ஆட்டிசம் பிள்ளைகளுக்கான முதலாவது பள்ளி, ஜொகூர் பாருவில் உள்ள பூலாய் நகரில்-அஸ்னான் தமின்!
- Muthu Kumar
- 28 Oct, 2024
ஜொகூர் பாரு, அக். 28 -
சிறப்பு ஆட்டிசம் பிள்ளைகளுக்கான, நாட்டின் முதலாவது ஆட்டிசம் பள்ளி, ஜொகூர் பாருவில் உள்ள பூலாய் நகரில் கட்டப்பட விருப்பதாக, மாநில கல்வி மற்றும் தகவல் குழுத் தலைவர் அஸ்னான் தமின் தெரிவித்துள்ளார்.இதன் தொடர்பான ஒரு பரிந்துரையை, மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹஃபிஸ் காஸி கடந்த ஆண்டில் கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக்கிடம் முன்வைத்திருந்ததாக, அஸ்னான் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில், தங்கள் பிள்ளைகள் தொடர்ந்து கற்றலை மேம்படுத்திக் கொள்ளவும் சுய பராமரிப்புத் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் முடியும் என்று நம்பும் ஆட்டிசம் பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு அப்பள்ளியின் கட்டுமான அறிவிப்பு ஒரு சிறந்த "பரிசாக” அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.“அப்பள்ளிக் கட்டுமானம் குறித்த மேல்தகவல்களை கல்வி அமைச்சு வழங்கும்" என்று நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர் தெரிவித்தார்.
ஆட்டிசப் பிள்ளைகளுக்காக ஜொகூர் பாருவிலும் சபாவின் துவாரானிலும் இரண்டு ஆட்டிசம் பள்ளிகள் கட்டப்படும் என்று, இம்மாதம் 18-ஆம் தேதி மக்களவையில், 2025ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை தாக்கல் செய்தபோது, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருந்தார்.
அவ்விரு பள்ளிகளின் கட்டுமானத்திற்காக மத்திய அரசாங்கம் மொத்தம் 30 கோடி வெள்ளியை ஒதுக்கி இருப்பதாக, நிதி அமைச்சருமான அன்வார் அப்போது அறிவித்திருந்தார்.நாட்டில் ஆட்டிசம் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதைக் கருத்தில் கொண்டு இத்தகைய பள்ளி அவசியமான ஒன்று என்று, சிறப்புக் குழந்தைகளுக்கான ஒரு மையத்தின் மருத்துவ இயக்குநர் சித்தி நோராய்சிக்கின் ஜசுலி தெரிவித்தார்.
சமூகநல இலாகாவின் புள்ளி விவரங்கள்படி, நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் ஆட்டிசம் குழந்தைகளின் எண்ணிக்கை அபரிமிதமாக அதிகரித்திருப்பதை சுட்டிக் காட்டிய அவர், கடந்த ஆண்டில் 53,323 பேர் ஆட்டிசம் நோய்க்கு ஆளாகி இருப்பதாகத் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *