புகழ்பெற்றவர்களை முன்னிறுத்துவதற்கு பதிலாகத் திறமைகளை முன்னிறுத்த வேண்டும்
.jpg)
- M.ASAITHAMBY -
- 22 Dec, 2024
அன்மையில் சமூகவலைத்தளதில் வைரலாக பேசப்படும் அம்மாதான் “சரஸ்”.ஆஸ்ட்ரோவில் ஒளிப்பரப்பாகி வரும் பசங்க 2 எனும் தொடரில் பலரின் கோபத்திற்கு ஆளாகி வருகிறார் சரஸ் எனும் கதாப்பாத்திரம்.அந்த கதாப்பாத்திரத்திற்கு உயிரூட்டி இந்த தொடரில் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்தும் வந்து ரசிகர்களின் மனத்தில் இடமும் பிடித்துள்ளார் நமது நாட்டின் மூத்த கலைஞர்
நடிகை சுசிலா தேவி.
போர்ட்டிக்சனில் பிறந்து, சிரம்பான் நகரில் வளர்ந்தவர்தான் சுசீலா தேவி. தனது ஆரம்பக் கல்வியையும் இடைநிலைக் கல்வியையும் கான்வென்ட் பள்ளியில் முடித்தார். பிறகு, இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மலாய் மொழியைப் போதிக்கும் ஆசிரியராக தனது தொழிலில் பயணத்தைத் தொடங்கினார்.மேலும் அவர் கூறுகையில்ஆசிரியராகப் பணியாற்றிய பின், தைக்கோ பிளாண்டேஷன் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்து வந்தேன். அதன் பிறகு, திருமணமும் முடிந்தது. குழந்தைகளின் நலன் கருதி திருமணத்திற்குப் பிறகு முழு நேர இல்லத்தரசியாக உருமாறினேன். பள்ளிப் பருவத்தில் நிறைய போட்டிகளில் கலந்து கொண்ட அனுபவம் உண்டு. குறிப்பாக, மலாய் மொழியில் பல போட்டிகளில் ஈடுபட்டுள்ளேன். அவ்வகையில் இல்லத்தரசியாகியப் பின் நிறைய போட்டிகளில் கலந்து கொள்ள என்னை முற்படுத்திக் கொண்டேன்.
அந்தக் காலகட்டத்தில் கல்வி அமைச்சராக கே.ஜொஹாரி இருந்தார். அவ்வகையில் அவரிடமிருந்து பல விருதுகளையும் பள்ளி பருவத்தில் பெற்றுள்ளேன். அதனை ஓர் உந்து கோலாகக் கொண்டு திருமணத்திற்கு பின்பும் பல தொலைக்காட்சி, வானொலி போட்டிகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன் என்று சுசிலா கூறினார்.
அவ்வகையில், ஆஸ்ட்ரோவில் ‘ரோடா ரோடா இம்பியன்’ என்ற நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொண்டேன். அதன் பிறகு, புன்னகை பூ கீதா அவர்களின் ‘குண்டக்க மண்டக்க’ திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டேன். அதன்வழி, ‘ஸ்டார்ஸ் ஆஃப் டுமோரோ’ என்ற நிகழ்ச்சியிலும் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அந்த நிகழ்ச்சிக்கு எஸ்தி பாலாவும் பச்சையப்பனும் நடுவர்களாக வந்தனர். அவ்வேளையில் எஸ்டி பாலா அவரின் அடுத்த மேடை நாடகத்தில் எனக்கு ஒரு வாய்ப்பை அளித்தார்.
எனக்குத் தமிழை எழுதவும் படிக்கவும் தெரியாது. அவ்வகையில் அந்த மேடை நாடகத்தில் நடிப்பதற்கு பல சிரமங்களை எதிர்கொண்டேன். அதற்கு உறுதுணையாக எஸ்தி பாலாவும், மற்ற சக கலைஞர்களும் எனக்குப் பெரிதும் உதவினர். அந்த மேடை நாடகமே எனது கலைத் துறையின் பயணத்தைத் தொடக்கி வைத்தது எனலாம்.
பிறகு, மறுமலர்ச்சி என்ற நாடகத்தில் கேஎஸ் மணியம், பென்ஜி, புகழ்பெற்ற கலைஞர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பிறகுதான் பல நிகழ்ச்சிகளிலும் நாடகங்களிலும் மலேசியத் திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. அதிலும் குறிப்பாக, அதிகம் மலாய் மொழியில் தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளில் நான் அதிகம் பங்கேற்றதுண்டு.
எவ்வாறு ஆசிரியர் துறையில் இருந்து கலைத்துறையில் ஈடுபட்டீர்கள்?
எஸ்பிஎம் முடித்த பிறகு பகுதி நேரமாக அதாவது தற்காலிகமாக ஓர் ஆசிரியரின் இடத்தை நிரப்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்நேரத்தில் ஒரு பள்ளியில் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு போதிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. அதில் சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றினேன். அதன் பிறகு கலைத்துறையில் ஈடுபட்டேன். கலைத்துறை வாழ்க்கையில் ஈடுபடும் பொழுது திருமண வாழ்க்கையும் தொடங்கியது. திருமணமாகி 9 வருடம் கழித்து எனக்கு குழந்தைகள் பிறந்தன. அவ்வகையில் அவர்களின் மீது அதிகம் அக்கறை செலுத்த வேண்டும் என்ற காரணத்தினால் அனைத்திலிருந்தும் சிறிது காலம் விடுபட்டேன். ஒரு காலகட்டத்திற்கு பிறகு மீண்டும் கலைத்துறையில் காலடி எடுத்து வைத்தேன்.
பசங்க 2 திரைப்படத்தில் வாய்ப்பு எவ்வாறு கிடைத்தது?
இதற்கு முன்பு ஷாலினி பாலசுந்தரத்தின் திரைப்படத்தில் நடித்துள்ளேன். ரயில் பயணம், மெண்டி ஆகிய இரண்டு படங்களிலும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அவ்வகையில் இந்த பசங்க 2 திரைப்படத்திலும் அந்த வாய்ப்பு கிடைத்தது.பசங்க 1 டேனிஸ், விமலா பெருமாளுடனும் பசங்க 2 ஷாலினி பாலசுந்தரம் ஆகியவருடன் பணியாற்றிவதைப்பற்றி இரண்டு பேர் தயாரிப்பு எனக்கு மிகவும் பிடித்தது. டேனிஸுடன் பல கால பழக்கம் உண்டு. நானும் டேனிசும் ‘டிக்கெட் இல்லையா’ என்ற நாடகத்தின் மூலமே அம்மா மகனாக முதல் முதலில் நடித்தோம். பிறகு பல நிகழ்ச்சிகளிலும் திரைப்பட வாய்ப்புகளிலும் அவரும் நானும் பல முறை இணைந்துள்ளோம்.
பசங்க 2-இல் உங்களின் கதாபாத்திரத்தின் குணாதிசயம் படத்திற்கு முன்பே உங்களுக்கு தெரியுமா?
ஆரம்பக் காலத்தில் கதையை பற்றியும் என்னுடைய கதாபாத்திரத்தைப் பற்றியும் கூறியுள்ளனர். ஆனால், அதை முழுமையாகத் தொலைக்காட்சியில் பார்க்கும் பொழுது தான் என்னுடைய கதாபாத்திரம் முற்றிலும் மாறுபட்டதாக இருப்பதை நானும் உணர்ந்தேன். படப்பிடிப்பின் போது இந்தத் தாக்கம் அவ்வளவுவாக எனக்கு தெரியவில்லை. ஏனெனில் அவரவர் கதாபாத்திரத்திற்கு ஏற்றாற் போல் ஒவ்வொரு காட்சியையும் நடித்துவிட்டு வருவோம். அதனை கோர்வையாக நாடகமாகப் பார்க்கும் பொழுது தான் என்னுடைய கதாபாத்திரம் இவ்வளவு மாறுபட்ட நிலையில் இருப்பதை உணர்ந்தேன். ஆனால், எனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை முழுமையாக செய்த திருப்தி எனக்கு உண்டு. அனைவரின் மத்தியில் என்னுடைய இந்தக் கதாபாத்திரம் பேசப்படும் அளவிற்கு என்னுடைய நடிப்பு உயிர் தந்துள்ளது என்பதை என்னால் உணர முடிகிறது. அவ்வகையில் இந்தக் கதாபாத்திரத்திற்கு ஏற்றாற் போல நடித்து அனைவர் மனதிலும் ஓர் இடத்தைப் பிடித்துள்ளேன் என்பது தெரிய வருகிறது. இன்றளவும் என்னை சுசீலா என்று அடையாளப்படுத்தாமல் சரஸ் என்று கூறும் அளவிற்கு மக்கள் அதிகம் இந்தக் கதாபாத்திரத்தை உள்வாங்கியுள்ளனர்.
நாட்டின் மூத்த கலைஞராக நீங்கள் இன்றளவும் திகழ்ந்திருப்பதற்கான காரணம் என்ன??
என்னைப் பொறுத்தமட்டில் ஒழுக்கம், நேர நிர்வகிப்பு மிக முக்கியம். கலைத்துறையில் மட்டுமல்லாமல், வாழ்க்கையில் ஒவ்வோர் இடத்திலும் ஒழுக்கமும் நேரம் நிர்வாகிப்பும் முறையே இருந்தால் நிச்சயம் ஒவ்வொருவரும் அவரவர் துறையில் முன்னேறலாம். இதையே என்னுடைய பிள்ளைகளுக்கும் சிறுவயதிலிஇருந்து கற்றுத் தந்துள்ளேன். நாம் மற்றவர்களுக்காகக் காத்திருக்கலாம்; ஆனால் மற்றவர்கள் நமக்காக என்றுமே காத்திருக்கக் கூடாது. அதுவே ஒரு சிறந்த மனிதனாவதற்கான ஓர் உந்துகோல் ஆகும்.
உங்களுக்கு பிடித்த கதாநாயகி யார்? ஏன்?
எனக்கு சரோஜா தேவியை மிகவும் பிடிக்கும். அவரின் மொழி, உடல் பாவனைகளும் மிகவும் மிகவும் அழகாக இருக்கும். இவ்விரண்டுமே அவரின் கதாபாத்திரத்தை மெருகூட்டும் வகையில் இருக்கும். கதாநாயகன் என்று பார்த்தால் நிச்சயம் நமது உலக நாயகன் கமலஹாசன் தான் எனக்குப் பிடிக்கும்.
கலைத்துறையில் தமிழைக் கற்றுக்கொள்ள எதிர் நோக்கிய சவால்கள் என்ன??
என்னால் தமிழில் மிகவும் சரளமாகப் பேச முடியுமே தவிர எழுதவும் படிக்கவும் தெரியாது. ஆனால், என்னுடைய இந்தக் கலைத்துறை பயணத்தில் அது ஒரு தடையாக இருந்ததில்லை. தமிழில் பேச தெரிந்த ஒரு காரணத்தினால் ரோமனைஸ் தமிழில் அனைத்து வசனங்களும் எனக்கு தரப்படும். அதன் வழியே நாடகத்திலும் சரி படத்திலும் சரி என்னுடைய தமிழ் வசனங்கள் அமைந்திருக்கும். அவ்வாறே சமீபத்தில் வெளியான ‘கபாலி’ திரைப்படத்திலும் நான் என்னுடைய தமிழ் வசனத்தை பேசியுள்ளேன். அதுமட்டுமல்லாமல், என்னுடைய தந்தை ஒரு தமிழ் பள்ளியின் தலைமை ஆசிரியராகவும் என்னுடைய கணவர் ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் தமிழ் விரிவுரையாளராகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் வழியே என்னுடைய தமிழை நான் மேம்படுத்திக் கொண்டு வருகிறேன்.
பெண்ணாக எவ்வாறு குடும்ப வாழ்க்கையையும் கலைத்துறை வாழ்க்கையில் சமநிலைப்படுத்திக் கொண்டு வருகிறீர்கள்?
சிறுவயதில் இருந்தே பல துறைகளில் ஈடுபடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். அவ்வகையில் குடும்ப வாழ்க்கையையும் கலைத்துறை வாழ்க்கையையும் சமநிலைப்படுத்தி பார்ப்பதில் எந்த ஒரு பிரச்சினையும் நான் எதிர் நோக்கவில்லை என்றே கூற முடியும். குடும்ப வாழ்க்கை என்று பார்த்தால் பிள்ளைகளை நானே வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டேன். அவ்வகையில் வீட்டில் மாணவர்களுக்கு நானே பாடங்களைப் போதித்து சொல்லித் தருவேன். அதேபோல் வெளியுலகிற்கு என்னுடைய கலைத்துறையில் நான் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தான் வந்தேன். இவ்வாறு இரண்டையும் ஒரே நிலையில் சரிசமமாக பார்த்துக் கொண்டு வந்தேன் என்றே கூறலாம்
பசங்க 2 நாடகத்தில் சரஸ் என்ற கதாபாத்திரம் பல விமர்சனங்களை கொண்டு வந்துள்ளது. அவ்வகையில் அந்த விமர்சனங்கள் உங்களை எவ்வகையில் பாதித்துள்ளது?
எனக்கு மிகவும் வேதனை அளிக்கும் வகையில் தான் இருந்தது. படப்பிடிப்பின் பொழுதே இயக்குநரிடம் இத்தகைய வசனங்களும் காட்சிகளும் தேவையா என்ற வாக்குவாதமும் பலமுறை நடந்துள்ளது. நான் பொதுவாகவே பிள்ளைகளை கடுமையான சொற்கள் கொண்டு ஏச விரும்ப மாட்டேன். அவ்வகையில் புண்படுத்தக் கூடிய வார்த்தைகளை இந்த நாடகத்தில் பயன்படுத்துவது எனக்கு விருப்பம் இல்லாமல் தான் இருந்தது. ஆனால், இந்தக் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறே வசனங்களும் காட்சிகளும் அமையப்பெறும் என்று கூறிய ஒரு காரணத்தால் நான்கு மாத படைப்பின் படப்பிடிப்பில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள நிறைய நேரம் எடுத்துக் கொண்டது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அந்தக் கதாபாத்திரத்தில் என்னை நானே நுழைக்க ஆரம்பித்தேன்.
இன்றளவும் வெளியே யாரு என்னை பார்த்தாலும் ‘சரஸ் ஏன் இப்படி செய்றீங்க? ராஜா பாவம் என்றெல்லாம் கூறியுள்ளனர். ஆனால், அது கதாபாத்திரம் மட்டுமே என்று உணர்த்துவதற்கு எனக்குமே நேரம் எடுத்துக் கொண்டது. ஆரம்பக் காலத்தில் ஒரு மாதிரி இருந்தாலும் காலப்போக்கில் என்னுடைய கதாபாத்திரம் இவ்வளவு மக்கள் மனதை வென்றுள்ளதாக நான் பார்க்கிறேன்.
மலேசிய கலைத்துறையில் திறமைகளை அங்கீகரிக்கின்றனரா??
சில இடங்களில் திறமை அங்கீகரிக்கப்படுகிறது. சில இடங்களில் புகழ்பெற்ற பிரபலமானவர்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படுகின்றனர். புகழ்பெற்றவர்களை முன்னிறுத்துவதற்கு பதிலாகத் திறமைகளை முன்னிறுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.ஐகேடரகநnஉநசள குறிப்பாக டிக் டாக் பதிவில் அதிக டமைந, கடிடடடிறநசள வைத்திருப்பவர்களை மட்டுமே தற்பொழுது கொண்டாடுகின்றனர். இதனை சிறிது மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய கருத்து.
அவ்வகையில் இதுவரை உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கப்பட்டுள்ளதா??
நிறைய அங்கீகாரங்கள் கிடைக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் சமீபத்தில் விமர்சகர் விருதில் சிறந்த துணை கதாபாத்திரம் என்ற விருது எனக்கு வழங்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் சோழன் விருது, சன் சைனின் வாழ்நாள் சாதனையாளர் விருதும் கிடைக்கப் பெற்றுள்ளது.
நீங்கள் கலைத்துறையில் ஈடுபட உங்களுக்கு ஆதரவாக இருந்தவர்கள் யார்? யாருக்கு இவ்வேளையில் நன்றி கூற விரும்புகிறீர்கள்?
என்னுடைய குடும்பத்தினர் அவர்களுக்குத்தான் முதலில் நன்றியைக் கூற வேண்டும். என்னுடைய கணவர், என்னுடைய பிள்ளைகள் அவர்களின் ஆதரவும் அன்பும் இல்லையெனில் கலை துறையில் என்னால் வளர்ந்திருக்க முடியாது எனலாம். அதோடு, மலேசியா கலை உலகத்திற்கும் என்னுடைய நன்றியைத் தெரிவிக்க வேண்டும். அதோடு, ஊடக நண்பர்களுக்கும் மிக்க நன்றி. அவர்களின் பங்கு எங்களைப் போன்ற கலைஞர்களை மேம்படுத்தவும் உயர்த்தவும் அதிகம் உண்டு எனலாம். அது மட்டுமில்லாமல் என்னுடன் நடித்த சக கலைஞர்களுக்கும் நன்றியை தெரிவிக்க வேண்டும். கேஸ் மணியன், மோகன் சந்திரதாஸ், ஆஸ்ட்ரோ செல்வா ஆகியோருக்கும் நன்றி. அதுமட்டுமல்லாமல் பசங்க 2 குழுவினர்களுக்கும் எனது நன்றி. அனைவரின் ஒத்துழைப்பும் ஒற்றுமையும் தான் பசங்க 2 நாடகத்தின் வெற்றியை நிர்ணயித்துள்ளது எனலாம்.
வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு உங்களின் அறிவுரை என்ன??
ஒழுக்கமும் நேரம் நிர்வகிப்பும் மிகவும் முக்கியம். அது மட்டுமல்லாமல் எப்பொழுதும் நாம் நாமாகவே இருக்க வேண்டும். பேரும் புகழும் கிடைத்த விட்டது என்பதற்காக நம்மை நாம் மாற்றிக் கொள்ளக் கூடாது.
இன்றைய சமூக வலைத்தளத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
சமூக வலைத்தளத்தில் நன்மை தீமை இரண்டும் உள்ளது. முடிந்தவரை நன்மையே நாம் பகிர வேண்டும். குறிப்பாகத் தனிப்பட்ட வாழ்க்கையைப் பகிர்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அது என்னுடைய கருத்தாக அமைகின்றது எனலாம். நான் குறிப்பாக என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடக்க கூடிய விஷயங்களைச் சமூக வலைத்தளங்களில் பகிர மாட்டேன். பொதுவான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டால் பல பிரச்சினைகளை நாம் தவிர்க்கலாம்.
இன்றைய இளைஞர்களுக்கு உங்களின் கருத்து என்ன??
இந்த நொடியை வாழ கற்றுக் கொள்ளுங்கள். முடிந்தவரை அனைத்தையும் நல்ல கண்ணோட்டத்தில் பார்க்க கற்றுக் கொள்வோம். பகை, வெறுப்பு ,கோபம் இவை அனைத்தையும் யாரிடமும் கொட்டி தீர்த்து விடக் கூடாது. நாம் நல்லது நினைத்து நல்லது செய்தால் நிச்சயம் நம்மை சுற்றியுள்ள அனைத்துமே நல்லதாகவே நடக்கும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *