நாளை தை அமாவாசை! தர்ப்பணம், படையல் வைக்க ஏற்ற நேரம்..

top-news
FREE WEBSITE AD

தை, ஆடி, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் மூன்று அமாவாசைகளும் மிக முக்கியமானதாக சொல்லப்படுகிறது. இவற்றில் மற்ற இரண்டு அமாவாசைகளை விட தை அமாவாசை கூடுதல் சிறப்புடையதாகும்.

இந்த நாளில் முன்னோர்களை வழிபடுவதும், தானங்கள் செய்வதும், தவறாமல் செய்ய வேண்டிய ஒன்றாகும். இதனால் பல தலைமுறை பாவங்களில் இருந்து விடுபட முடியும். இது முன்னோர்களுக்கு நன்றி தெரிவித்து, அவர்களின் ஆசிகளை பெற வேண்டிய நாளாகும்.

மார்கழி மாதம், தேவர்களின் விடியற்காலை பொழுதாக சொல்லப்படுகிறது. அதாவது பிரம்ம முகூர்த்த காலமாகும். அதே போல் தை மாதம் என்பது தேவர்களுக்கு பொழுது விடிய துவங்கும் மாதமாகும். இதை உத்திராயண காலத்தின் துவக்கம் என்கிறார்கள். சூரிய பகவான், தந்தை வழி உறவுகளுக்கு காரணமான கிரகம் என்பதால் அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் போது சூரிய பகவானை சாட்சியாக வைத்து கொடுக்க வேண்டும் என்பது நியதி. அதனால் தேவர்களுக்கு சூரிய உதய காலமாக இருக்கக் கூடிய மாதமான தை மாதத்தில் வரும் அமாவாசை என்பதாலும், உத்திராயண காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் தை அமாவாசை சிறப்புக்குரியதாக சொல்லப்படுகிறது.

இந்த ஆண்டு தை அமாவாசை ஜனவரி 29ம் தேதி புதன்கிழமை வருகிறது. ஜனவரி 28ம் தேதி இரவு மலேசிய நேரப்படி 10.40 மணிக்கு துவங்கி, ஜனவரி 29ம் தேதி இரவு 09.51 வரை அமாவாசை திதி உள்ளது. அதே போல் ஜனவரி 29ம் தேதி அன்று காலை 11.51 மணிக்கு துவங்கி, ஜனவரி 30ம் தேதி காலை 10.29 வரை பெருமாளுக்குரிய திருவோணம் நட்சத்திரமும் உள்ளது. முன்னோர்களுக்கு முக்தி கிடைப்பதற்காக திதி கொடுக்க ஏற்ற இடங்களாக சொல்லப்படுவது காசியும், கயாவும் தான். காசியில் சிவ பெருமானை சாட்சியாக வைத்தும், கயாவில் பெருமாளை சாட்சியாக வைத்தும் முன்னோர்களுக்கு பிண்ட தர்ப்பணம் செய்ய வேண்டும்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சூரிய பகவானை சாட்சியாக வைத்தே கொடுக்க வேண்டும். அதனால் சூரிய உதயத்திற்கு பிறகு புனித நீராடி விட்டு, தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.மலேசிய நேரப்படி காலை 8:30 முதல் 09.50 வரை காலை 11:30 முதல்1.25 மணி வரை தர்ப்பணம் கொடுக்க ஏற்ற நேரங்களாகும்.
திருவோண நட்சத்திரத்தில் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்கிறவர்கள் 11.51 முதல் 2.05 வரை தர்ப்பணம் கொடுக்கலாம்.

புதன்கிழமை வேலை நாள் என்பதால் திருவோண நட்சத்திரத்தில் தர்ப்பணம் கொடுக்க முடியாது என்பவர்கள் காலையில் சொல்லப்பட்ட நேரத்தில் தர்ப்பணம் கொடுக்கலாம். நீர் நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் வீட்டிலேயே முன்னோர்கள், காசி மற்றும் கயா தலங்கள் ஆகியவற்றை மனதில் நினைத்து எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுத்து விட்டு, சூரிய பகவானை வழிபடலாம்.

அமாவாசை அன்று முன்னோர்களுக்கு படையல் போடும் போது பூஜை அறையில் போடக் கூடாது. ஹாலில் முன்னோர்களின் படங்களை வைத்து, அதற்கு முன்பாக இலை போட்டு தான் படையல் போட வேண்டும். அப்படி முன்னோர்களின் படம் இல்லை என்றால் யார் அமாவாசை விரதம் இருக்கிறார்களோ அவர்களுக்கு முன்பாக இலை போட்டு, படைத்து, முன்னோர்களுக்கு அர்ப்பணித்து விட்டு, காகத்திற்கு சாதம் வைத்த பிறகு, அதே இலையில் அமர்ந்து சாப்பிட்டு, விரததத்தை நிறைவு செய்யலாம்.  மலேசிய நேரம் பகல் 4 மணி முதல் 2 வரையிலான நேரம் படையல் போட ஏற்ற நேரமாகும். தை அமாவாசை அன்று குறைந்த பட்சம் ஒருவருக்காவது அன்னதானம் செய்ய வேண்டும்.

முடிந்தவர்கள் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று முன்னோர்களை நினைத்து நல்லெண்ணெயில் தீபம் ஏற்றி, அவர்கள் மோட்ச கதியை அடைய வேண்டும் என வேண்டிக் கொண்டு விளக்கேற்ற வேண்டும். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டின் பூஜை அறையில் வழக்கமாக ஏற்றும் விளக்குகளுடன் சேர்த்தோ அல்லது முன்னோர்களின் படத்திற்கு முன்பு தனியாகவோ ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சுத் திரி போட்டு விளக்கேற்ற வேண்டும். மாலை 8:30மணி முதல் 9:30மணிக்குள்ளான நேரத்தில் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *