கேரளா வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்கான செலவுகள் குறித்து சர்ச்சை!
- Muthu Kumar
- 17 Sep, 2024
கேரளா வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்கான செலவுகள் குறித்த பிரமாணப் பத்திரிக்கையை உயர் நீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்துள்ளது.
ஒவ்வொரு உடலையும் தகனம் செய்ய 75 ஆயிரம் ரூபாயும், வீரர்கள் மற்றும் தன்னார்வலர்களின் சாப்பாடு மற்றும் தண்ணீருக்காக 10 கோடி ரூபாய் அரசு சார்பில் செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவம் அப்பகுதி மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுள்ளது. முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து அதிபயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் அடித்து செல்லப்பட்டன.
நிலச்சரிவில் சிக்கி நூற்றுக்கணக்கான மக்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்து உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் தங்களது உறவினர்கள், இருப்பிடம், உடமைகள் என அனைத்தையும் இழந்து தவித்தனர். தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர், காவல் துறையினர், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில் வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்கான செலவுகள் குறித்த புள்ளி விவரங்களை உயர் நீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்துள்ளது. அதில் வீரர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு உணவு, தண்ணீருக்காக 10 கோடி ரூபாயும், அவர்கள் தங்குவதற்கு 15 கோடி ரூபாயும், சூரல்மலை மற்றும் முண்டக்கை பகுதியில் இருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கு 12 கோடி ரூபாயும், ராணுவத்தினரால் கட்டப்பட்ட பெய்லி பாலம் பணிகளுக்கு 1 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு டார்ச், ரெயின்கோட் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்க 2.98 கோடி ரூபாயும், ராணுவ வீரர்கள், தன்னார்வலர்களின் மருத்துவச் செலவுகளுக்காக 2 கோடி ரூபாயும், நிவாரண முகாம்களில் வழங்கப்பட்ட உணவுக்கு 8 கோடி ரூபாயும், முகாம்களில் தங்கவைக்கப்பட்ட சுமார் 4 ஆயிரம் பேரின் ஆடைகளுக்கு 11 கோடி ரூபாயும், முகாமில் வசிப்பவர்களின் மருத்துவத்துக்கு 8 கோடியும், சூரல்மலை பகுதியில் வெள்ள நீர் மேலாண்மைப் பணிக்காக 3 கோடியும், 359 சடலங்களை எரிப்பதற்கு 2.76 கோடியும் செலவளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகாம்களில் ஆடைகளுக்கு 11 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் நிவாரணச் செலவுகள் கணிசமாக செலவு செய்யப்பட்டுள்ள நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு மட்டும் போதுமான அளவில் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. முற்றிலும் இடிந்த வீடுகளுக்கு ரூ. 1.30 லட்சமும், சேதமடைந்த விளைநிலங்களுக்கு ஹெக்டேருக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகவே வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *