இப்படிக்கு அண்ணாமலை!

top-news
FREE WEBSITE AD

வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களைப் பிடித்து தனித்துவமாக திகழும் கட்சியாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்கிறார் அக்கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை.நமக்காக அவர் வழங்கிய சிறப்பு நேர்காணல்.


கே:அரசியல் என்று முடிவு செய்ததும் நீங்கள் பாரதிய ஜனதா கட்சியை தேர்ந்தெடுத்தது ஏன்?


பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீது நான் வைத்திருக்கும் அபிமானம் தான் அதற்கு காரணம். தேசிய கட்சியில் இணைவதா மாநில கட்சியில் இணைவதா என்ற குழப்பம் எனக்குள் எழவில்லை. மோடி என்ற தனி மனிதன் பாரத திருநாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அரும்பாடு பட்டுக்கொண்டிருக்கிறார். அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாகத் தான் பாரதிய ஜனதா கட்சியில் என்னை இணைத்துக் கொண்டேன்.

கே:சட்டசபை தேர்தல் போட்டி அனுபவம், நாடாளுமன்றத் தேர்தல் போட்டி அனுபவம் எப்படிப் பார்க்கிறீர்கள்?

நாம் செய்யும் மக்கள் பணிக்கு மக்கள் கொடுக்கும் மதிப்பெண்ணாகத் தான் நான் தேர்தல் முடிவுகளை பார்க்கிறேன். ஒரே தேர்தலில் வெற்றிபெற்று மாநிலத்தில் ஆட்சியை பிடித்துவிடவேண்டும் என்ற ஆசை பலருக்கு உண்டு. ஆனால் அது எதார்த்தம் இல்லை. ஒவ்வொரு தேர்தலிலும் கட்சி பலப்பட்டுக்கொண்டிருக்கிறது. 3 சதவீத கட்சியாக இருந்த பாஜக இன்று 12 சதவீத வாக்குகள் கொண்ட கட்சியாக வளர்ந்துள்ளது. தனித்து நின்றால் திமுக இன்று 20 சதவீத வாக்குகள் மட்டுமே பெறுவார்கள். அந்த வாக்கு சதவீதத்தை காட்டிலும் அதிக வாக்குகளை வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

கே:தேர்தல் தோல்வி உங்களை பாதிக்கவில்லையா?

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 18.5 சதவீத வாக்குகளை பெற்றது. அதாவது 80 லட்ச தமிழக மக்கள் எங்கள் கூட்டணிக்கு வாக்களித்தனர். இது வெற்றிக்கு முதல் படி. தமிழக மக்களின் குரலாக ஒலிப்பதோடு எங்கள் கடமை முடிந்துவிட்டது என்று நினைக்காமல் அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் வரை தொடர்ந்து போராடும் ஒரு மக்கள் இயக்கம் தான் தமிழக பாரதிய ஜனதா கட்சி. அதை மக்களும் மெல்ல மெல்ல உணர தொடங்கியுள்ளனர்.

கே:திமுக பற்றி தொடர்ந்து குற்றச்சாட்டு சொல்லி வருகிறீர்கள், ஆதார ஆவணங்கள் வெளியீடுகள் என்று உங்களின் திமுக எதிர்ப்பு தமிழ்நாட்டில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக நீங்கள் நம்புகிறீர்களா?

இன்றைய இளைஞர்களுக்கு 50 வருடங்களுக்கு முன்பு அரசியல் எப்படி இருந்தது என்று தெரிந்து கொள்ள ஆர்வம் இல்லை. இன்று எங்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள் நாங்கள் செலுத்தும் வரி சரிவர பயன்படுத்தப்படுகிறதா என்பதே அவர்களது கேள்வியாக இருக்கிறது. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலகட்டத்தில் வளர்ந்த நாடுகளில் என்ன நடக்கிறது என்பதை அவர்கள் எளிதாகப் பார்த்து புரிந்துகொண்டு. இங்கு இருக்கும் ஆட்சியாளர்களை கேள்விகேட்க தொடங்கியுள்ளார்கள். இது ஓர் ஆரோக்கியமான மாற்றம்.

நாங்கள் திமுகவின் ஊழல்கள் குறித்து தகவல்கள் வெளியிடும் போதெல்லாம் இளைஞர்கள் அதை உற்று கவனிக்கிறார்கள். பீகார் மாநிலத்தை விட தமிழ்நாட்டின் பல மாவட்டங்கள் பின்தங்கியுள்ளது. தமிழகம் நம்பர் 1 மாநிலம் என்று தொலைக்காட்சியில் திமுகவினர் பேசும் போது, கூரை வீட்டில் இருக்கும் ஓர் இளைஞனுக்கு கோபம் வரத்தானே செய்யும். எங்கள் வாக்கு வங்கி உயர்வு அந்த கோபத்தின் வெளிப்பாடு.

5. முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா பற்றிய உங்கள் பார்வை?

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்குப் பின்னர் அதிமுக என்ற கட்சியை ஒருங்கிணைத்து வெற்றிப் பாதையில் நடத்திச் சென்ற பெருமைக்கு சொந்தக்காரர் செல்வி ஜெயலலிதா. அவரது ஆட்சிக் காலத்தில் தமிழக பெண்களின் முன்னேற்றத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தினார். ஆண்கள் சூழ் தமிழக அரசியல் சூழலில் ஓர் அறிவார்ந்த பெண்மணி வென்று காட்ட முடியும் என்பதை நிரூபித்தவர்.

கே: திராவிட ஆட்சியை மக்கள் புறக்கணிக்க எம்மாதிரியான முயற்சிகள் முன் எடுக்கப்பட்டிருக்கின்றன?

மக்கள் கடும் துயரத்தில் இருக்கிறார்கள். ஆட்சியாளர்கள் மேல் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். தற்போது நடக்கும் ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு எடுத்து சொன்னாலே போதும்.

கே: தொடர்ந்து மத்திய அரசு மீது திராவிட கட்சிகள் குறை கூறுகின்றன அதை எப்படி பார்க்கிறீர்கள்?

முந்தைய திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சி 10 ஆண்டுகள் மத்தியில் நடந்தது. அப்போது இல்லாத குறை இப்போது ஏன்? அரசியல் காரணங்களுக்காக திமுக சொல்வதையெல்லாம் ஏற்க மக்கள் தயாராக இல்லை.

கே:மாநிலத்திற்கு அதிக அதிகாரம் உங்கள் கருத்து என்ன?

கடந்த 10 ஆண்டுகளில் மாநிலங்கள் அதிக அதிகாரம் பெற மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. ஜிஎஸ்டி வருவாயில் சுமார் 60 விழுக்காடு மாநிலங்களுக்கு திரும்ப செலுத்தப்படுகிறது. மாநிலங்களுக்கான உரிமைகள்
என்று சொல்லப்படும் சட்டங்கள் எவற்றிலும் மத்திய அரசு தலையிடுவதில்லை. ஓர் ஆரோக்கியமான ஜனநாயக கட்டமைப்புடன் இந்தியா இன்று பயணித்துக் கொண்டிருக்கிறது. வெள்ளித் தட்டில் வைத்து தமிழகத்திற்கு நலத்திட்டங்களை மத்திய அரசு வழங்கியுள்ளது என்று திமுக பொருளாளரே கூறுகிறார்.

கே: திராவிட மாடல் பற்றிய உங்கள் பார்வை எப்படி?

தற்போது நடக்கும் ஆட்சியின் அவலங்களை பார்க்கும் போது Disaster Model என்று குறிப்பிட்டால் மிக பொருத்தமாக இருக்கும்.

கே: விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு எந்த அளவுக்கு உண்மை?

திமுக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வரவில்லை என்றால் மத்திய அரசின் விசாரணை அமைப்புகளை ஏவி விட்டு உங்கள் மொத்த சொத்துக்களை முடக்குவோம் என்று திமுகவை மிரட்டிய செய்திகளை நீங்கள் படித்திருப்பீர்கள். குழப்பத்தில் இருக்கும் திமுக. 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததற்கு இப்போது எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

கே: திராவிட கட்சிகள் இல்லாமல் தமிழ்நாட்டில் பாஜக அரசியல் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?

மாற்றம் ஒன்றே மாறாதது. ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியை தவிர தமிழகத்தை யாரும் ஆளமுடியாது என்ற காலகட்டம் இருந்தது. அது மாறவில்லையா அது போல் இதுவும் மாறும்!

கே: ஆட்சியில் பங்கு என்ற வாதத்திற்கு உங்கள் ஆதரவு உண்டா இல்லையா?

கண்டிப்பாக. மத்திய அரசின் அமைச்சரவையை பாருங்கள். நமது கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் சிறந்த பொறுப்புகளை பிரதமர் மோடி கொடுத்துள்ளார். அது தானே ஜனநாயகத்திற்கு அழகு. தேர்தல் வெற்றிக்கு மட்டும் கூட்டணி தேவை, ஆட்சி பொறுப்பெல்லாம் கொடுக்க முடியாது என்று திமுக சொல்வது வேடிக்கையானது.
2026ஆம் ஆண்டு தமிழகத்தில் கூட்டணி ஆட்சியே மலரும் என்பதே எங்கள் முழக்கம்.

கே: இட ஒதுக்கீடு இன்னும் எத்தனை ஆண்டுகள் தொடர வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

விளிம்பு நிலை மக்கள் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றம் பெறும் வரை தொடர வேண்டும்.

கே: ஆளுநர் மீதான அரசியல் விமர்சனங்களை எப்படி பார்க்கிறீர்கள்?

திமுக ஆட்சியில் இருக்கும் போதெல்லாம், ஆட்சியின் அவலத்தை திசை திருப்ப ஒரு பட்டியல் வைத்திருக்கிறார்கள். அதில் ஆளுநர் மீது வெறுப்பை உமிழ்வது இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

கே: இந்தி திணிப்பு என்பது உண்மைதானே?

இதற்கு முன்னர் குறிப்பிட்ட திசை திருப்பும் முயற்சிகள் பட்டியலில் முதல் இடத்தில இது தான் உள்ளது.

கே: தமிழகத்தில் தேர்தல் அணுகு முறையில் எந்த மாற்றத்தை நீங்கள் விரும்புகிறீர்கள்?

திருமங்கலம் ஃபார்முலா என்ற ஒன்றை தமிழகத்தில் புகுத்தி வாக்குக்கு காசு என்ற நடைமுறையை கொண்டுவந்தது திமுக. மக்களுக்கு உண்மையாக சேவை செய்ய விரும்பும் மக்கள் அரசியலுக்கு வர விரும்பாமல் ஒதுங்கி இருக்க காரணம் இதுவே. இது மாற வேண்டும். மாறும்.

கே: சமீபத்தில் டெல்லியில் நடந்த மலேசிய பிரதமர் - இந்திய பிரதமர் சந்திப்பு பற்றி உங்கள் பார்வை எப்படி?

மலேசியா மற்றும் இந்திய நட்புறவில் இன்னொரு மைல்கல் அந்த சந்திப்பு. மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை ஸ்தாபனம் செய்யப்படும் என்ற செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.

கே: உங்களின் மலேசிய பயணம் எப்போது அமையும்?

பல முறை பல நிகழ்ச்சிகளுக்கு அழைப்புகள் வந்தன. வருவதற்கான சரியான சந்தர்ப்பம் அமையவில்லை. கண்டிப்பாக விரைவில் வந்து நமது மலேசியா வாழ் தமிழ் சொந்தங்களை சந்திக்க மிக ஆவலுடன் உள்ளேன்.

உங்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *