நூற்றாண்டுகள் கடந்த தும்போக் தோட்டத் தமிழ்ப்பள்ளி!

top-news
FREE WEBSITE AD

(எஸ்.எஸ்.மணிமாறன்)

தஞ்சோங் சிப்பாட், டிச.19 -

சிலாங்கூர் மாநிலத்தில், சிப்பாங் மாவட்டத்தில் மையம் கொண்டுள்ள தும்போக் தோட்டத் தமிழ்ப்பள்ளி வரும் 22.12.2024 (ஞாயிறு) அன்று ஒரு நூற்றாண்டை எட்டும் நிலையில் இப்பள்ளியில் அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு அலங்காரத் தோரணங்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு பரபரப்பாகப் பணிகள் தொடரப்படும் இந்த வேளையில் இப்பள்ளி வரலாற்றை அனைவரும் அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் நாம் ஒரு கண்ணோட்டத்தை வாசகர்கள் முன் சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

அன்று மலாயா ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இருந்த போது தும்போக் தோட்டத் தமிழ்ப்பள்ளி 1924 இல் தோற்றுவிக்கப் பட்டதாக பள்ளி ஆண்டு மலரின் வாயிலாக அறிய முடிகிறது.

அந்தக் காலகட்டத்தில் தும்போக் தோட்டத்தில் வேலை செய்து வந்த இந்திய தொழிலாளர்களின் பிள்ளைகள் கல்வி கற்க பாட்டாளிகள் வழிபாட்டுக்கென சிறு குடில் கோயிலாக அமைந்திருந்த இடத்தையொட்டி எழுப்பப்பட்ட ஒரு கட்டடத்தில்தான் அன்று பள்ளி உருவாக்கம் கண்டது.

1947 இல் இப்பள்ளி முறையாக பதிவு செய்யப்பட்டது 1924 ஆம் ஆண்டு முதல் 1950 ஆம் ஆண்டு வரை ஓர் ஆசிரியர் மட்டுமே பள்ளி மாணவர்களுக்கு கல்வி போதித்து வந்துள்ளார். 1950 இல் மாணவர்கள் எண்ணிக்கை 60 ஆகவும், 1955இல் 92 ஆக உயர்வு கண்டதாகவும் பள்ளி ஆண்டு மலரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்ததைத் தொடர்ந்து 1965 ஆம் ஆண்டில் 2 வகுப்பறைகள் கொண்ட இணைக் கட்டடம் கட்டப்பட்டது. அந்த வகுப்பறைகள் இன்றளவும் மாணவர்கள் பயன்பாட்டில் உள்ளன.

கடந்த 2.5.1969இல் இந்த இணைக் கட்டடம் அப்போதைய கல்வி அமைச்சர் லீ சியோக் யூ தலைமையில் திறப்பு விழா கண்டது. 1990 இல் பள்ளி மாணவர்களுக்கான சிற்றுண்டிச் சாலையும் பாதுகாப்பு கருதி பள்ளியைச் சுற்றி வேலியும் அமைக்கப்பட்டது. இதே கால கட்டத்தில் 6 வகுப்பறைகளைக் கொண்ட இணைக் கட்டடம் உருவாக்கம் கண்டது.கடந்த 2012 இல் மத்திய அரசின் மூலம் நவீன வசதிகளுடன் கூடிய 2 மாடிகள் கொண்ட பள்ளி இணைக் கட்டடம் எழுப்பப்பட்டது.

தொடர்ந்து பள்ளி மாணவர்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு, பள்ளி வளாகத்தில் பாலர் பள்ளியும் கட்டிக் கொடுத்தது. மாணவர்கள் எண்ணிக்கையும் படிப்படியாக உயர கல்வி வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் ஆசிரியர் பெருமக்களின் அளப்பரிய சேவையும் அர்ப்பணிப்பு உணர்வும் இப்பள்ளிக்கு சிறந்த அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் ஏற்படுத்தித் தந்துள்ளது பாராட்டுக்குரியது.

இன்று, நூற்றாண்டுகள் கடந்த தும்போக் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தற்போது பள்ளி  தலைமையாசிரியராக


இரா.கஸ்தூரி, பள்ளி மேலாளர் வாரியத் தலைவராக எம்.வேலாயுதம், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராக விஷ்ணு முனுசாமி ஆகியோர் சேவையில் இருந்து வருகின்றனர்.

(பள்ளி வளர்ச்சிக்கு தியாகம் செய்த தலைமையாசிரியர்கள்) தும்போக் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் முதல் தலைமை ஆசிரியராக திருமதி மேரி ஜேசுநாதன் கடந்த 1924 முதல் 1930 வரை சேவையாற்றி யுள்ளார்.கே.வி.நடராஜா 1930 தொடங்கி 1934 வரை தலைமை ஆசிரியர் பணியில் இருந்துள்ளார்.


நாகசாமி என்பவர் கடந்த 1934 முதல் 1941 வரை இப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணி புரிந்துள்ளார். தலைமையாசிரியர் எம்.நாராயணசாமி கடந்த 1941 முதல் 1952 வரை இப்பள்ளியில் சேவையாற்றியுள்ளார். தலைமையாசிரியர் நல்லப்பன் 1953 முதல் 1979 வரை பள்ளி மாணவர்கள் வளர்ச்சிக்குப் பாடுபட்டுள்ளார். எஸ்.எம். முகமட் ரஃபி என்பவர் 1980 முதல் 1993 வரை இப்பள்ளித் தலைமை ஆசிரியராக சேவையாற்றி யுள்ளார். எம்.எஸ்.முத்தையா 1994 தொடங்கி 2003 வரை இப்பள்ளியின் தலைமையாசிரியராக சேவை வழங்கியுள்ளார்.

பின்னாளில் மேலவை உறுப்பினராக சேவையாற்றிய மஇகா சிறந்த தலைவர் களில் ஒருவரான டத்தோ வீ.க.செல்லப்பன் இப்பள்ளியின் முன்னாள் மாணவராவார். பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பி.பாலகிருஷ்ணன், காஜாங் தமிழ்ப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் பி.புனிதன் இருவரும் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்களே.

தும்போக் தோட்டத் தமிழ்ப்பள்ளி யின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் வருகை தந்து விழாவை அதிகாரப் பூர்வமாக த் தொடக்கி வைக்கிறார்.

கோல லங்காட் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் ஹரிதாஸ் ராமசாமி கல்வி அமைச்சரை இவ்விழாவுக்கு அழைத்து வருவதற்கான பொறுப்பை ஏற்றுள்ளார். வரும் 22.12.2024 ஞாயிறு அன்று இப்பள்ளி மண்டபத்தில் கோலாகலமாக நடைபெறவிருக்கும் பள்ளி நூற்றாண்டு விழாவில் நாடுதழுவிய அளவில் முன்னாள் மாணவர்களும் கலந்து கொள்ள விருக்கின்றனர்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *