பத்தாண்டுகளுக்குப் பின்னர் வெற்றி பெற்ற சிலாங்கூர் எஃப்.சி!

- Muthu Kumar
- 24 Feb, 2025
பெட்டாலிங் ஜெயா, பிப். 24-
பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத் திடலில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற 2024/2025 பருவத்திற்கான சவால் கிண்ணப் போட்டியில் பி.டி.ஆர்.எம். எ.ஃப்.சி அணியை 7-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சவால் கிண்ணத்தை சிலாங்கூர் எஃப்.சி. குழு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கைப்பற்றியது.
பத்தாண்டுகளுக்குப் பின்னர் பெற்ற இந்த வெற்றி சிலாங்கூர் எஃப்.சி அணிக்கு மிகவும் பொருள் பொதிந்த ஒன்றாக விளங்குகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு மலேசியக் கிண்ணத்திற்கான மலேசிய லீக் போட்டியில் சிலாங்கூர் கடைசி முறையாக கிண்ணத்தை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியின் முதல் இறுதியாட்டத்தில் பி.டி.ஆர்.எம். எஃப்.சி. அணியை 3-0 என்ற கோல் கணக்கிலும் நேற்றிரவு நடைபெற்ற இரண்டாம் இறுதியாட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியதன் மூலம் இந்த சவால் கிண்ண வெற்றிக் கோப்பையை சிலாங்கூர் கைப்பற்றியது.
பி.டி.ஆர்.எம்.எஃப்.சி. குழுவின் தவறான முடிவின் காரணமாக மலேசியா கால்பந்து சங்கம் (எஃப்.ஏ.எம்.) எடுத்த ஒழுங்கு நடவடிக்கையே அக்குழு இந்த போட்டியில் படுதோல்வியைத் தழுவுவதற்கு காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி சிலாங்கூருக்கு எதிராக ஆடிய முதலாவது இறுதியாட்டத்தில் அந்த போலீஸ் படைக் குழு 2-3 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது. எனினும், அந்த ஆட்டத்தில் தகுதி இழந்த ஆட்டக்காரரை களமிறக்கிய காரணத்தினால் அக்குழுவுக்கு எதிராக எஃப்.ஏ.எம். நடவடிக்கை எடுத்தது.அந்த தவறு காரணமாக பி.டி.ஆர்.எம். குழுவின் ஆட்டத் தகுதி ரத்து செய்யப்பட்டு ஆட்டத்தின் முடிவும் 3-0 என மாற்றப்பட்டதோடு அக்குழுவுக்கு 3,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *