கிம் ஜாங்-உன் நிற்கும் யுரேனிய அணுசக்தி தள புகைப்படத்தால் உலக நாடுகள் அதிர்ச்சி!
- Muthu Kumar
- 14 Sep, 2024
உலகின் மற்ற நாடுகளில் இருந்து வடகொரிய மட்டும் தனித்தே இருக்கிறது. உலக நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தாலும் கூட அதைத் தாண்டி ராணுவ ரீதியாக வடகொரியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குறிப்பாக அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து வருவதாகக் கூறி வந்தது. இருப்பினும், இது வரை அது சார்ந்த முக்கிய அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. இதற்கிடையே வடகொரியா ஒரு பகீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது தற்காப்புக்காக அதிகளவில் அணு ஆயுதங்களை உருவாக்க யுரேனியம் செறிவூட்டல் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் உத்தரவிட்டுள்ளார். வடகொரியாவின் அணுசக்தி பொருட்களின் உற்பத்தி தளத்திற்குச் சென்ற போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதேநேரம் இந்த அணு உற்பத்தி மையம் எங்கே இருக்கிறது என்பது குறித்த தகவல்கள் அதில் இல்லை.
இது குறித்து அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், "யுரேனியம் செறிவூட்டல் தளத்தின் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த கிம், அது எப்படிச் செயல்படுகிறது என்தை கேட்டறிந்தார். இங்கு தான் சாதாரண யூரேனியம் ஆற்றல் மிக்கதாக மாற்றப்படுகிறது. அதை அவர் ஆய்வு செய்தார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் சர்வதேச புவிசார் சூழல் காரணமாகத் தற்காப்பிற்காக அதிகளவில் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய வேண்டி உள்ளதாகவும் இதனால் இதுபோன்ற செறிவூட்டல் மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.
வடகொரியா தன்னிடம் அணு ஆயுத உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் யுரேனியம் செறிவூட்டல் மையம் இருப்பதாகக் கடந்த சில ஆண்டுகளாகவே கூறி வருகிறது. இருப்பினும், இது தொடர்பாக எந்தவொரு கூடுதல் தகவலையும் வெளியிடாததால் உலக நாடுகள் அதை நம்பவில்லை. இந்தச் சூழலில் தான் வடகொரியா தனது யுரேனியம் செறிவூட்டல் மையம் குறித்த புகைப்படம் வெளியிட்டுள்ளது. இது சர்வதேச அளவில் பேசுபொருள் ஆகியுள்ளது.
சாதாரண யுரேனியத்தை அணு ஆயுதங்களுக்குப் பயன்படுத்தும் செறிவூட்டப்பட்ட யுரேனியமாக மாற்றுவதே இந்த மையங்களின் வேலையாகும். இதில் ஒரு கருவியின் நடுவில் யுரேனியத்தை வைத்து அதை அதிவேகமாகச் சுற்றுவார்கள்.. இதன் மூலம் செறிவூட்டப்பட்ட யுரேனியம் உற்பத்தி செய்யப்படும். இதைத் தான் கிம் ஜாங் இப்போது சுற்றிப் பார்த்துள்ளார்.
இது குறித்த புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில் அது உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது வட கொரிய தலைநகர் பியோங்யாங்கிற்கு அருகிலுள்ள காங்சன் அணுசக்தி வளாகத்தில் அல்லது யோங்பியோன் அணுசக்தி தளத்தில் அமைந்திருக்கலாம் என்று தென் கொரிய மற்றும் அமெரிக்கப் புலனாய்வுத் துறை கூறுகிறது. வரும் நவ. மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்கும் நிலையில் இந்த விவகாரம் அதில் எதிரொலிக்கும் என்றே தெரிகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *