ஒரு பெண்ணாகவே பிறந்து, வளர்ந்து ஒலிம்பிக்கில் தங்கம் வென்றுள்ளேன்! இமான் கலீஃப்!
- Muthu Kumar
- 10 Aug, 2024
பெண்ணாகவே வாழ்ந்தேன்.. பெண்ணாகவே ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளேன்.. அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம் என்று இமான் கலீஃப். கூறியுள்ள கருத்து ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ எடைப் பிரிவில் சீனாவைச் சேர்ந்த நட்சத்திர வீராங்கனை யாங் லியூவை 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி அல்ஜீரியாவைச் சேர்ந்த இமான் கலீஃப் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். அல்ஜீரியாவைச் சேர்ந்த இமான் கலீஃப் ஒரு பெண்ணே அல்ல, அவர் ஒரு ஆண் என்று இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா கரிணி குற்றம் சாட்டியிருந்தார்.
46 வினாடிகளில் போட்டியில் இருந்து வெளியேறி கரிணி இப்படியொரு குற்றச்சாட்டை வைத்தது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. ஆனால் தன் பாலினம் குறித்து சந்தேகம் எழுப்பியவர்களுக்கு உடனடியாக பதில் அளிக்காமல், தனது வெற்றியின் மூலம் மறக்க முடியாத பதிலடியை கொடுத்துள்ளார் இமான் கலீஃப்.
இந்த வெற்றிக்கு பின் இமான் கலீஃப் பேசுகையில், கடந்த 8 ஆண்டுகளாக ஒலிம்பிக் பதக்கத்தை வெல்வது மட்டுமே எனது கனவாக இருந்தது. இப்போது நானும் ஒலிம்பிக் சாம்பியன்.. தங்கப் பதக்கம் வென்றுள்ளேன் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு ஆதரவாக பாரிஸில் உள்ள அனைத்து அல்ஜீரியா மக்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இந்த வெற்றியை அல்ஜீரியா மக்களுக்கும், என் குழுவினருக்கும் அர்ப்பணிக்கிறேன்.
எனது வெற்றியால் அல்ஜீரியாவில் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நம்புகிறேன். நாம் அனைவரும் ஒலிம்பிக்கில் பங்கேற்பதே விளையாட்டு வீரர்களாக திறமையை வெளிப்படுத்துவதற்கு தான். மீண்டும் இதுபோன்ற தாக்குதல்கள் யாருக்கும் நடக்காமல் இருக்க வேண்டும். இந்த ஒலிம்பிக் தொடரில் பங்கேற்க நான் முறையாக தகுதிபெற்றுள்ளேன். மற்ற பெண்களை போல் நானும் ஒரு பெண் தான்.
ஒரு பெண்ணாகவே பிறந்தேன்.. பெண்ணாகவே வளர்ந்தேன்.. பெண்ணாக தான் பதக்கம் வென்றுள்ளேன்.. என்னை எதிரியாக நினைக்கும் சிலரால் இந்த வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை. இந்த வெற்றிக்காக 8 ஆண்டுகளாக கடினமாக உழைத்துள்ளேன். 8 ஆண்டுகளாக தூக்கம் இழந்து பயிற்சி செய்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *