பிரிக்ஸ் பங்காளி நாடாக அங்கீகரிக்கப்பட்டது மலேசியா-பிரிக்ஸ் இன்போ!
- Muthu Kumar
- 25 Oct, 2024
கோலாலம்பூர், அக். 25
பதின்மூன்று பிரிக்ஸ் பங்காளி நாடுகளில் ஒன்றாக மலேசியா அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், மலேசியா இன்னும் ஒரு முழு உறுப்பினராக அங்கீகரிக்கப்படவில்லை என்று, எக்ஸ் தளத்தில் பிரிக்ஸ் இன்ஃபோ அறிவித்துள்ளது.
மலேசியாவைத் தவிர்த்து, அல்ஜீரியா, பெலாரஸ், பொலீவியா, கியூபா, இந்தோனேசியா, கஸகஸ்தான், நைஜீரியா, தாய்லாந்து, துருக்கி, உகாண்டா, உஸ்பெகிஸ்தான், வியட்னாம் ஆகிய இதர 12 நாடுகளும் பிரிக்ஸ் பங்காளி நாடுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
ரஷியாவின் கஸான் என்ற நகரில் தற்போது நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டில், மலேசியாவைப் பிரதிநிதித்து, பொருளாதாரத்துறை அமைச்சர் ரஃபிஸி ரம்லி கலந்து கொண்டுள்ளார். பிரிக்ஸ் அரசாங்கங்களுக்கு இடையிலான அமைப்பில் இணைவதற்கான விண்ணப்பத்தை, ரஷியாவிடம் மலேசியா சமர்ப்பித்திருந்ததை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடந்த ஜூலை 28ஆம் தேதி உறுதிப்படுத்தி இருந்தார்.
தொடக்கத்தில் பிரேசில், ரஷியா, இந்தியா மற்றும் சீனா ஆகியவை இடம்பெற்றிருந்த பிரிக்ஸ், வளர்ந்து வரும் பொருளாதாரத் துறைகளுக்கான ஓர் ஒத்துழைப்புத் தளமாக கடந்த 2009ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 2010ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்கா அதில் சேர்ந்தது.அதன் பின்னர் ஈரான், எகிப்து, எத்தியோப்பியா மற்றும் ஐக்கிய அரபு சிற்றரசு ஆகிய நாடுகளுக்கும் பிரிக்ஸ் விரிவுபடுத்தப்பட்டது.
உலகின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 40 விழுக்காட்டை பிரிக்ஸ் பிரதிநிதிக்கின்றது. இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி கிட்டத்தட்ட ஜி7 நாடுகளின் பொருளாதார வலிமைக்கு 26 லட்சத்து 60 ஆயிரம் கோடி அமெரிக்க டாலருக்கு அல்லது 26.2 விழுக்காடு ஈடான மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டிருக்கிறது.
உலகின் முன்னிலை பொருளாதார நாடுகளாக விளங்கும் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய ஏழு நாடுகள் ஜி7 அமைப்பில் இடம் பெற்றிருக்கின்றன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *