குறைகிறது மலேசிய இந்தியர்களின் பிறப்பு விகிதம்- தமிழ்ப்பள்ளிகளுக்கு அச்சுறுத்தல்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப். 20-

2025, 2026ஆம் ஆண்டுக்கான புதிய பள்ளித் தவணை தொடங்கியுள்ள நிலையில் நாடெங்கிலும் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் பதிவு குறித்து மலேசிய தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள தரவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2023, 2024 ஆம் ஆண்டுகளில், 11,712 ஆக இருந்த முதலாம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை, 2025 மற்றும் 2026ஆம் ஆண்டில் 11,021ஆக குறைந்துள்ளது.நாடு முழுவதும் 526 தமிழ்ப்பள்ளிகள் இருக்கும் பட்சத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களின் இக்குறைந்த அளவிலான பதிவானது, தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் குறித்த அச்சுறுத்தலை, சமுதாயத்தில் ஏற்படுத்தி உள்ளதாக மலேசியத் தமிழ் அமைப்புகளின்  செயலாளர் முனைவர் குமரன் வேலு இராமசாமி பெர்னாமா செய்திகளிடம் கூறினார்.

தமிழ்ப்பள்ளி மீதான பற்றுதல், பெற்றோர் மற்றும் பிள்ளைகளின் பாதுகாவலரிடம் குறைந்திருக்கும் காரணத்தினால் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை சரிவு கண்டுள்ளதாக பலரும் நினைக்கின்றனர்.உண்மையில் இந்தியர்களின் பிறப்பு விகிதம் படிப்படியாக குறைந்து வருவதே இதற்கான அடிப்படைக் காரணம் என்று விவரித்த முனைவர் குமரன் வேலு, தமிழ்ப்பள்ளி மட்டுமின்றி சீனப் பள்ளிகளிலும் இதே நிலைமை நீடிப்பதாக கூறினார்.

"2018ஆம் ஆண்டு 21.596 இந்தியக் குழந்தைகள் மட்டுமே நாட்டில் பிறந்திருந்தனர். ஏழாண்டுகளுக்குப் பிறகு அதாவது 2025ஆம் ஆண்டு 11, 021 பேர் மட்டுமே தமிழ்ப்பள்ளிகளில் பதிவுசெய்திருந்தனர். அது 51.1 விழுக்காடாகும். இதன் அடிப்படையில் 2000-இல் 35,329 இந்தியக் குழந்தைகள் பிறந்துள்ளனர்," என்று அவர் தகவல் கூறினார்.இத்தாவுகளின் அடிப்படையில் கடந்த 20 ஆண்டுகளில் இந்தியர்களின் பிறப்பு எண்ணிக்கை ஏறக்குறைய 14,000 ஆக குறைந்து விட்டதாக அவர் தெரிவித்தார்.

இதனிடையே, மலாய், சீனப்பள்ளிகள் மட்டுமின்றி தனியார் மற்றும் அனைத்துலக பள்ளிகளிலும் ஆண்டுதோறும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் மறுக்க முடியாது.இது வருத்தமளிக்கும் தகவலாக இருப்பினும், மற்ற மொழிப் பள்ளிகளைக் காட்டிலும் தமிழ்ப்பள்ளிகளில், இவ்வாண்டு இந்திய மாணவர்கள் அதிகமாக முதலாம் ஆண்டில்,
பதிவு செய்துள்ளது தாய்மொழி பள்ளிகள் மீது பெற்றோர் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுவதாகவும் முனைவர் குமரன் வேலு குறிப்பிட்டார்.

“இதற்கு தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும் ஆர்வலர்களும் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவற்றுடன் தமிழ்ப்பள்ளிகளில் கல்வித் தரம் ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. பள்ளியின் தரத்தை உயர்த்துவதற்கும் மாணவர்களை சிறந்த கல்வியறிவாளர்களாக உருமாற்றுவதற்கும் பள்ளி நிர்வாகத்தினர் பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர், என்றார் அவர்.

குறிப்பாக, தமிழ்ப்பள்ளிகளின் மகத்துவத்தை அறிந்து பல பெற்றோர், மற்ற மொழிப் பள்ளிகளில் சேர்த்த தங்களின் பிள்ளைகளை மீண்டும் தமிழ்ப்பள்ளிக்கு மாற்றியிருப்பது. அவர்களின் மாறுதலைப் புலப்படுத்துவதாக அவர் தெரிவித்தார். சவால்மிக்க உலகில், தங்களின் பிள்ளைகள் பல மொழிகளில் கற்றுத் தேர வேண்டும், சிறந்த வேலை வாய்ப்பைப் பெற வேண்டும், அதற்கு தரமான கல்வி அவசியம் என்பதில் பெற்றோர் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.

அதேவேளையில், தாய்மொழி மீதான பற்றினைக் கொண்டிருக்கும் பெற்றோரும் அத்தகைய தரத்தினை எதிர்ப்பார்ப்பதை மறுக்க முடியாது.எனவே, அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் தமிழ்ப்பள்ளிகள் இன்னும் தீவிரமாக களமிறங்க வேண்டும் என்று முனைவர் குமரன் வேலு கேட்டுக் கொண்டார்.
அதோடு, தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் தேசிய மொழியில் உரையாடுவதிலும், எழுதுவதிலும் பின்தங்கி இருக்கின்றனர் என்ற பிம்பத்தை உடைக்கவும் தமிழ்ப்பள்ளிகள் முனைய வேண்டும் என்று அவர் ஆலோசனைக் கூறினார்.

அனைத்துலக பள்ளிகள், தனியார் பள்ளிகளின் தரத்திற்கு ஈடாக, தமிழ்ப்பள்ளிகளும் கல்வி, வளர்ச்சி, புத்தாக்க சிந்தனையில் முன்னேற்றம் கண்டால், வரும் ஆண்டுகளில் வகுப்பறைகள் பற்றாத அளவிற்கு மாணவர்களின் எண்ணிக்கை உயரும் என்று முனைவர் குமரன் வேலு நம்பிக்கைத் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *