தோல்வியும்,பிரதமர் பதவியும் நிரந்தரம் அல்ல!-நடிகர் கமல்ஹாசன்!

top-news
FREE WEBSITE AD

மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன், கட்சி மூத்த நிர்வாகிகள் உட்பட சுமார் 2500 பேர் கலந்து கொண்டனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்ய கட்சியின் நிரந்தரத் தலைவராக கமல்ஹாசன் தேர்வு செய்யப்பட்டது, தேர்தல் வயதை குறைக்க வலியுறுத்துவது, தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டன.

தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்ட பிறகு அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அவர் பேசுகையில், ” நேர்மையானவன் எனும் பட்டம் கிடைத்தால் அது போதுமென அயர்ந்து படுத்துவிட முடியாது. நீங்கள் அயர்ந்திருக்கும் நேரத்தில் உங்கள் நேர்மைக்கு சோதனை வரும். எனக்கு அவ்வாறு வந்துள்ளது. அதிலிருந்து சாதுரியமாக தப்பித்துக் கொள்ளவேண்டும்.

நான் சாதித்து விட்டேன் என கூறவில்லை. என்னால் நேர்மையாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது. என்னால் முடியுமென்றால் உங்களாலும் முடியும். வீரமும், நேர்மையும் இருக்கிறதா என்று என்னையே நான் கேட்டுக் கொள்வேன். நான் அரசியலுக்கு வரும் போது, பலர் என்னை தடுத்தார்கள். நான் என்ன வேட்டைக்கா போறேன்? அரசியல் வேண்டாம் என கூறினார்கள். பிக் பாஸ் போகும் போது என்னை வேண்டாம் என்று சொன்னார்கள். ஆனால் மக்களை பார்த்து பேசக்கூடியது , அது, ஊடகமாக இருந்தாலும், மேடையாக இருந்தாலும் அதனை நான் பயன்படுத்திக் கொள்வதில் என்ன தவறு.? இந்த மேடை வெளிச்சம் எனக்கு புதியதல்ல. நான்கு வயதிலிருந்து நான் இந்த மக்கள் வெளிச்சத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

சினிமாவில் தோற்றுப் போனால் ஞாபகம் வைத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால், அரசியலில் தோற்றத்தலைவர்களை கூட மக்கள் ஞாபகம் வைத்துக் கொள்வார்கள். தோற்ற அரசியல்வாதி என்று யாரையும் சொல்லவில்லை. என்னை தான் நான் சொல்கிறேன்.

தோல்வி நிரந்தரம் அல்ல. பிரதமர் பதவி என்பதும் நிரந்தரம் அல்ல. அப்படி இருந்துவிடவும் கூடாது. அதுதான் நாங்கள் விரும்பும் ஜனநாயகம். நான் லிஸ்ட் போட்டு பேசவில்லை, என் மனதில் பட்டத்தை பேசுகிறேன். ஒரே நாடு ஒரே தேர்தல் முறை ஆபத்தானது. அது தவறு என்பது உலக அரசியலுக்கே தெரியும். இதனை உலக அரசுகள் செய்து அதன் பாதிப்புக்கள் இன்னும் ஐரோப்பா, ரஷ்யாவில் அதன் வடுக்கள் இருக்கிறது.

கடந்த 2014,2016ஆம் ஆண்டிலே ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ வைத்து இருந்தால், இந்தியாவின் நிலைமை என்னவாகி இருக்கும்.? அப்படி நடந்திருந்தால் இப்போது நாம் பேசிக்கொண்டிருக்க முடியாது. அது கோவிட்டை விட கொடுமையானது. வாக்களர்களுக்கு யோசிக்க நேரம் கொடுக்க வேண்டும். இப்போது ஆட்சியில் உள்ளவர்கள், அப்போது ஆட்சியில் உள்ளவர்கள், இனி வரப்போகிறவர்களுக்கும் சொல்கிறேன். இந்த பதவி நிரந்தரமாக இருக்க கூடாது. 5 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்த வேண்டும். ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும். இந்த அமைப்பை அவர்களால் மற்ற முடியவில்லை. இந்தியாவிலேயே நேர்மையாக வரி செலுத்துபவர்கள் தமிழர்கள். அதில் மூத்தவன் நான்.

இந்தநாட்டை நடத்தி கொண்டிருப்பது நமது வரிப்பணம். வட மாநிலங்களுக்கு அள்ளிக் கொடுத்துவிட்டு, இங்கே நிதி தராமல் இருப்பது ஏற்புடையது அல்ல. அண்ணா அன்று கூறிய, “தெற்கு தேய்கிறது வடக்கு வாழ்கிறது”என்ற வாக்கியம் தற்போது வரை பொருத்தமாக இருக்கிறது. ” என்று மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *