இதற்கு மேல் நான் என்ன செய்ய? - அன்வார் அதிருப்தி
- Shan Siva
- 22 Nov, 2024
கோலாலம்பூர்,
நவம்பர் 22- அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சியால் தணிக்கை
செய்யப்பட்டு வெளியிடப்பட்ட காணொளியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தம்மை ஒரு
தரப்பினர் “முனாஃபிக் ” (கபடதாரி) என்று அவதூறு செய்வது நியாயம் அல்ல என்று
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று கூறினார்.
“சிஎன்என் செய்தியாளர்
ரிச்சர்ட் குவெஸ்ட் என்பவருக்கு அளித்த நேர்காணலின் ஒரு பகுதி தணிக்கை செய்யப்பட்டு நான் இஸ்ரேலை ஆதரிக்கிறேன் என்பதுபோல்
திரித்துக் கூறப்பட்டுள்ளது. அது உண்மைக்கு மாறானதாகும்” என்று அன்வார்
விளக்கினார்.
நாட்டின் முதல் பிரதமர்
துங்கு அப்துல் ரஹ்மானின் பதவிக் காலத்திலிருந்தே இஸ்ரேலை. ஒரு நாடாக மலேசியா
அங்கீரித்ததில்லை என்று மக்களவையில் அவர் குறிப்பிட்டார். இந்தக் கொள்கை இன்னும் மாறவில்லை.
பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் மலேசியாவின் நிலைப்பாடு இன்னும் தொடர்ந்து
கொண்டிருக்கிறது என்றார்.
“என்னைக்
குறைகூறும் நபர்கள் அந்த நேர்காணலில் நான் கூறிய ஓரிரு வார்த்தைகளை விமர்சனம்
செய்தால் அது பரவாயில்லை. ஆனால், அதனைத் தவறாக
வியாக்கியானம் செய்து எனது நிலைப்பாட்டிலிருந்து அந்நியப்படுத்த அவர்கள்
நினைக்கக்கூடாது” என்று அன்வார் தெரிவித்தார்.
இஸ்ரேலை
சந்தேகத்திற்கிடமின்றி கடுமையாகச் சாடியிருக்கிறேன். இதற்கு மேல் என்னால் என்ன
செய்ய முடியும்? சவூதி அரேபியா மற்றும்
பிரேசில் அரசாங்கங்களிடமும் இதர உலகளாவிய ஆய்வரங்குகளிலும் இதனை நான்
தெளிவுபடுத்தியிருக்கிறேன் என்றார்.
இந்த விவகாரத்தில் மலேசியாவின் நிலைப்பாடு மிகவும் கடுமையானதாகும்.
இஸ்ரேலைக் காட்டுமிராண்டித்தனமான
நாடு என்றும் என்றும் சாடியிருக்கிறேன். இதனை என்னுடைய சொந்த ஊரில் கூறவில்லை.
மாறாக, உலகத் தலைவர்களின் முன்னிலையிலேயே அவ்வாறு
கூறியிருக்கிறேன் என்று அன்வார் தெரிவித்தார்.
என்னைப் பொய்யர்
என்றும் கபடதாரி என்றும் சில தரப்பினர் சாடிவருகின்றனர். இது நியாயமற்றது. அக்காணொளி
தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளது. முந்தைய அரசாங்கங்களைப் போல் அல்லாமல், தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் மலேசியாவுக்கு இஸ்ரேலிய விமானங்களும்
கப்பல்களும் வருகை தருவதற்குத் தடை விதித்தது என்றும் அன்வார் தெரிவித்தார்.
அன்வாருக்குப்
பதிலளிக்கும் வகையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுடின், இஸ்ரேலுக்கு எதிரான பிரதமரின் வலுவான நிலைப்பாட்டையும் பாலஸ்தீனத்திற்கு
அளித்துவரும் ஆதரவையும் பாராட்டுவதாகச் சொன்னார்.
ஆயினும், சிஎன்என் நேர்காணலில் அன்வார்.
ஏதாவது தவறாகப் பேசியிருந்தால் அதனை அவர்: ஒப்புக் கொண்டு தமது
வழக்கமான பணியைத் தொடர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *