வீட்டுக் காவலில் நஜிப்! - அது வெறும் செவி வழிச் செய்தியே! - சைஃபுடின் நசுத்தியோன்
- Shan Siva
- 08 Nov, 2024
கோலாலம்பூர்,
நவ. 8- நஜிப் ரசாக்கின் எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க அரச
உத்தரவுப் பத்திரம் எவளியிடப்பட்டதாகக் கூறப்படுவதை உள்துறை அமைச்சர்
சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் நேற்று திட்டவட்டமாக மறுத்தார்.
அத்தகைய உத்தரவு
அடங்கிய பிற்சேர்க்கை எதுவும் வெளியிடப்படவில்லை. அது வெறும் செவிவழிச்
செய்தியாகும் என்று அவர் குறிப்பிட்டார். அத்தகைய அரச உத்தரவு பிற்சேர்க்கை
இருப்பதை உறுதிபடுத்தக்கோரி முன்னாள் பிரதமர் நஜிப் தொடுத்திருந்த வழக்கை
கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் கடந்த ஜூலையில் தள்ளுபடி செய்யப்பட்டதை மக்களவையில்
சைஃபுடின் நேற்று சுட்டிக் காட்டினார்.
அந்த விவகாரம்
குறித்து பெரிக்காத்தான் நேஷனலின் கோத்தாபாரு நாடாளுமன்ற உறுப்பினர்
தக்கியூடின் ஹசான் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அளித்த கேள்விகளுக்குப்
பதிலளித்தபோது சைஃபுடின் இந்த விளக்கத்தை அளித்தார். அந்த விவகாரத்தை நஜிப்பின்
வழக்கறிஞர் எழுப்பியபோது அது வெறும் செவிவழிச் செய்தியே என்று நீதிமன்றம்
தீர்ப்பளித்தது. ஆகவே, இந்த விவகாரத்தை
மீண்டும் எழுப்ப வேண்டிய தேவையில்லை. பிற்சேர்க்கை பற்றிய செய்தியை கேள்வியுற்ற
ஒருவர் அதனை மற்றொருவரிடம் தெரிவித்தார். அதனை அந்நபர் இன்னொருவரிடம்
தெரிவித்துள்ளார். இதுவெல்லாம் வெறும் ஊகமே என்று நீதிமன்றம் தன்னுடைய
தீர்ப்பில் தெரிவித்திருந்தது என்றார் சைஃபுடின்.
இந்த விவகாரம்
முடிவுக்கு வந்து விட்டது. இது குறித்து மீண்டும் மீண்டும் விளக்கமளிக்க நான்
விரும்பவில்லை என்றார். 1எம்டிபி
நிறுவனத்தின் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இண்டர்நேஷனலுக்குச் சொந்தமான நான்கு
கோடியே இருபது லட்சம் வெள்ளியை கையாடிய வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட
நஜிப் அத்தண்டனையை காஜாங் சிறைச்சாலையில் அனுபவித்து வருகிறார்.
அக்குற்றத்திற்காக அவருக்கு பன்னிரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் இருபத்தோரு
கோடி வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது. ஆயினும், இவ்வாண்டின்: முற்பகுதியில் கூடிய கூட்டரசு பிரதேச
மன்னிப்பு வாரியம் அவரின் சிறைத்தண்டனையை ஆறு ஆண்டுகளாகவும் அபராதத்தொகையை
ஐந்து கோடி வெள்ளியாகவும் குறைத்தது. ஜனவரி 29ஆம் தேதியன்று நடைபெற்ற அக்கூட்டத்தின்போது நஜிப்பின்
எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க அப்போதைய பேரரசர் சுல்தான்
அப்துல்லா அமாட் ஷா அரச உத்தரவு பிறப்பித்ததாகக் கூறப்படுகிறது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *