KKB இடைத்தேர்தல் இந்தியர்களின் கையில் வெற்றி தோல்வி!

top-news
FREE WEBSITE AD


வரும்‌ சனிக்கிழமை நடைபெறவிருக்கும் கோலகுபுபாரு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில்‌ எந்தக் கட்சி வெற்றிபெறும்‌ என்பதை இந்திய வாக்காளர்கள்தான்‌ தீர்மானிப்பார்கள்‌ என்று அரசியல்‌ ஆய்வாளர்கள்‌ தெரிவித்துள்ளனர்‌.

வாக்களிப்பதற்கு குறைவான மலாய்‌ வாக்காளர்கள்‌ வரும்‌ பட்சத்தில்,‌ வெற்றிதோல்வியை இந்தியர்கள்தான்‌ தீர்மானிப்பார்கள்‌ என்று மலேசிய தேசியப்‌ பல்கலைக்கழகத்தின்‌ இன ஆய்வியல்‌ கல்லூரியின்‌ துணை இயக்குநர்‌ பேராசிரியர்‌ கார்த்தினி அபு தாலிப்‌ குறிப்பிட்டார்‌. 

மலாய்க்காரர்களைக்‌ பெரும்பான்மையினராகக்‌ கொண்ட அத்தொகுதியில்‌ போட்டியிடும்‌ பெரிக்காத்தான்‌ நேஷனல்,‌ தன்னுடைய வெற்றிக்கு அங்குள்ள 7,200 இந்திய வாக்காளர்களை நம்பியுள்ளது. அக்கூட்டணியை சீன வாக்காளர்கள்‌ ஆதரிக்க மாட்டார்கள்‌ என்பது அவர்களுக்கு நன்றாகத்‌ தெரியும்‌. ஆகையால்தான்‌, இந்திய வாக்காளர்களைக்‌ கவர பெரிக்காத்தான் முயற்சி செய்து வருகிறது என்று அவர்‌ குறிப்பிட்டார்‌. 

பெரிக்காத்தான்‌ நேஷனலின்‌ பிரச்சாரம்‌ இந்திய வாக்காளர்களை   இலக்காகக்‌ கொண்டு நடைபெற்று வருகிறது. அக்கூட்டணணிக்கு  சீனர்களின்‌ வாக்குகள்‌ கிடைக்கப்‌ போவதில்லை. ஆகவே குறைந்த   வாக்குகள்‌ வித்தியாசத்திலாவது வெற்றிபெற இந்தியர்களின்‌ வாக்குகளை ஈர்க்க கடும்‌ முயற்சியில் பெரிக்காத்தான்‌ ஈடுபட்டுள்ளது என்று   கார்த்தினி தெரிவித்தார்‌. 

கோலகுபுபாரு இடைத்தேர்தல்‌ முடிவை இந்திய சமூகம்தான்‌  தீர்மானிக்கப்‌ போகிறது என்றார்‌ அவர்‌.  சிலாங்கூரின்‌ நகர்புறத்‌ தொகுதியான கோலகுபுபாருவில்‌,  49.6 விழுக்காடு மலாய்‌ வாக்காளர்களும்,30.6 விழுக்காடு சீன வாக்காளர்களும்,18 விழுக்காடு இந்திய வாக்காளர்களும்‌ 2.1  விழுக்காடு இதர இன வாக்காளர்களும்‌ உள்ளனர்‌. அத்தொகுதியில்‌ மொத்தம்‌ 40,000 வாக்காளர்கள்‌ உள்ளனர்‌.  வழக்கமாக, சீன, இந்திய, நகர்ப்புற மலாய்க்காரர்களைக்‌ கவரக்கூடிய கூட்டணியாக பக்காத்தான்‌ ஹராப்பான்‌ விளங்குகிறது. அதே வேளையில்‌, பெரிக்காத்தான்‌ நேஷனல்‌ கூட்டணியை மலாய்க்காரர்கள்‌ ஆதரிக்கின்றனர்‌. 

கோலகுபுபாருவில்‌ சரிபாதிக்கும்‌ மேற்பட்டோர்‌ மலாய்‌ வாக்காளர்களாக இருந்தாலும்‌, அவர்களுள்‌ அறுபது முதல் அறுபத்தைந்து விழுக்காட்டினர்‌ மட்டுமே வாக்களிக்க வருவார்கள்‌ என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால்‌, தனது வெற்றி வாய்ப்பு பாதிக்க வேண்டி வரலாம்‌ என்று பெரிக்காத்தான் அஞ்சுகிறது.   இந்தியர்கள்‌ கைகொடுத்தால்தான்‌  வெற்றிபெற முடியும்‌  எனும்‌ நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுவாகவே, வாழ்க்கைச்‌ செலவின அதிகரிப்பு, ரிங்கிட்‌ நாணயத்தின்‌ மதிப்பு வீழ்ச்சியால்‌ பொருளாதாரம்‌ வலுவிழந்திருப்பது போன்ற காரணங்களால்‌ பெரும்பாலான வாக்காளர்கள்‌ அதிருப்தியுடன்‌ உள்ளனர்‌ என்றும்‌ அந்த ஆய்வாளர்‌  தெரிவித்தார்‌!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *