மூன்றாம் உலகப்போருக்கு அச்சாராமாக அமைகிறதா ரஷ்யாவின் அணுகுண்டு சோதனை?

top-news
FREE WEBSITE AD


உக்ரைன் மீது ரஷ்யா இரண்டரை ஆண்டுகளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போர் நடவடிக்கையால் ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. அதோடு ரஷ்யாவை எதிர்க்க தேவையான அனைத்து வகையான உதவிகளும் அமெரிக்கா சார்பில் உக்ரைனுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கோபப்படுத்தி உள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தலையிடக்கூடாது. ஏனென்றால் எங்களிடம் அணுஆயுதம் இருப்பதை மறந்து விடக்கூடாது என ரஷ்யா தொடர்ந்து கூறி வருகிறது.

அதாவது உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி செய்தால் அணுகுண்டு வீசுவோம் என்பதை வெளிப்படையாக கூறாமல் மறைமுகமாக ரஷ்யா தெரிவித்து வந்தது. இந்நிலையில் தான் தற்போது ரஷ்யா அணுகுண்டை வீசுவதற்கு முழுவீச்சில் தயாராகி வரும் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ரஷ்யா - உக்ரைன் போருக்கு நடுவே ஆர்க்டிக் (Arctic) பகுதியில் அணுகுண்டை வீச ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக 'தி டெய்லி' செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக ரஷ்யாவின் அணுகுண்டு சோதனை தளத்தின் இயக்குநர் ரியல் அட்மிரல் ஆண்ட்ரே சினிட்டின் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். அவர் ரஷ்யாவின் Rossiyskaya Gazeta செய்தி நிறுவனத்திடம் கூறிய தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ''ஆர்க்டிக்கில் நம் நாட்டின் பாதுகாப்பு கருதி பல்வேறு ஆயுத சோதனை நடத்துவதற்கு தயாராக இருக்கிறோம். இதற்கான ஆய்வகம் தயாராக உள்ளது. சோதனைக்கான அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளது.மேலும் பணியாளர்களும், ஆராய்ச்சியாளர்களும் தயாராகிம் உள்ளனர்.

தற்போது வெளிநாடு உளவுத்துறை நாங்கள் தேர்வு செய்த இடத்தை கண்காணித்து வருகிறது. நாட்டுக்குள் நடைபெற உள்ள நாசவேலை மற்றும் உளவு பார்க்கும் நபர்களை தடுப்பதில் உறுதியாக இருக்கிறோம். தற்போதைய சோதனை என்பது அணுஆயுதம் இல்லாத வகையில் நாட்டை பாதுகாக்க தேவையான பிற ஆயுதங்களுக்கான சோதனையாக இருக்கும். அதேபோல் அந்த இடத்தில் உள்ள உள்கட்டமைப்புகளை சோதிக்கும் வகையில் இந்த சோதனை இருக்கும். இது முழுக்க முழுக்க ரஷ்யாவை பாதுகாப்பதற்காக தான் மேற்கொள்ளப்பட உள்ளது. அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்தால் இந்த சோதனை என்பது மேற்கொள்ளப்படும் '' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ரஷ்யாவின் அணுகுண்டு சோதனை தளத்தின் இயக்குநர் ரியல் அட்மிரல் ஆண்ட்ரே சினிட்டின் குறிப்பிட்டு சொன்ன ஆர்க்டிக் இடம் என்பது ரஷ்யாவில் உள்ளது. ரஷ்யா சார்பில் இந்த இடம் 1990க்கு முன்பு அணுஆயுத சோதனைக்கு பயன்படுத்தப்பட்டது. 1990க்கு பிறகு இந்த இடம் அணுகுண்டு சோதனைக்கு பயன்படுத்தப்படவில்லை. ஆனால் தற்போது அந்த இடத்தை ரஷ்யா தேர்வு செய்து சோதனை நடத்த முடிவு செய்துள்ளது.இதனால் நிச்சயம் ரஷ்யா அணுஆயுத சோதனையை தான் மேற்கொள்ளும் என கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி உக்ரைன், உக்ரைனுக்கு உதவும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை மிரட்டும் வகையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் இதற்கு வலு சேர்க்கும் வகையில் தான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கட்சியின் எம்பி பேச்சு இருக்கிறது. அதாவது சில நாட்களுக்கு முன்பு ரஷ்யா எம்பி ஆண்ட்ரே கோல்ஸ்னிக் அதிபர் புதினுக்கு ஒரு முக்கிய கோரிக்கையை வைத்தார். இவர் அதிபர் புதினின் கட்சியை சேர்ந்தவர். ஆண்ட்ரோ கோல்ஸ்னிக் எம்பி தற்போது நம் நாட்டில் அணுஆயுத சோதனைகள் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த தடையை நீக்க வேண்டும். சில இடங்களில் அணுஆயுத சோதனைகளை நடத்த வேண்டும். இந்த சோதனை என்பது மேற்கத்திய நாடுகளுக்கு வார்னிங் சிக்னலாக இருக்க வேண்டும் என ஆக்ரோஷமாக கூறியிருந்தார்.

இந்நிலையில் தான் தற்போது ரஷ்யாவின் அணுகுண்டு சோதனை தளத்தின் இயக்குநர் ரியல் அட்மிரல் ஆண்ட்ரே சினிட்டின் பேச்சு சர்ச்சையை கிளப்பி உள்ளது. அதாவது அணுஆயுத சோதனை நடந்த இடத்தில் நாட்டை பாதுகாக்கும் வகையில் வெடிப்பொருட்களை வெடிக்க வைத்து சோதனை மேற்கொள்ள உள்ளதாக அவர் கூறினாலும் கூட உக்ரைன் மீதான போர், உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உதவி வருவது உள்ளிட்டவற்றால் ரஷ்யா அணுஆயுத சோதனைகளை மேற்கொள்ளலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் அமெரிக்கா, உக்ரைன் உள்பட பல நாடுகள் ரஷ்யாவின் அடுத்தக்கட்ட நகர்வை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. அதுமட்டுமின்றி ரஷ்யாவின் இந்த நடவடிக்கை என்பது மூன்றாம் உலகப்போருக்கு அச்சாராமாக அமைகிறதா? என்ற பெரிய கேள்வியையும் எழுப்பி உள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *