காவடி செய்யும் கலையை இளைஞர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்

- M.ASAITHAMBY -
- 10 Feb, 2025
தைப்பூசம், ஆடிக்கிருத்திகை ஆகிய நாட்களில் முருகனுக்கு ஏராளமான பக்தர்கள் காவடி சுமந்து வருவது உண்டு. இந்த காவடி நேர்த்திக்கடனுக்கு அப்படி என்ன தனிச்சிறப்பு, கா அடி என்பது காவாகச் சுமக்கப்படும் (முருகப் பெருமானின்) திருவடி. கா என்பது இருபுறமும் தொங்கும் சுமை. ‘காவடியாட்டம்’ என்பது ‘காவடி’ ‘ஆட்டம்’ என்னும் இருசொற்களின் சேர்க்கையால் உருவானது.
கடந்த 8 வருடங்களாகத் தைப்பூசத்திற்கு பக்தர்களின் நேர்த்திக்கடன்களைத் தீர்க்க காவடிகளைச் செய்து வருவதாக செராஸ் பெர்டானாவைச் சேர்ந்தவரும் ஹனுமான் ஆலய சங்கத்தின் தலைவர் பிரித்திங்கரா பஜன் குழுவின் தோற்றுநருமான யஷ்வின் ராஜ் தெரிவித்தார்.
முதலில், காவடி எடுக்கும் ஆர்வம் என் தந்தை மூலம்தான் எனக்குத் தோன்றியது எனலாம். என் தந்தைதைதான் அவருக்கு 14 வயது இருக்கும் பொழுதிலிருந்து காவடிகளை எடுத்து வந்தார். அவருக்குத் தற்பொழுது 57 வயதாகிறது. 10 வருடத்திற்கு முன்பு வரை அவர் காவடிகளை எடுத்து வந்தார். ஒரு விபத்தில் கால்களை இழந்ததால் அதிலிருந்து அவர் காவடி எடுப்பதில்லை. அவரைத் தொடர்ந்து, நான் காவடிகளை எடுக்க ஆரம்பித்தேன்.
திருவிழா சமயங்களில் யாரேனும் காவடிகளைச் செய்தால் அவர்களுக்கு எப்பொழுதும் உதவுவேன். அதன் வழி, காவடிகளை எவ்வாறு செய்வது என்பதனை கற்றுக் கொண்டதோடு அறிவுரைகளையும் பெற ஆரம்பித்தேன். அதன் பிறகே, சுயமாகவே காவடிகளைச் செய்யலாம் என்ற ஆர்வம் தோன்றி அதில் ஈடுபட்டேன். செய்யும் காவடிகளை நான் மட்டும் உபயோகிக்காமல் அதனை பக்தர்களிடத்தில் வாடகைக்கும் விட ஆரம்பித்ததாக யஷ்வின் ராஜ் கூறினார்.
பணத்தை முதன்மைப்படுத்தாமல் மக்களுக்காக எங்களின் ஆர்வம் ஆசைக்காக மட்டுமே இந்தக் காவடிகளைச் செய்து கொடுத்து வருகிறோம். பொதுவாகவே காவடிகளை வாடகைக்கு எடுப்பது என்றால் 800 வெள்ளி முதல் 1000 வெள்ளி வரையில் வரும். ஆனால், நாங்கள் 500 வெள்ளி முதல் 550 வெள்ளி வரை மட்டுமே காவடிகளை வாடகைக்குக் கொடுக்கின்றோம். இடச் செலவு, போக்குவரத்து செலவுகள் ஆகியவற்றின் காரணமாகத்தான் நாங்கள் இந்த வாடகையையும் வாங்குகின்றோம். இல்லையேல், இதைவிட குறைவாகத்தான் இருக்கும். காவடிகளைச் செய்ய இளையோர்கள் குறிப்பாக மலேசிய கராத்தே வீரர்கள் அதிகமானோர் இந்தக் குழுவில் இணைந்து செயல்படுகின்றனர்.
ஒவ்வொரு நாளும் எங்களுக்குப் புதிய விஷயத்தைக் கற்றுத் தருகிறது எனலாம். அனைவரும் அனைத்து வேலைகளையும் பிரித்து செய்வோம். ஒரே வேலையைச் செய்யாமல் அனைத்தையும் செய்து பழகுவோம். மயில் செய்வது, பலகைகளை வெட்டுவது, வர்ணம் தீட்டுவது போன்ற வேலைகளைச் செய்வோம். வரும் காலங்களில் அனைவரும் ஒரு காவடியைத் தயாரிக்க வேண்டும் என்றெல்லாம் என்னுடைய குழுவினர்களிடம் நான் கூறுவேன் என்று யஷ்வின் சொன்னார்.
அதுமட்டுமல்லாமல், அடுத்த வருடம் இலவசமாக 100 முதல் 150 பால் காவடிகளைச் செய்து குழந்தைகளுக்குக் கொடுக்க இலக்கு கொண்டுள்ளதாக யஷ்வின் கூறினார். என்னுடைய குழுவில் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் காவடி செய்வதற்கு இது ஓர் அரிய வாய்ப்பாக அமைவதோடு குழந்தைகளிடையேயும் காவடிகளைப் பற்றிய நல்ல விழிப்புணர்வு ஏற்படக்கூடும்.
தைப்பூசத்தினத்தன்று காவடி எடுப்பது முருகனுக்கு உகந்த செயலாகும். நாம் முருகனுக்காகக் காவடி எடுப்பது அவருக்கும் நமக்கும் உள்ள உறவினை வெளிப்படுத்தும் ஓர் உன்னத செலாகும் என நான் கருதுகிறேன். என்னைப் பொறுத்தமட்டில் காவடி எடுப்பதும் காவடி செய்வது மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் தருகிறது. குறிப்பாக, நாம் செய்த காவடியைப் பக்தர்கள் தங்களின் நேர்த்திகடன்களைச் செலுத்த உபயோகிப்பது எப்பொழுதும் மட்டற்ற மகிழ்ச்சியையே அளிக்கும்.
காவடிகளைத் தயாரிப்பது எளிதான விஷயமும் அல்ல. அதில் பல சவால்களை நாம் எதிர்கொள்வோம். காவடிகளைச் செய்யும் பொழுது தூக்கமின்மை, நேரப் பற்றாக்குறை போன்ற தடங்கல்களை நாம் எதிர்கொள்வோம். அனைவருக்கும் முதன்மை வேலை என்ற ஒன்று இருக்கும். அதனையும் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். அதனிடையேதான் நேரத்தை ஒதுக்கி காவடிகளைச் செய்ய வேண்டும்.
அதுமட்டுமல்லாமல், போட்டியும் பொறாமையும் இதில் அதிகம் உண்டு. காவடிகளை விலை குறைவாக வாடகைக்கு விடுவதைக்கூட சிலர் கேட்டு பிரச்சினை செய்வர். தைப்பூச சமயத்தில் காவடிகளை வாடகைக்கு விடுவது, அதனை திரும்ப பெறுவது ஆகிய வேலைகளும் அதிகம் இருக்கும். சரியான நேரத்தில் தூங்கவும் உணவு உண்ணவும் கடினமாக இருக்கும்.
ஆனால், காவடிகளைச் செய்வதை நாங்கள் தொழிலாகக் கருதாமல் ஆர்வமாகவும் பிடித்த ஒரு விஷயமாகச் செய்வதனால் அதன் களைப்பு தெரியாது. அதேபோல்தான், நாங்கள் மக்களுக்காக விலை குறைத்து செய்வதன் பலன் முருகனே அறிந்த விஷயமாகும்.
என்னுடன் உள்ள இந்த கலை, தகவல்கள் அனைத்தும் இன்றைய இளைஞர்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் அதிகம் உண்டு. காவடிகள் செய்வதில் மட்டுமல்லாமல் பஜனை குழுவிலும் அதிக இளைஞர்கள் ஈடுபட வேண்டும். இளைஞர்கள் ஆர்வத்தோடு வந்தால் மட்டுமே இவை அனைத்தையும் கற்றுக் கொள்ள முடியும். ஆர்வமில்லாமல் வந்தால் அதில் பலன் இல்லை. இது மக்கள்ளிடையே குறிப்பாக இளைஞர்களிடையே கொண்டு சேர்ப்பதற்கு சமூக ஊடகங்கள் பெரிதும் துணை புரிகின்றன. இதர விஷயங்களை பகிர்வதற்குப் பதிலாக இத்தகைய அறிவுசார் தகவல்களை மக்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்தால் இன்னும் பலருக்கு இது தெரிய வரும்.
இன்று காவடி எடுப்பது, காவடி செய்வது என்று காவடியில் ஆர்வமாக இருக்க எனக்குத் துணையாக இருந்ததும் இருப்பதும் என்னுடைய தந்தைதான். அவருக்கு நான் நன்றி கூற கடமைபட்டுள்ளேன். காவடியை எவ்வாறு முறையாக எடுக்க வேண்டும், அதன் முக்கியத்துவம் என்ன என்பதையெல்லாம் என்னுடைய தந்தைதான் எங்களுக்குக் கற்று தந்துள்ளார். நாங்கள் வேலைக்குச் செல்லும் நேரம் கூட அவர் விடியற்காலை வரை செய்து கொண்டிருப்பார்.
அதன் பிறகு, என்னுடைய பஜனை குழுவினருக்கு நான் நன்றி கூற வேண்டும். அதோடு, பூ காவடி ஜெகா, சுரேஷ் இருவருக்கும் எனது நன்றி. ஏனென்றால், அவர்கள் எப்பொழுதும் எனக்கு உதவிகளை வழங்கி வருவதோடு ஆலோசனைகளையும் வழங்குவர். காவடிக்கு தேவையான மின் விளக்குகள், அலங்கார பொருள்களை வழங்கும் டாக்டர் காவடி அவர்களுக்கு எனது மிகப் பெரிய நன்றிகள். கம்போங் பாண்டான் காளி கோவிலுக்கும் எனது நன்றி. ஒவ்வொரு காவடியையும் எவ்வாறு செய்வது என்று அவர்களிடதிலிருந்துதான் கற்றுக் கொண்டேன். அதுமட்டுமல்லாமல், என்னோடு இதுவரை பயணித்த குடும்ப உறவுகள், நண்பர்கள், மலேசிய கராத்தே குழுவைச் சேர்ந்த சூரியா, கிரி, தேவேந்திரன், பவித்ரன் அதோடு ரோஷன், கௌதம், சர்வின், நாகேன், என் தம்பி டேஷன் ராஜ் அனைவருக்கும் இவ்வேளையில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.



Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *