வீட்டுக் காவல் மசோதாவுக்கும் நஜிப்புக்கும் தொடர்பே இல்லை-ஃபாமி பாட்சில்!
- Muthu Kumar
- 26 Oct, 2024
புத்ராஜெயா, அக். 26-
சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிற்காகவே, வீட்டுக் காவல் மசோதா பரிந்துரைக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுவதை அரசாங்கம் மறுத்திருக்கிறது. உண்மையில் வீட்டுக் காவல் மசோதாவுக்கும் நஜிப்புக்கும் தொடர்பே இல்லை என்று கூறப்பட்டுள்ளது.அம்மசோதா எந்த ஒரு தனி நபருக்காகவும் பரிந்துரைக்கப்படவில்லை. மாறாக, அரசாங்கம் தண்டனைக்குரிய நீதிமுறையை மறுசீரமைப்பு நீதி முறைக்கு மாற்றியமைப்பதற்காக அவ்வாறு பரிந்துரைத்திருப்பதாக, அரசாங்கப் பேச்சாளர் ஃபாமி பாட்சில் தெரிவித்தார்.
“பெரும்பாலான நாடுகள் மறுசீரமைப்பு நீதி முறையைப் பின்பற்றி வருகின்றன. நாங்களும் அந்த இலக்கை நோக்கித்தான் செயல்படுகின்றோம் என்று, தொடர்புத்துறை அமைச்சருமான ஃபாமி புத்ராஜெயாவில் நேற்று நடந்த வாராந்திர செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.இம்மசோதா குறித்த ஆய்வு கடந்த ஆண்டு முதலே தொடங்கப்பட்டு விட்டதாகவும் அதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்."சிறைச் சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக கூடிவிட்டதும் அத்தகைய ஆய்வுக்கான காரணங்களில் அடங்கும் என்றும் ஃபாமி கூறினார்.
வீட்டுக் காவல் சட்டத் திருத்த மசோதா, அடுத்த ஆண்டில் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கடந்த சனிக்கிழமை கூறியிருந்தார்.உள்துறை அமைச்சு, மக்களவையில் தாக்கல் செய்வதற்கு முன்னர், சட்டத்தில் திருத்தம் செய்யும் செயலில் தற்போது சிறைச்சாலை இலாகாவும் தேசிய சட்டத்துறை இலாகாவும் ஈடுபட்டிருக்கின்றன.
புதிய சட்டத்தின் வழி, நடப்பில் உள்ள பரோல், அனுமதியுடனான விடுதலை மற்றும் கட்டாய வரவு உத்தரவு ஆகிய மூன்று பிரிவுகள் அடிப்படையில், சிறைச்சாலைகளில் விதிமுறைகளை மாற்றுமாறு சிறைச்சாலை தரப்பினருக்கு அமைச்சர் உத்தரவிட முடியும். ''இந்த மூன்று பிரிவுகளுக்கான கூடுதல் விதி முறைகளில் வீட்டுக் காவலும் சம்பந்தப்பட்டிருக்கும். அதற்காக சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டால் அதற்கு பதிலாக புதிய சட்டம் உருவாக்கப்படும்.
இதற்கு அமைச்சரவை கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்துவிட்டது. அதற்கான பணியில் சிறைச்சாலை இலாகாவும் தேசிய சட்டத்துறையும் தற்போது ஈடுபட்டுள்ளன. திட்டமிட்டபடி அனைத்தும் சுமுகமாக நடந்து முடிந்தால், இந்த சட்டத் திருத்த மசோதா அடுத்த ஆண்டில் மக்களவையில் தாக்கல் செய்யப்படும்" என்று சைஃபுடின் தெரிவித்திருந்தார்.கடந்த 18ஆம் தேதி, 2025ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்திருந்தபோது இது குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *