M.C.M.C MICROSOFT புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் மேற்கொள்ளப்படும் - Teo Nie Ching
- Thina S
- 08 May, 2024
மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி) விரைவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளது. குறிப்பாக கல்வியின் மூலம் செயற்கை நுண்ணறிவுத் துறையில் இலக்கவியல் திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்குவதற்கான ஒத்துழைப்புக்காக இது அமையவுள்ளது.
மலேசியாவில் உள்ள தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்த மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் கொண்டுள்ளதாக தொடர்பு துணை அமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.
"இந்நாட்டில் உள்ள தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உறுதிப்படுத்த மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். எனவே, செயற்கை நுண்ணறிவு மற்றும் நடப்பில் உள்ள சில கூறுகளைப் பயன்படுத்தி மலேசியர்களின் ஆற்றலை வளர்க்க மைக்ரோசாப்டில் இருக்கும் வளங்களைப் பயன்படுத்துவோம்," என்று அவர் கூறினார்.
தலைநகரில் நடைபெற்ற அனைத்துலக தொழில்நுட்ப கண்காணிப்பு மாநாடு (IRC) 2024 இல் நிறைவுரை ஆற்றிய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
இம்மாநாடு ஆசியான் மற்றும் இதர நாடுகளில் உள்ள கட்டுப்பாட்டாளர்களை ஒன்றிணைத்து, இணையத்திற்கான சிறந்த அணுகலை உறுதி செய்வதிலும், இணையக் குற்றங்களின் சிக்கல்களைத் தீர்ப்பதிலும் தங்களுக்குரிய நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொண்டதாக தியோ கூறினார்.
"அனைத்து கட்டுப்பாட்டாளர்களையும் இங்கு அழைத்து அவர்களின் கருத்துக்களையும், நிபுணத்துவத்தையும் பகிர்ந்து கொள்வதே எங்கள் நோக்கமாகும். இதன் மூலம் ஒரு கட்டமைப்பையும் தேவையான மசோதாவையும் செயல்படுத்த முடியும்," என நம்பிக்கை தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *