே அனைவரும் சொன்னார்கள்.
ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, டெல்லி, பீகார், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஜார்கண்ட், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த முறை பெற்ற அளவிற்கு பாஜகவால் வாக்குகளை பெற முடியாது. இந்த மாநிலங்களில் அவர்கள் வெல்லும் தொகுதிகள் நிச்சயம் குறையும்.. எந்த மாநிலத்திலும் இந்த முறை அவர்கள் கூடுதல் தொகுதிகளில் வெல்லப் போவதில்லை.
என்னைப் பொறுத்தவரை பாஜக 220-230 இடங்கள் வரை பெறும்,.. ஆனால், பாஜகவால் ஆட்சியை அமைக்க முடியாது.. ஜூன் 4ஆம் தேதி நிச்சயம் மோடி அரசு அமையப் போவதில்லை. இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைந்த உடன் டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும்" என்று கூறியுள்ளார்.
நமது நாடாளுமன்றத்தில் மொத்தம் 543 லோக்சபா தொகுதிகள் உள்ள நிலையில், அதில் பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்க ஒரு கட்சி 272 இடங்களில் வெல்ல வேண்டும். கடந்த தேர்தலில் பாஜக மட்டுமே இந்த மாயாஜால எண்ணைத் தாண்டியது. ஆனால், இந்த முறை பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்பதே கெஜ்ரிவால் கருத்தாக இருக்கிறது. அதேநேரம் இவர் சொல்லும் 220 சீட் என்றால் பாஜக தான் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்பது போலவே இருக்கிறது.
இதற்கிடையே கெஜ்ரிவாலின் கருத்துக்குப் பதிலளித்த பாஜக செய்தித் தொடர்பாளர் சுதன்ஷு திரிவேதி, "ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவாலுக்கு பாஜக மீது எந்தளவுக்கு வெறுப்பு இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.. ஆனால் அவரே பாஜக 220 இடங்களில் வெல்லும் எனக் கூறியிருக்கிறார். இதை வைத்துப் பார்த்தால் உண்மையில் 400 இடங்களைத் தாண்டி வெல்லும்" என்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *