எங்களை அழிக்க ஈரான் அணு குண்டுகளை உருவாக்க முயல்கிறது-இஸ்ரேல் பிரதமர்!

top-news
FREE WEBSITE AD

ஈரான் நாட்டின் மீது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. இது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஈரான் எப்போது வேண்டுமானாலும் இதற்குப் பதிலடி தரும் என்று அஞ்சப்படுகிறது.இதற்கிடையே இஸ்ரேலை ஒட்டுமொத்தமாக அழிக்கத் தேவையான அணு குண்டுகளை உருவாக்கி வைக்க ஈரான் முயல்வதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றஞ்சாட்டினர்.

மத்திய கிழக்கில் இப்போது இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பதற்றமான சூழலே நிலவி வருகிறது. ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கடந்த அக். 1ம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை நடத்தியது.அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரான் மீது தாக்குதலை நடத்தியது. இது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு மீண்டும் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் இந்தத் தாக்குதல்கள் அப்படியே பிராந்திய போராக மாறும் என்று அஞ்சப்பட்டது.

இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஈரான் மீது சில பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இஸ்ரேலை மொத்தமாக அழிக்க ஈரான் முயல்வதாகவும் இதற்காக அணு குண்டுகளையும் தயார் செய்து வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய நெதன்யாகு, "எங்களை அழிக்க ஈரான் அணு குண்டுகளை உருவாக்க முயல்கிறது.. நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளில் அணு குண்டை பொறுத்த முயல்கிறார்கள்.

எங்களுக்கு மட்டும் இல்லை.ஒட்டுமொத்த உலகையும் கூட ஈரான் எப்போது வேண்டுமானாலும் அச்சுறுத்தலாம். ஈரான் இப்போது அணு குண்டு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதைத் தடுத்து நிறுத்துவதே எங்களின் முதல் நோக்கம். இந்த விவகாரத்தில் நாங்கள் தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகிறோம். இது தொடர்பான எங்கள் திட்டங்களை தற்போது என்னால் பகிர முடியாது" என்றார்.

ஈரான் அணு குண்டுகளைத் தயார் செய்து வருகிறது என்பதே பிரதான புகாராகும். இருப்பினும், இந்த குற்றச்சாட்டை ஈரான் திட்டவட்டமாக மறுத்தே வருகிறது. மின்சாரத்திற்காகவே அணு சக்தி திட்டங்களைப் பயன்படுத்துவதாகவும் அணு குண்டுகளைத் தயார் செய்யும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்றும் ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது.

அதேநேரம் அணுசக்தி திட்டங்களைக் கண்காணிக்கும் சர்வதேச அணுசக்தி முகமைக்குத் தரும் ஒத்துழைப்பை ஈரான் தொடர்ந்து குறைத்தே வருகிறது. மேலும், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் கையிருப்புகளையும் அதிகரித்து வருகிறது. அணு மின் நிலையத்திற்கு பொதுவாக 3 முதல் 5 சதவீதம் வரை செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருந்தால் போதும்.

அதேநேரம் ஈரான் வசம் இப்போது இருக்கும் யுரேனியம் சுமார் 83.7% செறிவூட்டப்பட்டதாக இருக்கிறது. அணு ஆயுதங்களை உருவாக்க யுரேனியத்தை 90 சதவீதம் செறிவூட்டத் தேவைப்படும் நிலையில், இதை வைத்துப் பார்க்கும் போதே ஈரான் எதை நோக்கிச் செல்கிறது என்று தெரிகிறது. ஈரானிடம் இப்போது அணு ஆயுதங்கள் இல்லை என்றாலும் சில ஆண்டுகளில் அதை உருவாக்கிவிடும் என்பதே பலரது கணிப்பாக இருக்கிறது.

நெதன்யாகு தொடர்ந்து பேசுகையில், "ஈரான் தலைமையிலான தீய சக்திகள் நமது நாட்டை அழிக்க முயல்கிறது. பிராந்திய அமைதியைச் சீர்குலைத்து இந்த பிராந்தியத்தை ஒட்டுமொத்தமாகத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர ஈரான் முயல்கிறது. இதற்கு நாம் தடையாக இருப்பதாலேயே நம்மை அழிக்க முயல்கிறார்கள். ஏனெனில் ஈரானைப் பொருத்தவரை இஸ்ரேல் வீழ்ந்தால் அதனுடன் பல நாடுகளும் விழும். மொத்த மத்திய கிழக்குமே தனது கட்டுப்பாட்டில் வரும் என்பதே அவர்கள் எண்ணம். ஆனால், இது ஒருபோதும் நடக்காது" என்றார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *