24 லட்சம் குழந்தைகளை காப்பாற்றிய தங்க கை மனிதர் ஜேம்ஸ் ஹாரிசன்!

- Muthu Kumar
- 06 Mar, 2025
ஆஸ்திரேலியா நாட்டின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்தவரான ஜேம்ஸ் ஹாரிசன் காலமானார். அவருக்கு வயது 81.இவர் கடந்த 64 வருடமாக ரத்த தானத்தில் ஒரு வகையான பிளாஸ்மா தானம் செய்து மொத்தம் 2.4 மில்லியன் குழந்தைகளின் உயிரை காப்பாற்றியவர்.இதன் மூலம், அப்பகுதி மட்டுமின்றி உலகம் முழுக்க நன்கு அறியப்பட்ட நபரானார்.அதனால் தான் இவரை செல்லமாக தங்க கை மனிதர் என்று அழைத்தனர்.
கருவில் இருக்கும் குழந்தைகளை தாக்கும் ஆர்.எச்.டி. என்ற ஒரு வகை பிரச்சனையில் இருந்து குழந்தைகளை காக்க ஆண்டி-டி எனும் பிளாஸ்மா தேவைப்படுகிறது. இந்த பிளாஸ்மா வெகு சிலரின் ரத்தத்தில் மட்டுமே காணப்படும். அப்படியான வெகு சிலரில் ஜேம்ஸ் ஹாரிசனும் ஒருவராக இருந்துள்ளார். இது மட்டுமின்றி தனது சிறு வயதில் ஏற்பட்ட ஒரு நிகழ்வில் இருந்தே ஹாரிசன் ரத்த தானம் செய்ய துவங்கியுள்ளார்.
ஜேம்ஸ் ஹாரிசன், தனது சிறு வயதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரது உயிரை காக்க ரத்தம் தேவைப்பட்டுள்ளது. அப்போது அவருக்கு முகம் தெரியாத நபர்கள் ரத்த தானம் கொடுத்து அவரது உயிரை காப்பாற்றினார். இந்த நிகழ்வுக்கு பிறகு தானும் ரத்த தானம் செய்ய வேண்டும் என முடிவெடுத்து, கடந்த 64 ஆண்டுகளாக ரத்த தானம் செய்துவந்திருக்கிறார்.
பின் அவரது ரத்தத்தில் பெண்களின் கருவில் இருக்கும் குழந்தைகளின் உயிரை காக்கும் ஆண்டி-டி பிளாஸ்மா இருப்பதை அறிந்து அதனை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை தானம் செய்ய முடிவு செய்து மொத்தம் அவரது வாழ்நாளில் 1,173 முறை பிளாஸ்மா தானம் கொடுத்து, 2.4 மில்லியன் குழந்தைகளின் உயிரை காப்பாற்றியுள்ளார்.
தாயின் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு ஆண்டி-டி மிக அவசியமானது. இது இல்லாதபோது, குழந்தைகளுக்கு ரீசஸ் என்ற நோய் ஏற்பட்டு, அது குழந்தைகளின் மூளையை கடுமையாக பாதிக்கவும், இதயம் செயலிழப்பு அல்லது மரணம் வரை மிக கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இப்படியான கொடும் நோயில் இருந்து 2.4 மில்லியன் குழந்தைகளை காப்பாற்றியுள்ளார் ஜேம்ஸ் ஹாரிசன்.
அப்படிப்பட்ட நல்லுள்ளம் கொண்ட தங்க கை மனிதர் என்றழைக்கப்பட்ட ஜேம்ஸ் ஹாரிசன் கடந்த பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி தூக்கத்திலேயே மரணித்தார் என அவருடைய குடும்பத்தார் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *