இந்திய மாணவர்களுக்காக பத்துக் கோடி வெள்ளி நிதி அளிப்பீர்-ஷாரெட்ஸான்.

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக். 25-
உயர்கல்வியை மேற்கொள்ள முனையும் இந்திய மாணவர்களுக்காக பத்துக் கோடி வெள்ளியில் சிறப்புக் கல்வி நிதியொன்றைத் தோற்றுவிக்கும்படி புத்ராஜெயாவை அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

மலேசிய இந்தியர் உருமாற்ற பிரிவு (மித்ரா) மற்றும் தேசிய தொழில்முனைவோர் குழும பொருளாதார நிதி (தெக்குன்) ஆகியவற்றின் மூலம் இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்டுவரும் உதவி தொடரவேண்டும். அதே நேரத்தில், அந்த சமூகத்தில் திருப்புமுனை மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உளப்பூர்வமாகவும் ஆக்ககரமான முறையிலும் அரசாங்கம் உதவி புரிய வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பானின் பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஷாரெட்ஸான் ஜோஹன் தெரிவித்தார்.

மித்ராவின்கீழ் பட்டதாரி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் இரண்டாயிரம் வெள்ளி உதவித்தொகை ஒரு நல்ல மடிக்கணினியை வாங்குவதற்குக்கூட போதுமானதல்ல என்றார் அவர். "இந்த உத்தேச சிறப்புக் கல்வி நிதியின் வாயிலாக, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்குத் தலா இருபதாயிரம் வெள்ளியை ஒரே கட்டமாக வழங்க வேண்டும். இதன் மூலம் அவர்கள் தங்களின் கல்விச் செலவைக் சமாளிக்க முடியும். சுமார் ஐயாயிரம் இந்திய மாணவர்களுக்கு உதவ பத்துக் கோடி வெள்ளியை ஒதுக்க வேண்டும் என்று மக்களவையில் நேற்று நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான விநியோக மசோதா மீதான விவாதத்தின்போது ஷாரெட்ஸான் பரிந்துரைத்தார்.

அதிகமான இந்திய மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களிலும் இதர உயர்கல்விக்கழகங்களிலும் வாய்ப்பளிக்கப்படுகிறது. ஆனால், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் அவர்கள் பணப் பிரச்சினையை எதிர்நோக்குகின்றனர். அம்மாணவர்கள் தனியார் கல்விக்கழங்களில் சேர்வார்களேயானால், டியூஷன் கட்டணம் செலுத்துவதற்கு அவர்களின் குடும்பத்தினர் திணற வேண்டியிருக்கிறது என்று அவர் சுட்டிக் காட்டினார்.

இந்திய சமூகத்திற்கு உதவுவதால் மற்றவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பது பொருள் அல்ல. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு உட்பட பல துறைகளில் இந்திய சமூகம் புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ளது என்பதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும் என்றார் ஷாரெட்ஸான். இதனிடையே, இணையதள விளையாட்டுகளை உருவாக்கும் உள்ளூர் தொழில்முனைவர்களுக்கு அரசாங்கம் ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். கணினி விளையாட்டுச் செயலிகளை உருவாக்கி வரும் ஜப்பான், உலகம் முழுவதும் தனது கலாச்சார சுவடுகளைப் பதித்துள்ளது. குறிப்பாக, அவர்களின் மரியோ, ஸ்ட்ரீட் ஃபைட்டர், யாகுஸா 5 போன்ற விளையாட்டுக் காணொளிகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு உலகச் சந்தைகளில் பரபரப்பாக விற்பனையாகின்றன. இத்தகைய காணொளிகளை உருவாக்குவதற்காக உள்ளூர் தொழில்முனைவர்களுக்கு அரசாங்கம் நிதியுதவி அளிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *