1எம்டிபி நிறுவனம் வீழ்ச்சி குறித்து ஒவ்வொரு நாளும் வேதனைப்படுகிறேன்-நஜீப்!
- Muthu Kumar
- 25 Oct, 2024
கோலாலம்பூர், அக். 25-
1எம்டிபி நிறுவனம் படுவீழ்ச்சியைக் கண்டதற்காக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மலேசியர்களிடம் நிபந்தனையற்ற முறையில் நேற்று மன்னிப்பு கோரினார்.நான் பிரதமராகவும் நிதியமைச்சராகவும் இருந்த வேளையில் 1எம்டிபி நிறுவனம் மீளமுடியாத வீழ்ச்சியில் சிக்கியிருப்பது குறித்து ஒவ்வொரு நாளும் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்று அறிக்கையொன்றில் அவர் தெரிவித்தார்.அந்த அறிக்கையை நஜிப்பின் புதல்வர் நிஸார் கோலாலம்பூர் நீதிமன்றக் கட்டடத் தொகுதியின் வரவேற்பு மண்டபத்தில் வாசித்தார்.
"அந்த விவகாரத்திற்கு நான் மூளையாக இருந்து செயல்படவில்லை என்பது நீதிமன்ற விசாரணை உட்பட அண்மைய பல நிகழ்வுகளிலிருந்து தெரிய வந்துள்ளது என்றும் நஜிப் சொன்னார்.தலைமறைவாக இருந்துவரும் நிதியாளர் ஜோலோவுடன் சேர்ந்து தாம் சதிவேலை செய்யவில்லை என்பதும் தெரிய வந்திருக்கிறது என்றார் அவர்.
1எம்டிபி நிறுவனத்தில் எந்த அளவுக்கு பித்தலாட்டக்காரர்கள் மோசடி வேலைகளிலும் சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர் என்பதை அறிந்து பேரதிர்ச்சி அடைந்துள்ளேன். அந்த விவகாரம் தொடர்பில் அரசியல் ரீதியாக நான் ஏற்கெனவே தண்டிக்கப்பட்டு விட்டதால் சட்டப்படியான தண்டனைக்கும் நான் ஆளாகக்கூடாது என்றார் நஜிப். நான் செய்யாத, எனக்குத் தெரியாத எல்லா விஷயங்களுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறேன்.
இது அநீதியானது. நீதிவிசாரணையின் முடிவில் நான் குற்றமற்றவன் என தீர்ப்பளிக்கப்படுவேன் எனும் நம்பிக்கை உள்ளது என்றார். அவர் தமது தந்தையின் அந்த அறிக்கையை வாசித்த பிறகு நிஸார் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். 1எம்டிபி தொடர்பில் ஐந்து தனித்தனி விசாரணைகளை நஜிப் எதிர்கொண்டு வருகிறார். மொத்தம் 42 குற்றங்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *