ரமலான் மாதத்தின் புனித லைலத்துல் கத்ர் இரவு !

top-news
FREE WEBSITE AD

ரமலான் நோன்பின்போது அதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன்பே உணவருந்தி விட்டு மாலை சூரியன் மறைந்த பின் நோன்பினை முடித்துக் கொள்ளும் சுழற்சி முறையை இஸ்லாமியர்கள் கடைபிடித்து வருகின்றனர். பகலில் நோன்பு நோற்கவும், இரவில் அதிகமாக தொழுகை உள்ளிட்ட வழிபாடுகளை செய்ய வேண்டும் என்பதும் இஸ்லாமியர்களுக்கு, அவர்களின் மதம் இட்ட கட்டளையாகும். இதன் அடிப்படையில் ரமலான் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாள் இரவும் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெறுவது வழக்கம்.

அதிலும் குறிப்பாக ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்களில் கூடுதலாக பள்ளிவாசல்களில் வழிபாடு நடைபெறும். இதற்கான காரணம் என்னவெனில் இஸ்லாமியர்களின் புனித வேத நூலாகிய குர்ஆன், இறைத்தூதர் முஹம்மது நபிக்கு இந்த கடைசி பத்து நாட்களில் ஒரு நாளில் தான் அருளப்பட்டது.

புனித குர்ஆன் முஹம்மது நபிக்கு வழங்கப்பட்ட குறிப்பட்ட இரவைத் தான் 'லைலத்துல் கத்ர்' என சொல்லப்படுகிறது. அரபியில் லைல் என்றால் இரவு என்றும் 'கத்ர்' என்றால் புனிதம் என்றும் பொருள். நாம் பயன்படுத்தும் கதர் ஆடை எனும் சொல் கத்ர் என்ற அரபிச் சொல்லில் இருந்து மருவிய ஒன்றுதான். கதராடைக்கு புனிதமான அல்லது தூய்மையான ஆடை என்று பொருள்.

இந்த லைலத்துல் கத்ர் எனும் இரவு ரமலான் மாதத்தின் கடைசி பத்து நாட்களில் ஒரு இரவாகும். ஆனால் அது எத்தனையாவது இரவு என்பது யாருக்கும் தெரியாது. எனவே முஹம்மது நபி கடைசி பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளான 21, 23, 25, 27 மற்றும் 29 ஆகிய இரவுகள் லைலத்துல் கத்ர் இரவு வர வாய்ப்புள்ளது எனவும், இந்த இரவை அடைந்து கொள்பவர்களுக்கு ஆயிரம் மாதங்கள் வணங்கிய கூலி கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஒரு சில இடங்களில் கடைசி பத்துநாட்களில் இரவு முழுக்க பள்ளிவாசல்களில் வழிபாடுகள் நடைபெற்றாலும் பெரும்பாலான இடங்களில் 27ம் இரவுதான் 'லைலத்துல் கத்ர்' இரவாக அனுசரிக்கப்படுகிறது. அன்றைய இரவு பள்ளிவாசல் முழுக்க விழாக்கோலம் பூண்டது போல் காட்சி அளிக்கும். வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு, சிறுவர் , சிறுமியர், ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவருமே இரவு முழுக்க பள்ளிவாசல்கள் வழிபாடுகளை நிறைவேற்றுவர்.

ரமலான் மாதத்தின் 29வது தினத்தில் மீண்டும் பிறை பார்க்கப்படும். பிறை தென்பட்டால் வரும் ஞாயிற்றுக் கிழமை ஷவ்வால் மாதத்தின் முதல் நாளாக கணக்கிடப்பட்டு, அன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். ஒருவேளை பிறை தெரியவில்லை எனில் வரும் 31 தேதி திங்கள் கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *