ஐப்பசி மாதத்தில் வரும் பெளர்ணமியின் தனி மகத்துவம்!
- Muthu Kumar
- 15 Nov, 2024
ஐப்பசி மாதத்தில் வரும் பெளர்ணமிக்கு தனி மகத்துவமே உண்டு. இந்த நாளில் மக்கள் தங்களின் பாவங்கள் தீர, புதிய துவக்கங்கள் ஆரம்பமாக புனித நதிகளில் நீராடுவது வழக்கம்.சிவன் மற்றும் பெருமாளை வேண்டி விரதம் இருப்பதுண்டு. இது புண்ணியம் தரும் நாள் என்பதால் மக்கள் மிகவும் பயபக்தியுடன் தங்களின் வழிபாடுகளை மேற்கொள்வார்கள். இந்த ஆண்டு ஐப்பசி பெளர்ணமி நவம்பர் 15ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. இந்த நாளில் துரதிர்ஷ்டம் ஏற்படாமல் இருக்க எவற்றை எல்லாம் செய்யலாம், எந்தெந்த விஷயங்களை செய்யாமல் தவிர்க்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஐப்பசி பெளர்ணமியில் செய்ய வேண்டியவை :
* புனித நீராடல் - சூரிய உதயத்திற்கு முன் புனித நதிகளில் நீராடுவதால் பாவங்கள் தீரும். ஆத்மா சுத்தமடையும். அதோடு புனித நதிகளை தெய்வமாக வழிபட்டு, அவர்களின் ஆசியை பெறுவதற்கும் இது அவசியமானதாக கருதப்படுகிறது.
* சிவ வழிபாடு - சிவ பெருமானுக்கு பூக்கள், பழங்கள் படைத்து வழிபட வேண்டும். சிவ பெருமானுக்குரிய மகாமிருத்யுஞ்ஜய மந்திரம் போன்ற மிக புனிதமான மந்திரங்களை ஜபம் செய்வதால் செல்வ வளம் பெருகும். தெய்வத்தின் அருள் கிடைக்கும்.
* தியானம் - ஐப்பசி பெளர்ணமி அன்று விரதம் இருந்து, தியானம், பிரணாயாமம் போன்றவற்றை பயிற்சி செய்வது ஆன்மிக வளர்ச்சிக்கு உதவும்.
* தானம் - இந்த நாளில் ஏழைகளுக்கு தானம் வழங்குவது மிக மிக சிறப்பானதாகும். இதனால் நமக்கு முன்னோர்களின் ஆசி கிடைப்பதுடன், நல்ல கர்மாக்களின் ஆற்றல் அதிகரிக்க துவங்கும்.
ஐப்பசி பெளர்ணமியில் தவிர்க்க வேண்டியவை :
* வீட்டிற்கு யாராவது உதவி கேட்டு வந்தால் அவர்களை வெறும் கையுடன் அனுப்பி விடாதீர்கள். குறிப்பாக பசி என வருபவர்களுக்கு உணவு இல்லை என மறந்து கூட சொல்லி விடாதீர்கள். இது ஐப்பசி அன்னாபிஷேகம் நடைபெறும் நாளாகும். உணவாக கொடுக்க முடியவில்லை என்றாலும், அவர்களுக்கு பணமாகவாவது கொடுத்து அவர்களின் பசியாற்ற உதவுங்கள்.
* யாரையும் கடினமான வார்த்தைகளை சொல்லி பேசுவதையோ, அவமதிப்பதையும் தவிர்க்க வேண்டும். யாருடைய மனமும் புண்படும் வகையிலான வார்த்தைகளை பயன்படுத்துவதையோ, செயல்களை செய்வதையோ தவிர்க்க வேண்டும்.
* அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். போதை தரும் மது, புகையிலை போன்ற பொருட்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
* ஐப்பசி பெளர்ணமி அன்று வெள்ளி பாத்திரங்கள் போன்ற விலை உயர்ந்த பொருட்கள், பால் சார்ந்த பொருட்களை யாருக்கும் தானமாகவோ, கடனாகவோ கொடுத்து விடாதீர்கள். அதே போல் அரிசி கடனாக வாங்காதீர்கள். இப்படி செய்வதால் சந்திர தோஷம் ஏற்படும்.
* வீட்டின் எந்த பகுதியையும் இருளாகவோ, அசுத்தமாகவோ வைக்காதீர்கள். இது பெருமாளுக்கும் உரிய நாள் என்பதால் அவருடன் மகாலட்சுமியும் வீட்டிற்கு வருவாள் என்பதால் வீட்டை சுத்தமாக வைத்திருபப்து அவசியம்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *