திருச்செந்தூர் கோவில் யானை தாக்கியதில் பாகன் உட்பட இருவர் பலி!
- Muthu Kumar
- 19 Nov, 2024
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வளர்க்கப்படும் தெய்வானை என்ற யானை நேற்று திடீரென ஆக்ரோஷமாக மாறி தாக்கியதில் அதன் பாகன் உட்பட இருவர் உயிரிழந்தார்.இதற்கிடையே பாகன் உயிரிழந்ததால் யானை தெய்வானை உணவு எதையும் சாப்பிட மறுப்பதாகவும் இதனால் அதன் உடல்நிலையைக் கண்காணித்து வருவதாகவும் யானையைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளிலே ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெய்வானை என்ற யானை வளர்க்கப்பட்டு வருகிறது.பொதுவாகவே அமைதியான குணம் கொண்ட இந்த யானை, கோயிலில் நின்று கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கும். இந்த யானையை உதயகுமார் என்ற பாகன் பராமரித்து வந்துள்ளார்.
நேற்றைய தினம் யானை கோவில் வளாகத்தின் அருகே கொட்டகையில் இருந்த நிலையில், அதற்குப் பழம் தரப் பாகன் உதயகுமார் சென்றுள்ளார். அப்போது அவருடன் உறவினர் சிசுபாலனும் அங்குச் சென்றுள்ளார்.. திடீரென ஆக்ரோஷமாகத் தெய்வானை யானைப் பாகன் உதயகுமாரையும் சிசுபாலனையும் மிதித்ததாகக் கூறப்படுகிறது. சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த உதயகுமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், அவரும் உயிரிழந்தார்.
பெண் யானைக்கு மதம் பிடிக்காது. அப்படியிருக்கும் போது அமைதியான குணம் கொண்ட தெய்வானை யானை ஏன் இதுபோல தாக்கியது என்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சிசுபாலன் யானைக்கு அருகே சென்று செல்ஃபி எடுத்துள்ளார். அவர் நீண்ட நேரம் செல்ஃபி எடுத்த நிலையில், ஆக்ரோஷமான யானை சிசுபாலனை முதலில் தாக்கியுள்ளது. சிசுபாலனை காக்க வந்ததால் பாகன் உதயகுமாரையும் யானை தாக்கியதாகத் தகவல் வெளியானது.
இந்தச் சம்பவம் நடந்த கொஞ்ச நேரத்திலேயே யானை மீண்டும் ஆக்ரோஷம் குறைந்து அமைதியாகிவிட்டதாம். அதேநேரம் பாகனுக்கு ஏதோ ஆகிவிட்டது என்பதை உணர்ந்த யானை சாப்பிட மறுத்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.
இது தொடர்பாக மருத்துவர் கூறுகையில், "தெய்வானை என்ற இது 26 வயதான பெண் யானையாகும். இது பொதுவாக ரொம்பவே அமைதியான இயல்பைக் கொண்ட யானையாகும். இதற்கு முன்பு யானை இதுபோல நடந்து கொண்டதே இல்லை. எனவே, என்ன நடந்தது.. யானை ஏன் ஆக்ரோஷமாக மாறியது என்பது குறித்து மருத்துவ வல்லுநர் குழு விசாரித்து வருகிறது.
யானையின் நடவடிக்கைகளைக் கவனித்து வருகிறோம். யானை மற்றும் இங்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். யானை பாதுகாப்பாகவும் நார்மலாகவும் இருக்கிறது. அதேநேரம் அது உணவு எடுத்துக் கொள்ள மறுத்து வருகிறது. பொதுவாக யானை தனது பாகனுடன் நெருக்கமாக இருக்கும். யானை சென்டிசிடிவ்வான விலங்கு.. பாகனுக்கு எதாவது நடந்தால் அதை யானையையும் பாதிக்கும். இதன் காரணமாகவே யானை உணவு சாப்பிட மறுத்து வருகிறது. இதனால் யானையின் உடல்நிலை மற்றும் நடவடிக்கைகளைக் கவனித்து வருகிறோம். தேவையான சிகிச்சை தருவோம். தேவைப்பட்டால் மருந்துகள் தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வன விலங்குகள் என்ன செய்யும் என்பதைக் கணிக்க முடியாது. ஆனால், இந்த தெய்வானை அமைதியான யானை. திடீரென ஏன் இப்படி மாறியது என்பது குறித்து விசாரிக்கிறோம்" என்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *