உண்மை அறியாமல் வதந்தி பரப்புவதா? - கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரி தியாகராஜ் சங்கரநாராயணன் சாடல்
- Tamil Malar (Reporter)
- 06 May, 2024
கெர்லிங் தோட்டத்
தமிழ்ப்பள்ளியின் தங்கும் விடுதிக்கு ஆபத்து வந்துவிட்டதாக தவறான தவலை மக்கள்
மத்தியில் பரப்பி ஆதாயம் தேடும்
சிலரின் போக்கு கண்டனத்திற்குரியது என்று கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரி
சங்கநாராயணன் கூறினார்.
ஏதாவது ஒன்றை குறைகூறி
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஒற்றுமை அரசாங்கத்தைச் சிறுமைப்படுத்த வேண்டும் என்ற
நோக்கில் சிலர் தகவல் ஊடகங்களில் பொய்யான கருத்துகளைப் பரப்பி வருவதாக. அவர் குற்றம்
சாட்டினார்.
இந்நாட்டிலுள்ள
குறிப்பாக தமிழ்ப்பள்ளி மாணவர்களின் நலனுக்கு அரசாங்கம் தொடர்ந்து முன்னுரிமை
கொடுத்து வருகிறது. ஆனால், அவற்றை எல்லாம்
மறந்து விட்டு தமிழ்ப்பள்ளிகள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு செய்திகளை வெளியிடும்
போக்கு ஏற்கத்தக்கதல்ல. கெர்லிங் தமிழ்ப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களின்
நலனில் அரசாங்கமும் கல்வி அமைச்சும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. சில
தினங்களுக்கு முன்பு பிரதமரின் துணைவியார் டத்தோஸ்ரீவான் அஸீஸா இஸ்மாயில் வருகை
தந்ததை சிறுமைப்படுத்தும் வகையில் நேற்று ஒரு தமிழ் நாளிதழ் செய்தி
வெளியிட்டுள்ளது. கெர்லிங் தமிழ்ப்பள்ளியின் தங்கும் விடுதியை இழுத்து மூட
கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளதாக எந்த ஆதாரத்தோடு அதனை வெளிப்படுத்தியுள்ளனர்
என்பது தெரியவில்லை. அதுவும் டத்தோஸ்ரீ வான் அஸிஸா வந்த பிறகு இந்தத் தங்கும்
விடுதியை இழுத்து மூடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறுவது
அபத்தமானதாகும். ஒரு பிரச்சினையை விமர்சிப்பது தவறல்ல. ஆனால், அதை ஆதாரப்பூர்வமாக மற்றவர்கள் ஏற்றுக்
கொள்ளும்படியாக அந்த விமர்சனம் இருக்க வேண்டும். சில பிரச்சினைகள் தீர்வு
காணப்பட்டுள்ளன. குறிப்பாக, நான் கல்வி
அமைச்சின் சிறப்பு அதிகாரியாக பதவியேற்ற
பின்னர் காலதாமதமாக இருந்த பிரச்சினைகளைக் கல்வி அமைச்சர் மூலம் நானே தீர்த்து
வைத்துள்ளேன். தமிழ்ப்பள்ளிகளின் சில முக்கிய பிரச்சினைகளை மீளாய்வு செய்து அதைத்
தீர்க்கும் பணியிலும் சில விமர்சகர்களுடன் களம் இறங்கி இணைந்து
சேவையாற்றியுள்ளேன். ஆனால், சில அரசியல்
காரணங்களுக்காக அரசாங்கத்தின் மீது தேவையில்லாமல்
கல் எறிவதை ஒரு நாளும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒருவரை கோருவர் தாக்கிக்
கொள்ளும் நடவடிக்கைகளும் வெறுப்பை வெளிப்படுத்துவதிலும் எந்தவொரு நன்மையும்
கிடையாது. தினமும் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. அப்படி இருத்கும் போது
தேவையில்லாத செய்திகளை வெளியிட்டு மக்கள் அனுதாபங்களைப் பெற யாரும் முயற்சிக்க
வேண்டாம். உண்மை நிலை என்ன என்பதை அறிந்து செய்திகளை வெளியிட வேண்டும். ஆதாரமற்ற
செய்திகளை வெளியிட்டு அழுது கொண்டிருப்பதை விட, உண்மையான செய்தியை
வெளியிட்டு மக்களுக்குப் பயன் தரும் நல்ல விஷயங்களைத் தரவேண்டியது
ஊடகங்களின் கடமையாகும். யார் மீதோ இருக்கும் வெறுப்பைக் காட்டுவதைக்
காட்டிலும் வதந்திகளைப் பரப்பி குழப்ப வேண்டாம் என்று தியாகராஜ் சங்கரநாராயணன்
கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *