பரபரப்புடன் நடந்து முடிந்த டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் நேரடி விவாதம்!
- Muthu Kumar
- 11 Sep, 2024
அமெரிக்காவின் புகழ்பெற்ற ஏபிசி செய்தி நிறுவனம் நடத்திய இந்த விவாதத்தில் கருக்கலைப்பு, அமெரிக்கப் பொருளாதாரம் மற்றும் போர் என்று பல்வேறு விவகாரங்கள் குறித்தும் அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் விவாதித்தனர்.
அதிபர் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே மட்டும் நிலையில், நடக்கும் இந்த விவாதம் மிக மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த விவாதம் தொடங்கும் முன்பு டிரம்ப்- கமலா ஹாரிஸ் இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர். 2016 மற்றும் 2020 ஆண்டு நடந்த விவாதங்களில் அதிபர் வேட்பாளர்கள் கைகுலுக்கிக் கொள்ளக் கூட மறுத்த நிலையில் இந்த முறை டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் கைகுலுக்கிக் கொண்டனர். மேலும் கமலா ஹாரிஸும் டிரம்பும் நேரில் சந்தித்துக் கொள்வதும் இதுவே முதல்முறையாகும்.
இந்த விவாதத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசித்தனர். பொருளாதாரம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த கமலா ஹாரிஸ் அமெரிக்க மக்களின் முக்கிய கவலை இதுதான் எனக் குறிப்பிட்டார். தனது மிடில் கிளாஸ் குடும்ப பின்னணி குறித்துப் பேசிய கமலா ,தான்அதிபரானால் மிடில் கிளாஸ் குடும்பங்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு ஆதரவளிக்க தன்னிடம் பல திட்டங்கள் இருப்பதாகச் சொல்லி அதை விவரித்தார்.
அதேநேரம் டிரம்ப் பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே ஆதரவாக இருப்பார் என்றும் அவர் விவாதித்தார். டிரம்ப் அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விலகிய போது அமெரிக்கப் பொருளாதாரம் மோசமாக இருந்ததாகச் சாடிய கமலா ஹாரிஸ், அமெரிக்கப் பொருளாதாரத்தைக் காப்பது குறித்து டிரம்பிடம் எந்தவொரு திட்டமும் இல்லை என்றும் சாடினார்.
விவாதம் சீரிஸயாக போகத் தொடங்கியதும், சட்டவிரோதமாகக் குடியேறுபவர்கள் விவகாரம் குறித்து கமலா ஹாரிஸை டிரம்ப் விமர்சித்தார். அதற்குக் கமலா ஹாரிஸ் அதே பழைய பிளான், பொய்கள், அதிக பொய்கள் என்பதே உங்கள் திட்டமாக இருக்கிறது என்று பதிலடி கொடுத்தார்.
தொடர்ந்து பேசிய கமலா ஹாரிஸ், டிரம்ப் 2020ல் அதிபர் பதவியில் இருந்து விலகும் போது நாடு எப்படி இருந்தது என்பது குறித்து நாம் பேசலாம். நாட்டில் வேலையின்மை மோசமாக இருந்தது. நூற்றாண்டில் இல்லாத பெருந்தொற்று இருந்தது. ஜனநாயகம் மிக மோசமான நிலையில் இருந்தது. இப்படி பெரும் குழப்பத்திற்கு மத்தியில் டிரம்ப் நாட்டை விட்டுச் சென்ற நிலையில், அதை நாங்கள் சரி செய்து கொண்டிருக்கிறோம் என்றார்.
இதைக் கேட்டதும் டென்ஷன் ஆன டிரம்ப் உடனே தனிப்பட்ட முறையில் தாக்கி பேசத் தொடங்கினார். கமலா ஹாரிஸை பார்த்து. "அவர் ஒரு மார்க்சிஸ்ட் என்றும் அவரது தந்தை ஒரு மார்க்சிஸ்ட் என்றும் விமர்சித்தார். இதற்கு நேரடியாகப் பதில் அளிக்காத கமலா ஹாரிஸ் சிரித்துக் கொண்டு மட்டுமே இருந்தார். மேலும் டிரம்ப் கொரோனா காலத்தை தாங்கள் மிகச் சிறப்பாகக் கையாண்டதாகவும் தெரிவித்தார்.
கமலா ஹாரிஸின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைக் கேட்டதை கோபப்பட்டே நீ ஒரு மார்க்சிஸ்ட் என டிரம்ப் கூறியிருக்கிறார். விவாதத்தில் டிரம்ப் நிதானத்தை இழந்தது இங்கே தான் எனப் பலரும் குறிப்பிடுகிறார்கள்.
அமெரிக்காவில் மார்க்சிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் என்றாலே அவர்கள் ஜனநாயகத்திற்கு எதிரானவர்கள், சர்வாதிகாரிகள் என்ற கருத்து அமெரிக்கர்களிடையே வேரூன்றி இருக்கிறது. இதன் காரணமாகவே அங்கு எந்தவொரு அரசியல்வாதியும் தன்னை இடதுசாரியாக அடையாளப்படுத்திக் கொள்ள மாட்டார். இந்த ஒரு சூழலில் தான் டிரம்ப் டென்ஷனாகி வார்த்தை விட்டு இருக்கிறார்.
இருப்பினும், இதற்கு அடுத்த ரவுண்டில் கமலா ஹாரிஸ் தக்க பதிலடி கொடுத்தார். அமெரிக்காவில் கருக்கலைப்பு விவகாரம் முக்கிய பிரச்சினையாக இருக்கும் நிலையில், டிரம்ப் மீண்டும் அதிபராக வந்தால் கருக்கலைப்புகளைத் தடை செய்வார் என்று தடாலடியாகக் குற்றஞ்சாட்டினார். இதைக் கேட்டு ஷாக் ஆன டிரம்ப், அவர் பொய் சொல்கிறார் என்று பதறியவரே மறுத்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *