மலேசிய வீரப்பெண்மணி புவான் ஸ்ரீ ஜானகி ஆதி நாகப்பன்!
- Muthu Kumar
- 31 Aug, 2024
நம் மலேசிய நாட்டின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 31 ஆம் தேதி இன்று சுதந்திர போராட்ட வீரப் பெண்மணியாகவும்,அதே சமயம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் ஜான்ஸி எனப்படும் படைப்பிரிவில் ராணி மகளிர் பிரிவில் முக்கியமான நபராகவும் விளங்கிய சாதனை பெண்மணி புவான் ஸ்ரீ ஜானகி ஆதி நாகப்பன் அவர்களைப் பற்றி சிந்தனைப் பூங்காவில் பதிவிடுவதை பெருமையாக கொள்கிறோம்.
இந்திய சுதந்திரத்திற்காகவும்,மலேசிய சுதந்திரத்திற்காகவும் போராடிய ஆரம்பகால பெண்களில் ஒருவர் தான் ஜானகி ஆதி நாகப்பன். 1925 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி அப்போதைய பிரிட்டிஷ் மலேசியா கோலாலம்பூரில் பிறந்து தனது18 வயதில், சுதந்திரப் போராட்ட வீரராக தனது பயணத்தைத் தொடங்கினார்.ஆனால் இந்த பயனம் ஜானகி அவர்களுக்கு எளிதான பாதையாக இருக்கவில்லை, ஏனென்றால் அவர் குடும்பத்திடம் இருந்து - குறிப்பாக அவருடைய தந்தையிடம் இருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டார். ஜானகி ஆதி நாகப்பன் வற்புறுத்தலின் காரணமாக ஒருவழியாக குடும்பத்தாரிடம் இருந்து ஒப்புதல் கிடைத்தது.
இந்திய சுதந்திரத்திற்காக தங்களால் இயன்றதை கொடுக்குமாறு இந்தியர்களிடம் சுபாஷ் சந்திரபோஸ் வேண்டுகோளை முன் வைத்தபோது ஜானகி ஆதி நாகப்பனின் வயது 16 .
உடனே தன் தங்கக் காதணிகளைக் கழற்றி தானம் செய்தார் ஜானகி ஆதி நாகப்பன்.இந்திய தேசிய ராணுவத்தின் ஜான்சி படைப்பிரிவில் ராணி என்ற மகளிர் பிரிவில் சேர ஜானகி ஆதி நாகப்பன் தீவிரமாக இருந்தார்
ஒருவழியாக இராணுவத்தில் சேர்ந்த ஜானகி ஆதி நாகப்பன் அதிகாரி தேர்வுகளில் முதல் தரவரிசையை அடைந்து பெண்கள் படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக இரண்டாவது இடத்தைப் பிடித்தார். ஜப்பானியர்களுடன் இணைந்து இந்தியாவில் இந்திய சுதந்திரத்திற்காக போராட இந்திய தேசிய இராணுவத்திலும் சேர்ந்தார் ஜானகி ஆதிநாகப்பன்.
அப்போதைய மலாயாவில் உள்ள இந்திய காங்கிரஸ் மருத்துவப் பணியில் சேர்ந்தார் . 1946 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் மாதிரியாக உருவாக்கப்பட்ட மலாயா இந்திய காங்கிரஸை நிறுவ ஜானகி ஆதி நாகப்பன் உதவியாக இருந்தார்.
மலேசியா மற்றும் இந்திய ராணுவ படைப்பிரிவின் கீழ் காலனித்துவ பிரிட்டிஷ்க்கு எதிரான போரில் அவர் செய்த பங்களிப்புகளுக்காக ஜானகி அவர்களுக்கு 2000 ஆம் ஆண்டில் இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதும்,மலேசியாவின் புவான்ஸ்ரீ வீருதும் வழங்கப்பட்டது.
புவான் ஸ்ரீ ஜானகி ஆதி நாகப்பன் நிமோனியா நோயின் காரணமாக 2014 ஆம் ஆண்டு மே 9 ஆம் தேதி அன்று 89 வயதான முதிர்ந்த வயதில் தாமான் தாசிக் திதிவாங்சாவில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.உண்மையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்தியாவிற்கு அப்பாற்பட்ட சாதனை பெண்மணி புவான் ஸ்ரீ ஜானகி ஆதி நாகப்பன் என்பது நாம் பெருமைபட வேண்டிய ஒன்று.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *