வீட்டின் பூஜை அறையில் விளக்கு ஏற்றும் முறையை தெரிந்து கொள்வோமா?

top-news
FREE WEBSITE AD

நம்முடைய வீட்டின் பூஜை அறையில் குத்து விளக்கு,காமாட்சி விளக்கு, அகல் விளக்கு என எந்த விளக்கு ஏற்றினாலும் அதை முறைப்படி ஏற்றினால்தான் தெய்வத்தின் அருள் கிடைக்கும். விளக்கேற்றும் போது சில நேரங்களில் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் தவறுகள் வீட்டில் பிரச்சினைகளை வரவழைத்து விடும். என்ன தவறு நாம் செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

மனம் மகிழ்ச்சிக்காகவும் நிம்மதிக்காகவும் நாம் விளக்கேற்றுகிறோம். தீப ஒளியில் இறைவன் குடியிருக்கிறார். எனவே நல்ல எண்ணெய்களை ஊற்றி நாம் தீபம் ஏற்ற வேண்டும். நாம் தீபம் ஏற்றி வைத்து பிராத்தனை செய்யும் போது இறைவன் மனம் மகிழ்ந்து நமக்கு அருள்புரிகிறார்.

பூஜை அறை சுத்தமாக இருக்க வேண்டும். வாரம் ஒருமுறையாவது சுத்தமான துணிகளை கொண்டு துடைக்க வேண்டும். பூஜை அறையில் ஒட்டடை, தூசி இருக்க விடக்கூடாது. அதே போல பூஜை பொருட்களையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

வாரம் ஒரு முறையாவது பூஜை விளக்குகள், பூஜை பொருட்களை சுத்தம் செய்து மஞ்சள், குங்குமத்தை புதிதாக வைத்து பூஜை அறையில் விளக்கு ஏற்ற வேண்டும். பூஜை விளக்கு சுத்தம் செய்யப்படாமல் தொடர்ந்து ஏற்றி வந்தால், குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகளையும் தேவையற்ற வீண் செலவுகளையும் ஏற்படுத்தும்.

விளக்கில் பாசி பிடிக்க விடக்கூடாது. சிலர் எண்ணெயை பச்சை பசேலென பாசி பிடிக்கும் வரை வைத்து ஏற்றுவார்கள். இது தவறான செயல். எண்ணெய் எப்பொழுதும் அதன் நிறத்தில் இருந்து மாறக் கூடாது. நிறம் மாறினால் புதிதாக எண்ணெய் ஊற்றி தான் வழிபட வேண்டும்.

விளக்கில் இருக்கும் எண்ணெயில் கொசுக்கள், பூச்சிகள், எறும்பு போன்றவை மடிந்து இறந்து போய் இருக்கக்கூடும். இது போல இருக்கும் பொழுது அந்த எண்ணெயில் கண்டிப்பாக விளக்கு ஏற்றி வழிபடக் கூடாது. அது அபசகுனமாகும். எனவே பூச்சி விழுந்து இறந்த எண்ணெயை வேறு விளக்கில் ஊற்றி வைத்து விட்டு புது எண்ணெய் ஊற்றிதான் விளக்கேற்ற வேண்டும்.

உடைந்து போன விளக்குகளை ஒருபோதும் பயன்படுத்துவது தவறு. சிதிலமடைந்த விளக்குகளில் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றினால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படும். எனவே இறைவனுக்கு செய்யும் விஷயங்களில் குறை வைக்கக் கூடாது.

பொதுவாக கோவிலில் நாம் விளக்கேற்றும் போது அடுத்தவர் ஏற்றிய விளக்கில் இருந்து நாம் விளக்கேற்றக்கூடாது. நாம் தனியாக தீக்குச்சி கொண்டுதான் விளக்கினை ஒளியூட்ட வேண்டும். அதே போல எந்த திசையில் விளக்கேற்ற வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு திசையே விளக்கேற்ற சிறந்த திசைகள். கிழக்கு திசை செல்வ வளத்தையும் மன நிம்மதியையும் அதிகரிக்கும். வடக்கு திசை மன அமைதியை தரும். பண வருமானத்தை கொடுக்கும். மேற்கு திசை தேவையற்ற வீண்ட ஆடம்பர செலவுகளை அதிகரிக்கும்.

தெற்கு திசையில் பொதுவாக தீபம் ஏற்றக்கூடாது. அதே நேரத்தில் எம தீபம் ஏற்றும் போதும், முன்னோர்களை நினைத்தும் தெற்கு திசையில் தீபம் ஏற்றலாம். இதனால் வீட்டில் நிம்மதியும் மகிழ்ச்சியும் பெருகும். நாள்தோறும் மாலை நேரங்களில் வீட்டு வாசலில் விளக்கு வைக்கலாம்.

வீட்டில் விளக்கு ஏற்ற நினைப்பவர்கள் காலை 5 மணி முதல் 7மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் விளக்கேற்றினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.விளக்கு ஏற்றி சில நிமிடங்களிலே அணைக்க கூடாது. கொஞ்சம் நேரம் ஒளிர வேண்டும். நாம் வீட்டில் வாசலில் வெறும் தரையில் விளக்கு ஏற்றுவோம். வேண்டியது நிறைவேற அரிசி அல்லது உப்பு போன்ற பொருள்களின் மீது அகல் ஏற்றி வைக்க வேண்டும்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *