எதைப் பற்றியும் எழுத தமக்கு "பச்சைக் கொடி" காட்டியிருந்தார் பிரதமர் அன்வார்-ஃபுஷியா சாலே!
- Muthu Kumar
- 26 Oct, 2024
கோலாலம்பூர், அக். 26-
அரசாங்கத்தையும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமையும் கடுமையாக விமர்சிப்பதற்கு, பிகேஆர் கட்சித் தலைவருமான அன்வாரின் 'அனுமதியே' தமக்கு கிடைத்திருக்கிறது என்று, பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் கரிம் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு தொடக்கத்தில் அன்வாரே தம்முடன் தொடர்பு கொண்டு, எதைப் பற்றியும் எழுத தமக்கு "பச்சைக் கொடி" காட்டியிருந்ததாக, பிகேஆர் கட்சியின் தலைமைச் செயலாளர் ஃபுஷியா சாலே தெரிவித்துள்ள ஒரு கருத்துக்கு ஹசான் இவ்வாறு பதிலளித்தார்.
"தமக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று, பிகேஆர் தகவல் பிரிவுத் தலைவர் ஃபாமி பட்சில் இவ்வாண்டுத் தொடக்கத்தில் தகவல் சாதனங்களில் வெளிப்படையாகக் கூறியிருந்த சில தினங்களுக்கு பின்னர் அன்வார் என்னுடன் கைத்தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.
“அவர் கூறியதாவது: 'ஹசான் எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசுங்கள், எழுதுங்கள், அரசாங்கத்தையும் பிரதமர் எனும் முறையில் என்னையும் கடுமையாக விமர்சியுங்கள். ஹசான், மலாய் ஆட்சியாளர்களை மட்டும் விமர்சிக்காதீர்கள்” என்பதாகும் என்று ஹசான் தெரிவித்தார்.
பிரதமரின் அனுமதியை தாம் பெற்றிருந்தாலும், அந்த அனுமதியையும் தாம் தவறுதலாக மீறியிருப்பதாக அவர் கூறினார்.இதனிடையே, எந்த ஒரு கருத்தாகவோ அல்லது கவலையாகவோ இருந்தாலும், அதை பொதுவில் அறிவிக்காமல் முதலில் கட்சிக்குள்ளேயே விவாதிக்கப்பட வேண்டும் என்று, ஃபுஷியா சாலே நேற்று முன்னதாக ஹசானை வலியுறுத்தியிருந்தார்.
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் உறுப்புக் கட்சியான அம்னோவின் உள்விவகாரங்களில் தலையிடுவதை ஹசான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஃபாமி இவ்வாண்டு தொடக்கத்தில் கேட்டுக் கொண்டும் இருந்தார்.கட்சி மீதான மலாய்க்கார வாக்காளர்களின் நம்பிக்கையை மீண்டும் பெற வேண்டுமென்றால், கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடியை மாற்றுமாறு அம்னோவை ஹசான் வலியுறுத்தி இருந்ததைத் தொடர்ந்து ஃபாமி அவ்வாறு கேட்டுக் கொண்டிருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *