சித்தியவான் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் அமுதே தமிழே மற்றும் கவிதைகளின் வெளியீடு !
- Muthu Kumar
- 22 Nov, 2024
ஆர்.கிருஷ்ணன்
மஞ்சோங், நவ.22-
என்னுடைய எண்ணப் பதிவுகளை நூல் வடிவில் கொண்டு வந்து மற்றவர்களும் அதனை படித்து இன்புற வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக கண்ணதாசனின் திரையிசை இலக்கியம், அமுதே தமிழே மற்றும் கவிதைகளின் தொகுப்பு நூலை இங்குள்ள சித்தியவான் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் நூலாசிரியர், பேராசிரியர் டாக்டர் வ.ஜெயபாலன் ஏற்புரையில் தம் கருத்தை பதிவு செய்தார்.
எனக்கு சக்தியும், தன்முனைப்பும், விடாமுயற்சி எண்ணத்தையும் உருவாக்கி சிறப்பாக செயல்பட ஊக்குவித்த என் பெற்றோர்களுக்கு முதலில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். அவர்கள் வளர்ப்பு மற்றும் என் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு அவர்களின் ஆவலை இயன்றளவு பூர்த்தி செய்துள்ளேன் என்று அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மஞ்சோங் மாவட்டம் சித்தியவான் நகரிலுள்ள மருத்துவமனையில் முதல் முறையாக மருத்துவர் பணிக்கு அமர்த்தப்பட்டேன். அதன் அடிப்படையில் இங்குள்ள இந்திய மக்களுடன் தொடர்புகள் வளம் பெற்றன. பின், மகப்பேறு மருத்துவப் படிப்பை முடித்த பின் மீண்டும் இந்த சித்தியவான் நகருக்கு வர வேண்டிய நிலை உருவானது. அதன் அடிப்படையில் என் வாழ்வில் தொடங்கும் எந்தவொரு நிகழ்ச்சியும் இந்த மஞ்சோங் மாவட்டத்தில்தான் தொடங்குகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில், மூவர் வாழ்த்துரை வழங்கினர். அவர்களில் முனைவர் சேகர் நாராயணன் மஞ்சோங் மாவட்டத்தை சேர்ந்த 11 தமிழ் இயக்கங்கள் ஒன்றிணைந்து இந்நூல் வெளியீட்டு விழாவில் ஆதரவை வழங்கியுள்ளன. ஆனால், 15 தமிழ்ப்பள்ளிகள் இவ்வட்டாரத்தில் இருந்த போதும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் வருகை சுணக்கமாகவே இருந்தது.இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நூல் வழங்க திட்டமிடப்பட்டது. இருப்பினும், மாணவர்கள் வருகை விரல் விட்டு எண்ணும் அளவில் இருந்துள்ளதை அவர் கோடிக்காட்டினார்.
இந்நிகழ்வில் பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஙே கூ ஹாமின் சிறப்பு அதிகாரி தினகரன் அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் இலவசமாக இந்நூலை வழங்கினார். அவரின் உதவிக்கு ஈப்போ அருணகிரிநாதர் மன்ற அறவாரியத்தினர் தங்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.
இந்நிகழ்வின் நிறைவுவிழாவில் தேவகோட்டை இராமநாதனின் சிறப்புரை அனைவரையும் கவர்ந்தது.அத்துடன், நூலாசிரியர் தம் நூல்களை பிரமுகர்களிடம் வழங்கினார். முதல் நூலை மருத்துவர் பத்மநாதன் பெற்றுக்கொண்டார்.ரகுராமன் பாடிய கண்ணதாசனின் தத்துவ பாடல்கள் நிகழ்வின் முத்தாய்ப்பாக அமைந்தது. இரவு உணவுடன் நிகழ்வு முடிவுற்றது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *