நாட்டின் நலனுக்கு எதிராக நான் எப்போதுமே செயல்பட்டதில்லை- நஜீப்!
- Muthu Kumar
- 22 Oct, 2024
கோலாலம்பூர், அக். 22-
நாட்டின் நலனுக்கு எதிராகத் தாம் செயல்பட்டதாகக் கூறப்படுவதை முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மறுத்துள்ளார். பிரதமர் பொறுப்பில் இருந்தபோது தமது சட்டப்பூர்வக் கடமைகளை உளப்பூர்வமாகவும் விவேகமுடனும் மேற்கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனம் தொடுத்துள்ள 118 கோடி டாலர் (500 கோடி வெள்ளி) சிவில் வழக்கில் சாட்சியமளித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
அரசு நிர்வாகத்தின் தலைவர் எனும் வகையில் கூட்டரசு அரசமைப்புச் சட்டத்தின் மீது எடுத்த உறுதிமொழிக்கு ஏற்பவே தாம் செயல்பட்டு வந்துள்ளதாகவும் நஜிப் கூறினார்.நஜிப் கடந்த 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2018ஆம் ஆண்டு மாதம் வரை பிரதமர் பொறுப்பில் இருந்தார். நாட்டின் நலனுக்கு எதிராக நான் எப்போதுமே செயல்பட்டதில்லை என்று எஸ்ஆர்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் சுபோ யாசினைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் குர்தியால் சிங் நிஜாரின் குறுக்குவிசாரணையின்போது நஜிப் குறிப்பிட்டார்.
2011ஆம் ஆண்டுக்கும் 2012 ஆம் ஆண்டுக்கும் இடையில் அந்நிறுவனம் கேடபிள்யூஏபி நிறுவனத்திடமிருந்து 400 கோடி வெள்ளியை கடனாகக் பெற்றது. அதில் 360கோடி வெள்ளி சுவிஸ் வங்கிக் கணக்கிற்குப் பரிமாற்றம் செய்யப்பட்டது. அப்பணம் தற்போது முடக்கப்பட்டுள்ளது.
எஸ்ஆர்சி தொடுத்துள்ள சிவில் வழக்கில் நஜிப் முதல் பிரதிவாதியாகவும் அதன் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி நிக் ஃபைஸால் அரிப் கமால் இணைப் பிரதிவாதியாகவும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.நஜிப் மற்றும் நிக் ஃபைஸால் ஆகியோரின் முறைகேடான செயல்களினால் எஸ்ஆர்சி நிறுவனத்திற்கு பெரும் பணஇழப்பு ஏற்பட்டது என்றும் அதற்கு அவர்கள் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அந்நிறுவனம் தனது வழக்குமனுவில் குறிப்பிட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *