விம்பிள்டன் பட்டத்தை தொடர்ந்து 2வது முறையாக வெல்லும் 21 வயதாகும் அல்காரஸ்!
- Muthu Kumar
- 15 Jul, 2024
2023ஆம் ஆண்டு விம்பிள்டன் இறுதிப்போட்டியில் ஜோகோவிச் - அல்காரஸ் மோதினர். இதில் GOAT வீரராக கருதப்பட்ட ஜோகோவிச்சை இளம் வீரரான அல்காரஸ் வீழ்த்தி புதிய சாதனை படைத்தார். 2019ஆம் ஆண்டு விம்பிள்டன் தொடரில் ரோஜர் ஃபெடரரை வீழ்த்திய ஜோகோவிச், அங்கிருந்த புற்களை தின்று தான் ஒரு GOAT என்று வெளிப்படையாக அறிவித்தார். அப்படியான வீரரை வீழ்த்தி அல்காரஸ் வென்றது பிரமிக்க வைத்தது.
இந்த நிலையில் மீண்டும் விம்பிள்டன் தொடரின் இறுதிப்போட்டியில் ஜோகோவிச் - அல்காரஸ் இன்று மோதினர். இதனால் கடந்த ஆண்டு அடைந்த தோல்விக்கு ஜோகோவிச் பதிலடி கொடுப்பாரா அல்லது விம்பிள்டன் பட்டத்தை அல்காரஸ் தக்க வைத்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்க ஆட்டம் தொடங்கிய நிலையில், ஜோகோவிச்சின் சர்வ்-களையே அல்காரஸ் எளிதாக தடுத்து புள்ளிகளை பெற தொடங்கினார்.
இதனால் முதல் செட்டை 6-2 என்ற அல்காரஸ் கைப்பற்றிய நிலையில், கண்மூடி திறப்பதற்கு 2வது செட்டையும் 6-2 என்ற கணக்கில் மீண்டும் கைப்பற்றினார். இதன்பின் ஆட்டம் 3வது செட்டிற்கு சென்றது. வழக்கமாக கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டிகளில் ஜோகோவிச் ஆட்டத்தின் பிற்பாதியில் தான் தனது சுயரூபத்தை வெளிப்படுத்துவார்.
அதற்கேற்ப 3வது செட் ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பு எகிறியது. இருவரும் சரிக்கு சமமாக விளையாடிய நிலையில், அல்காரஸ் 5-4 என்று முன்னிலை பெற்றார். அதன்பின் அடுத்தடுத்து 3 ஆட்டங்களை பெற்ற போது சாம்பியன்ஷிப் புள்ளியை எட்டுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் திடீரென ஜோகோவிச் முன்னிலை பெற்று 5-5 என்று ஆட்டத்தை மாற்றினார். பின்னர் ஆட்டம் 6-6 என்று மாறி, டை பிரேக்கருக்கு சென்றது.
டை-பிரேக்கரில் 7-4 என்ற கணக்கில் அல்காரஸ் வெற்றிபெற்றார். இதன் மூலமாக 6-2, 6-2 மற்றும் 7-6 என்ற கணக்கில் அல்காரஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். 21 வயதாகும் அல்காரஸ் வெல்லும் 4வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். அதுமட்டுமல்லாமல் விம்பிள்டன் பட்டத்தை தொடர்ந்து 2வது முறையாக வென்ற 4வது வீரர் என்ற சாதனையையும் அல்காரஸ் படைத்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *