ஆங்கில இசை பாடும் மலேசிய மண்ணின் மைந்தன் கமால் எனும் கமலேஸ்வரன்!

top-news
FREE WEBSITE AD

உலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞர்தான் கமால்.. உலக மக்கள் விரும்பும் பல ஆங்கில பாடல்களை பாடி அசத்தியவர். அவர் ஒரு தமிழர், அதுவும் மலேசியத் தமிழர் என்றால் நம்மில் பலருக்கும் ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்.

  பெற்றோர்களான கந்தையா மயில் வாகனம்- இளைய தங்கம் அவர்களுக்கு இரண்டாவது தங்கப் பிள்ளையாய்  தரணியில் பிறந்தவருக்கு  பெற்றோர்கள் சூட்டிய பெயர் கமலேஸ்வரன். நவம்பர் 13 ஆம் தேதி 1934 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் பிறந்து ப்ரீக்ஃபீல்ட்ஸ் பகுதியில் வளர்ந்தார். தனது தந்தை கந்தையா மயில்வாகனம் கோலாலம்பூர் இசைப்பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றியவர்.



1953 ஆம் ஆண்டில் உயர்கல்வி பயில்வதற்கு ஆஸ்திரேலியாவுக்கு சென்றார் கமால். தெற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகரமான அடிலெய்டில் உள்ள கல்லூரியில் தமது படிப்பை தொடர்ந்தார்.
கமால் எனும் கமலேஸ்வரனுக்கு ஆங்கிலம் சரளமாக  பேச வராத காலகட்டம் அது. இனவெறி தாண்டவமாடிய கால கட்டமும் கூட.. ..வெள்ளை ஆஸ்திரேலியா என்ற கொள்கை கொண்ட ஒரு விஷயம் தீவிரமாக பின்பற்றபட்ட காலம்தான் கமலேஸ்வரன் அவர்கள் ஆஸ்திரேலியாவில் படித்துக் கொண்டிருந்த காலம். அவரும் கருப்பு நிறம் கொண்டவர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கமால் தன் படிப்பை  பல பிரச்சினைகளுக்கு மத்தியில் 1955 ஆம் ஆண்டு  நிறைவு செய்தார்.

அடிலெய்டில் பெரிய வசதி படைத்தவரான ரூபெர்ட் மர்டெக் என்பவரின் நட்பு கமாலுக்கு கிடைத்தது. 1968 ஆம் ஆண்டு தொடங்கிய இவர்களது நட்பினால் கமாலுக்கு துன்ப காலங்கள் வந்த போதெல்லாம்  உதவிகள் பல செய்தார் ரூபெர்ட் மர்டெக். கமால் அடிலெய்டில் இருந்து சிட்னிக்கு  இடம் மாறி ஆஸ்திரேலியாவின் நிரந்தர குடியுரிமையையும் பெற்றார்.

தன் நண்பன் ரூபெர்ட் மர்டெக் உதவியினால் மேற்கத்திய இசையில் பிரபலமடைந்தார் கமால். தன் முதல் இசை ஆல்பமான A voice To Remember ஐ தன் நண்பனின் உதவியோடு 1967 ஆம் ஆண்டு சிட்னியில் வெளியிட்டார். 1972 ஆம் ஆண்டு தென் அமெரிக்காவில் நடந்த அனைத்துலக இசை விழாவில் கமால் பங்கு கொண்டார். அப்பொழுதைய காலகட்டத்தில் இப்படி கலந்து கொள்வது என்பது மிகவும் பெரிய நிகழ்வாக கருதப்பட்டது. மேற்கத்திய இசை உலகில் சுமார் 50 ஆண்டு காலம் தன் பாடலால் உலக மக்களை வசீகரம் செய்து நூற்றுக்கணக்கான இசை ஆல்பங்களை பல நாடுகளில் வெளியிட்டு மலேசியராக,, மலேசிய தமிழனாய் வலம் வந்தார் கமால் எனும் கமலேஸ்வரன்.Imagine The World In Unison  என்ற இசை ஆல்பம் 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.





இசை உலகில் தனக்கென தனி பாதையை உருவாக்கி அசத்தி வந்த கமால் எனும் கமலேஸ்வரன் அவர்கள் 1994 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உயர்ந்த விருதான  Order of Australlia  விருதினையும்... 1998 ஆம் ஆண்டு Australian Father Of The Year  என்ற விருதினையும் பெற்றார். 2004 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் நூற்றாண்டு விருதினை இரண்டாம் எலிசபெத் மகாராணியிடமிருந்து பெற்றார்.Our Entertainers Of The 20th Century  என்ற ஆஸ்திரேலியா விருதினையும் 2006 ஆம் ஆண்டு பெற்றார் கமால்.

ஆரம்ப கால கட்டத்தில் ஆங்கிலம் கூட சரிவர பேச முடியாத கமால் இன வெறி காலகட்டத்தை கடந்து வந்து அதே ஆங்கில இசை உலகில் பல ஆங்கில பாடல்களை தானே எழுதி பாடி பல பெரிய பெரிய விருதுகள் வாங்கியவர் நம் தமிழினத்தை சார்ந்தவர் என்பது எண்ணற்ற மகிழ்ச்சி. இவர் சாதனைகளை நாம் படித்து தெரிந்து கொண்டாலும் இவர் படைப்புகளை கேட்டு உணர்வது என்பது தனி சுகம். இவர் படைப்பினை www.kamahl.com என்ற இணையத்தில் சென்று ரசிக்கலாம். youtube போன்ற சமூக ஊடகங்களிலும் பார்த்தும் கேட்டும் ரசிக்கலாம்.

கமலேஸ்வரன் என்ற ஒரு மலேசிய தமிழன் கமால் என்று தன் பெயரை இசை துறைக்காக சுருக்கிக்கொண்டாலும், அவர் பாடிய ஆங்கில பாடல்களை இன்றும் உலக மக்கள்  தனிமையில் கேட்கும் பொழுதும், உறவுகளுடன் கேட்கும் பொழுதும் தங்களையும் மறந்து தனி உலகில்  பயணித்துக் கொண்டிருக்கின்றனர். அத்தனை பெருமைக்கும் சொந்தக்காரரான கமால் எனும் கமலேஸ்வரன் அவர்களுக்கு வயது 90. இன்றும் அவருடைய  The Elephant  மற்றும்  Sounds of Goodbye பாடலைக் கேட்டு மயங்காதவர் எவரும் இல்லை.
இங்கிலீஷ் பேசினாலும் தமிழன்டா என்பது இப்பொழுது வைரலாக இருந்தாலும் இந்த வாக்கியத்திற்கு உண்மையிலேயே சொந்தக்காரர் மலேசியாவின் கமலேஸ்வரன் எனும் கமால் தான்...



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *