சித்த மருத்துவத்தில் பீடுநடைபோடும் டாக்டர் ஜனனி பூபாலன்
- Tamil Malar (Reporter)
- 28 Apr, 2024
(இஷாந்தினி தமிழரசன் - லாவண்யா ரவிச்சந்திரன்)
2010ஆம் ஆண்டு இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் - மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் இணைந்து இந்தியர்களின் பாரம்பரிய மருத்துவத்தைப் படிக்க மலேசிய இந்திய மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டத்தை அறிமுகம் செய்தனர்.
அதில் தேர்வான ஐந்து மலேசிய
மாணவர்களில் தற்பொழுது மலேசியாவில் சித்த மருத்துவத்தில் சிறந்து விளங்கும் ஒரு
மருத்துவராக டாக்டர் ஜனனி பூபாலன் வலம் வந்து கொண்டிருக்கின்றார் என்பது
மறுப்பதற்கில்லை.
ஐந்து வருடக் கால பட்டப்படிப்பை
முடித்து,
2017ஆம் ஆண்டு மலையகத்திற்கு திரும்பியதோடு
இங்குள்ள பொது மருத்துவமனையில் மருத்துவ பயிற்சியை மேற்கொண்டுள்ளார் டாக்டர் ஜனனி.
கோவிட் பெருந்தொற்று
காலத்திற்கு பிறகு, 2022ஆம் ஆண்டு
மீண்டும் உதவித்தொகையின் மூலம் குழந்தை மருத்துவத்தில் நிபுணத்துவத்தைப்
பெறுவதற்கு எம்.டி சித்தா துறையில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருவதாக அவர்
சொன்னார்.
சித்த மருத்துவத்தில் படிக்கும் ஆர்வம் எவ்வாறு தோன்றியது?
சிறுவயதிலிருந்தே
மருத்துவத்துறையில் படிக்க வேண்டுமென்பதே என்னுடைய முதல் தேர்வாகும்.
அதுமட்டுமல்லாமல், சிறுவயதில் என்னுடைய பாட்டி மூலிகைகளைப் பயன்படுத்தி
பாரம்பரியமாக வைத்தியங்களைப் பார்த்து வந்தவர். அவரைப் பார்த்தும்
மருத்துவத்துறையில் கால்பதிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது.
எஸ்.பி.எம் தேர்வை முடித்தவுடன்
ஏ லெவல் படிப்பை மலேசியாவில் மேற்கொண்டேன். பிறகு, சுங்கை பூலோ பொது மருத்துவமனையில் 3 நாட்களுக்கு அவசரப் பிரிவில் மருத்துவ பயிற்சியை செய்துக்
கொண்டிருந்தேன்.
அப்பொழுது 7 மாதக் குழந்தை வட்டு நோய் காரணமாகச் சிகிச்சைக்காக
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. 7 மாத குழந்தைக்கு இந்நோய்க்கான சிகிச்சை இல்லை என்பதனால் அந்தக் குழந்தையைக்
காப்பாற்ற முடியாமல் போனது.
ஒரு மருத்துவ மாணவியாக
அந்நிலையில் இருக்கும் போது அலோப்பதி மருத்துவ முறையில் குணப்படுத்த முடியாத
நோய்கள் உண்டு. நோய்களுக்கு மருந்துகள் இல்லாத சூழ்நிலை இருக்கு என்பதனை உணர்ந்து
அதற்கான தீர்வுகளைத் தேடிக் கொண்டிருந்தேன்.
அப்போதுதான், இயற்கை மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், சித்த
மருத்துவத்துறையில் தீர்க்க முடியாத நோய்களுக்குச் சிகிச்சைகள் இருப்பதை உணர்ந்து
பல ஆய்வுகளைச் செய்தேன்.
இதற்கான மேற்படிப்பைத் தொடர
தமிழ்நாடு, எம்ஜிஆர் மருத்துவக்
கல்லூரியில் சித்த மருத்துவம், ஆயுர்வேதா, யோகா, யுனானி போன்ற
துறைகளில் இளங்கலைப் பட்டப்படிப்பைத் தொடரலாம் என்பதனை கண்டுபிடித்தேன் என்றார்
டாக்டர் ஜனனி.
அதே சமயத்தில், இந்திய - மலேசிய அரசாங்கமும் இந்த உதவித் தொகையை அறிமுகம்
செய்தது. அதனை நல்ல வாய்ப்பாகப்
பயன்படுத்திக் கொண்டு சித்த மருத்துவத்தில் படிப்பைத் தொடர்ந்ததாக அவர் சொன்னார்.
மலேசியாவில் சித்த மருத்துவத்தின் வரவேற்பு எப்படி உள்ளது?
நான் படிக்கப் போகும் வரையில்
சித்த மருத்துவப் பட்டப்படிப்பு உயர்கல்விக்கூடங்களின் அமைச்சிலும் பொதுச் சேவை
துறையிலும் பதியப்படாமல் இருந்தது.
பிறகு, 2010ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட கல்வி ஊக்கத்தொகைக்குப் பிறகு, முறையாக மலேசிய அரசாங்கத்தின் கீழ் பதியப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், படித்து முடித்து மலேசியாவில் வேலை செய்யும்
அங்கீகாரத்தையும் மலேசிய அரசாங்கம் வழங்கியுள்ளது.
2016ஆம் ஆண்டு
சட்டத்திட்டத்தின் கீழ், சித்த
மருத்துவம், இயற்கை மருத்துவம், ஆயுர்வேத மருத்துவங்களைப் படித்து வந்த மருத்துவர்கள், இங்குள்ள நோய்களுக்கு கற்றுக் கொண்டு வந்த சிகிச்சைகளுக்கு
ஏற்றார்போல சிகிச்சையளிக்கலாம்.
ஆதலால், நான் படிக்கும் காலத்தில் கற்றுக் கொண்ட 120 வகையான மருந்துகளைத் தானே தயாரித்து பரிசோதனைகளுக்கு
உட்படுத்தி சிகிச்சைக்காகப் பயன்படுத்தலாம் என்றார் ஜனனி.
நாம் செய்துக் கொடுக்கும்
மூலிகை மருந்துகளை தேசிய மருந்தியல் துறையின் வழி சோதனைக்குட்படுத்தி தருவதோடு, புதிய மருந்துகளையும் தயாரித்து அரசாங்கத்தின் அனுமதியுடன்
நோயாளிகளுக்குப் பயன்படுத்தலாம். அதுமட்டுமல்லாமல், இங்கு கிடைக்க முடியாத மருந்துகளை வெளிநாடுகளிலிருந்து வரவழைத்து, அரசாங்கத்தின் அனுமதியுடன் பயன்படுத்தலாம்.
நம் இந்தியர்களிடையே நவீன மருத்துவத்திற்கு அப்பாற்பட்டுள்ள சித்த மருத்துவத்தில் நம்பகத்தன்மையை எவ்வாறு கொண்டு வந்தீர்கள்?
மலேசியாவைப்
பொறுத்தவரையில் பாரம்பரியமாக மூலிகைகளை
வைத்து வைத்தியம் பார்த்த வைத்தியர்கள்தான் அதிகம் உள்ளனர்.
என்னைப் போன்று சித்த
மருத்துவத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்து, மருத்துவமனையில் மருத்துவ பயிற்சிகளை மேற்கொண்டு, தற்பொழுது சித்த மருத்துவத்தை மக்களுக்காக அமல்படுத்தி
வருவது நான்மட்டும் தான்.
ஆகவே, முதன் முதலில் இதில் கால் எடுத்து வைக்கும் பொழுது மக்கள்
மத்தியில் சித்த மருத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வு இன்னும் ஆழமாக வரவில்லை
என்பதனை புரிந்து கொண்டேன்.
மக்களைப் பொறுத்தமட்டில் சித்த மருத்துவம் என்பது பாட்டி வைத்தியம், வீட்டு வைத்தியம், மூலிகை வைத்தியம் என்ற பார்வை மட்டுமே உள்ளது. மாறாக, அலோபதிய வைத்தியத்திற்கு ஈடாக சித்தம் மருத்துவம் உள்ளது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை என்றார்.
சித்த மருத்துவத்தை
மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் எழுந்த சிக்கல் என்ன?
அலோபதி மருத்துவமாக
இருந்திருந்தால், படிப்பை
முடித்தவுடன் இரண்டு வருடம் பொது மருத்துவமனைகளில் பயிற்சி காலத்தை எதிர்கொள்ள
வேண்டும்.
ஆனால், தமிழ்நாட்டில் பட்டப்படிப்பை மேற்கொள்வதனால் அங்கேயே ஒரு
வருடக் காலம் பயிற்சி முடிக்க வேண்டிய
சூழ்நிலை உள்ளது. படிப்பை முடித்து மலேசியாவிற்கு வந்ததும் சித்த மருத்துவராக
இங்குள்ள மருத்துவமனைகளில் பயிற்சிகளை மேற்கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படுத்தி
தரவில்லை என்றார்.
சித்த மருத்துவத்திற்கான
அங்கீகாரம் மலேசியாவில் இருந்தாலும், அதற்கான அடுத்தக்கட்ட முன்னெடுப்புகள் இன்னும் மலேசியாவில் அமலுக்கு வரவில்லை
என்று டாக்டர் ஜனனி சொன்னார்.
இவ்வேளையில், மக்களை அணுகுவதில் சிக்கல்களை எதிர்நோக்கியதாக அவர்
சொன்னார். சுயமாகவே மக்களை அணுகி அவர்களிடம் சித்த மருத்துவத்தின்
முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதில் பல சிக்கல்களை எதிர்நோக்கினேன்.
நம்முடைய மக்களுக்கிடையே சித்த
மருத்துவத்தின் விழிப்புணர்வு ஆரம்பக் காலங்களிலே இருந்த ஒன்றாகத்தான் இருந்தது.
உணவே மருந்து, மருந்தே உணவு என்ற
வாழ்க்கை முறையை பின்பற்றி வந்த
சமுதாயம்தான் நம் இந்திய சமுதாயம்.
உண்ணும் உணவில் சீரகம், கடுகு, மிளகு ஆகிய
சிறுதானியங்களை உணவில் சேர்த்து சித்த மருத்துவத்தைப் பின்பற்றி வந்தவர்கள்தான்.
ஆனால்,
இந்த நவீன காலத்தில் அதன் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது
என்ற விழிப்புணர்வு மட்டுமே அவர்களிடத்தில் குன்றி இருந்தது எனலாம்.
சமூக ஊடகங்கள், நாளிதழ்களில் நேர்காணல், கருத்து பகிர்வுகளின் வழி முடிந்தவரையில் மக்களிடம் சித்த மருத்துவத்தின்
விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.
சுயமாக மக்களை அணுகி பல
தகவல்களைக் கொண்டு சேர்ப்பதினால், சித்த
மருத்துவத்தையும் என்னுடைய படிப்பிற்கான அங்கீகாரத்தையும் தற்பொழுது வழங்கி
வருகின்றனர்.
நவீன மருத்துவத்தைத் தாண்டி
சித்த மருத்துவத்தின்வழி பல நோய்களைத் தீர்க்கலாம் என்ற மன மாற்றம் தற்பொழுது
மக்களிடையே உருவாகியுள்ளது.
சித்த மருத்துவத்தின் வழி, 4448 நோய்களை குணப்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. சித்த
மருத்துவம் இந்த அளவிற்கு தன்மை வாய்ந்தது என்ற கூற்றே மக்களுக்கு இப்பொழுதுதான்
தெரிய வருகிறது.
சராசரி மனிதனின் வாழ்வில் சித்த மருத்துவத்தின் தேவை என்ன?
சித்த மருத்துவக் கூறுகளில்
இருக்கக்கூடிய வாழ்வியலில் சில கூறுகளை நாம் பின்பற்றலாம்.
ஆனால், மருத்துவ ரீதியில் குணப்படுத்தக்கூடிய நோய்களுக்கு
மருத்துவர்களை நாடினால் மட்டுமே அதற்கு ஏற்றார் போன்ற மருந்துகளை பரிந்துரைப்பதோடு
சிகிச்சைகளையும் அளிக்க முடியும்.
பற்பம், செந்தூரம், கழங்கு, கட்டு போன்ற சித்த மருந்துகளை சராசரி மனிதனால் செய்ய
முடியாது.
ஆயுள்காலத்தை நீடிக்கக்கூடிய
தன்மைகளை இந்த மருந்துகள் கொண்டிருக்கின்றன. அதனை சரியான வழிமுறைகளில்தான்
செய்யமுடியுமே தவிர சராசரி மனிதனால் செய்ய முடியாது.
அதுமட்டுமல்லாமல், தற்பொழுது பலர் மூலிகைகளைப் பயன்படுத்தி மருந்துகளைச்
செய்து நோய்களைக் குணப்படுத்த உண்ணுகின்றனர். சில மூலிகைகளை அதன் பயன்பாடு
தெரியாமல் உண்பதனால் பின்விளைவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
உதாரணத்திற்கு, ஒருவர் கடுக்காயை தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வந்தால்
அவருக்கு உடலில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிலை ஏற்படும்.
இந்தச் சூழ்நிலையில்தான்
மருத்துவரின் உதவிகள் மக்களுக்குத் தேவைப்படுகிறது.
எந்த நேரத்தில், எந்த மருந்தினை உட்கொள்ள வேண்டும் என்ற அறிவுரையை
மருத்துவர்கள் வழங்குவார்கள்.
நோயளிகளின் பிரச்சினையக்
கண்டறிந்து, அதனை தீர்ப்பதற்கான
மருந்து,
காலகட்டம் ஆகியவற்றை சித்த மருத்துவர்களாகிய நாங்கள்
பரிசோதிப்போம் என்று அவர் கூறினார்.
மருத்துவர்களின் ஆலோசனைப்படி
எடுக்க்ககூடிய சித்த, மூலிகைகளின்
மருத்துவத்திற்கான பயன்கள், சில
நேரங்களில் புலனம், முகநூலில்
கிடைக்கின்ற தகவல்களில் கிடைப்பதில்லை என்றார்.
எந்தந்த நோய்களை மலேசியர்கள் அதிகம் எதிர்நோக்குகின்றனர்?
சித்த மருத்துவத்தைப்
பொருத்தமட்டில் 32 வெளி
மருந்துகளும் 32 உள் மருந்துகளும் உள்ளன. 32 உள் மருந்துகளில் சூரணம் (பொடி), மாத்திரைகள், கசாயம், லேகியம் போன்றவைகள்
அடங்கும். வெளி மருந்துகளாக வர்மம், தொக்கணம், ஒற்றடம், எண்ணெய் குளியல், மூலிகை நீர் குளியல், நீராவி
குளியல்,
அட்டை விடுதல் என வகைப்படுத்தலாம். வெளிப்புற மருந்துகள்
குறிப்பாக வளரும் குழந்தைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. குழந்தைகள் வளரும்
பொழுது எழும்புகள் மாறி கூடிருக்கும் வேளையில் கட்டுகளைக் கட்டியோ எண்ணெய்
தொக்கணம் கொடுப்பதன் வழியோ அது நிவர்த்தியாகும்.
மலேசியாவைப் பொறுத்தமட்டில்
பக்கவாத நோய்களையே மக்கள் அதிகம்
எதிர்நோக்குகின்றனர். மலேசியாவில் அலோபதிய மருத்துவத்தைப் படித்த வரையில்
பக்க வாதத்திற்கு தீர்வு கிடையாது என்று எண்ணியுள்ளேன். ஆனால், இந்தியாவில் சித்த மருத்துவத்தைப் படித்த பிறகுதான், அதற்கான தீர்வு இருப்பதைக் கண்டறிந்தேன் என்றார் டாக்டர்
ஜனனி. மலேசியாவில் இதுவரையில் பலரை பக்க வாதத்திலிருந்து குணப்படுத்திய ஆற்றலை
அவர் கொண்டிருக்கின்றார் என்றால் அது மறுப்பதற்கில்லை.
நீரிழிவு நோயையும் புற்று நோயையும் எவ்வாறு சித்த மருத்துவத்தில் குணப்படுத்த முடியும்?
புற்று என்பதனை சித்த
மருத்துவத்தில் கட்டி என்றே வகைப்படுத்துவர். அகத்தியர், போகர் பாடல்களில் இதற்கான தீர்வுகளும் மருந்துகளும் அந்தக்
காலத்திலேயே வகுத்துக் கொடுத்துள்ளனர். சித்த மருத்துவத்தைப் படிக்கும் பொழுது
ஒவ்வொரு கட்டிகளுக்கான மருந்துகளையும் வழிமுறைகளையும் முறையாகக் கற்றுக் கொண்டு
வாழ்வியலில் அதனை அமல்படுத்துவோம் என்றார் ஜனனி.
சித்த மருத்துவத்தில் நாம்
பயன்படுத்தக்கூடிய மருந்துகள் அனைத்தும் முறையே கற்றுக் கொண்டு செய்யப்படுவதே தவிர
சுயமாகச் செய்யக்கூடியது அல்ல என்று அவர் சொன்னார்.
புற்று நோய் என்று பார்க்கும்
பொழுது அதன் வகையை முதலில் சித்த மருத்துவர்கள் அறிந்து கொள்வர். அதற்காகப்
பொதுவாக நவீன மருத்துவ சலுகைகளைப் பயன்படுத்துவோம். நுட்பமாய்ச் சோதனை, எக்ஸ்ரேய் போன்றவற்றை
பயன்படுத்தியே நோயின் நிலை கண்டறியப்படுகின்றது. அந்தச் சோதனையில் வழி
சித்த மருத்துவத்தில் எம்மாதிரியான மருந்துகளை வழங்க வேண்டும் என்பதனை ஆராய்ந்து
சிகிச்சை அளிப்போம் என்றார் டாக்டர் ஜனனி.
நவீன மருத்துவத்தின் சிகிச்சை செலவும் சித்த மருத்துவத்தின் சிகிச்சை செலவும் எவ்வகையில் மாறுப்படுகின்றன?
நோயைப் பொறுத்தே ஒரு நோயிக்கான
சிகிச்சை முறை ஆராயப்படுகின்றது. அவ்வகையில் ஏறக்குறையில் சித்த மருத்துவத்திலும்
நவீன மருத்துவத்திலும் சிகிச்சையின் செலவுகள் ஓரளவு சமமாகவே இருக்கும்.
நவீன மருத்துவத்திலும் சித்த மருத்துவத்திலும் வழங்கப்படுகின்ற மருந்துகள் அனைத்தும் தேசிய மருந்தியல் துறையில் அனுமதியையும் அங்கீகாரத்தையும் பெற வேண்டும். அதற்குமே செலவுகள் இருக்கும். ஆக, சித்த மருத்துவம் நவீன மருத்துவத்திற்கீடாகவே அமையும் எனலாம்.
உடனடியாகத் தயாரிக்ககூடிய மூலிகை மருந்துகளின் முதல் பரிசோதனை எவ்வாறு இருக்கும்?
மருத்துவ ரீதியில்
தயாரிக்கக்கூடிய மருந்துகள் அனைத்தும் மருத்துவ அங்கீகாரம் பெற்று
பரிசோதிக்கப்படுபவைதான். சுயமாக அவ்வப்போது தயாரிக்கும் மூலிகை மருந்துகள்
ஆராய்ச்சிகாக நேரடியாக நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. சான்றாக, டெங்கி காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் கொடுத்தால்
சரியாகிவிடும் என்பதனை நோயாளிகளின் மீது செய்யப்படும் ஆராய்ச்சிகளின் வழியே உறுதி
செய்ய முடியும் என்பதை பற்றி தெளிவாக அவர்
சொன்னார்.
மலேசிய மருத்துவ மாணவர்கள் எவ்வாறு சித்த மருத்துவத்தை மேற்கல்வியாகத் தொடரலாம்?
சித்த மருத்துவ கல்வி
உதவித்தொகை மலேசிய இந்திய தூதரங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய
வெளியுறவு அமைச்சின் கலாச்சார மற்றும் பண்பாடு இந்திய கவுன்சில் மூலம் இந்த
வாய்ப்பு வழங்கப்படுகிறது.
மருத்துவப் படிப்பை மேற்கொள்ள
விரும்பும் அறிவியல் சார் மாணவர்களாக
அதாவது உயிரியல், வேதியல், இயற்பியல், கூடுதல்
கணிதப் பாடத்தைக் கொண்டிருப்பதோடு, ஏ லெவல், கெனடியன் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலிய மெட்ரிகுலேஷன், எஸ்டிபிஎம்மில் அறிவியல் புலத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட படிப்புகளில் சிறந்த
தேர்ச்சி அடைந்திருந்தால் தாராளமாகக் கல்வி உதவித்தொகையைப் பெற இந்திய தூதரங்க
இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இந்த உதவித்தொகை வருடத்திற்கு 20 மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது. அதில் 5 இடம் சித்த மருத்துவத்திற்கும், 11 இடம் ஆயுர்வேத மருத்துவத்திற்கும், மீத இடங்கள் ஹோமியொபதி, யுனானி மருத்துவத்திற்கும் தருகின்றனர்.
சித்த மருத்துவத்தின் வழி நோய்க்கான தீர்வு காலம் எவ்வளவு?
“வேர்பாரு தழை பாரு, மெல்ல மெல்ல
பற்ப செந்தூரம் பாரே” என்பது போல ஒரு நோயை எடுத்தவுடன் குணப்படுத்த அதிக அளவிலான
மூலிகைகளைக் கொண்டு மருத்துவம் பார்க்க மாட்டோம். அந்த நோயினை ஆராய்ந்து
படிபடியாகவே சிகிச்சைகள் அளிக்கப்படும். அவ்வகையில் நோயின் ஆழத்தை வைத்தே அதன் காள
அளவை கணிக்க முடியும்.
சித்த மருத்துவத்தில் மூன்று
விதமான மருத்துவ முறைகள் உண்டு. தேவளுரை, மக்களுரை, சூளுரை என்று மூன்று வகை
உண்டு.
தேவளுரை என்றால் உலோகப்
பொருள்களைக் கொண்டு அதாவது கட்டு, கழங்கு, பற்பம், செந்தூரம்
ஆகிய உயரிய மருந்துகளைக் கொண்டு தயாரிக்கப்படும் மருந்துகளாகும்.
மக்களுரை என்பது மனித
மருத்துவமாக அதாவது மூலிகைகளின் சாறு, குடிநீர், சூரணம், மாத்திரை ஆகியவை அடிப்படையில் வழங்கப்படுகின்றது.
இறுதியாக, நோயின் தீவீரம் அதிகமாக இருக்கும் வேளையில் சூளரை
அடிப்படையில் ராட்சம் மருத்துவ முறையைப் பயன்படுத்துவோம். அறுவை, கீரை, சுட்டிகை, சதாகை, கொம்புக்
கட்டல் ஆகிய வழிமுறைகளைப் பின்பற்றுவோம் என்று டாக்டர் ஜனனி கூறினார்.
சித்த மருத்துவத்தை
பொறுத்தமட்டில் உடனடியாகவும் நோய்களை வர்மம் முறையில் குணப்படுத்த முடியும்.
சித்த மருத்துவத்தைத் தாண்டி தற்பொழுது டாக்டர் ஜனனியின் எதிர்காலத் திட்டம் என்ன?
7 வருடக் காலமாக மலேசியாவில்
சித்த மருத்துவத்தை ஆரம்பித்தது முதல் இதுவரையில் தனிப்பட்ட முறையிலும், சுகாதார அரசின் கீழ் பொது மருத்துவமனைகளிலும் சுமார் 10,00 நோயாளிகளைக் குணப்படுத்தியுள்ளேன். அதில் 98 விழுக்காட்டினர் நோயிலிருந்து தேர்ச்சி பெற்றவர்களாகவும்
இருக்கின்றனர்.
தற்பொழுது நான் உலக சுகாதார
அமைப்பில் ஓர் அங்கமாக இருந்து வருகின்றேன். சித்த அமருத்துவத்தில் அவர்களுக்குத்
தேவையான ஆலோசனைகளை வழங்கி பல சேவைகளை வழங்கி வருகின்றேன்.
மலேசியாவில் சித்த மருத்துவத்தை
ஒரு மேற்படிப்பாகத் தொடருவதற்கு மலேசிய உயர்க்கல்வி அமைச்சுடனும் சகாதார
அமைச்சுடனும் இணைந்து ஒரு பாடத்திட்டத்தை வரையறுத்துள்ளேன்.
அதோடு, மலேசியாவில் சித்த மருத்துவத்தைத் தொடர போதிய அங்கீகாரமும்
சட்டமும் அமலுக்கு வர பல முன்னெடுப்புகளைச் செய்துள்ளோம்.
மேலும், சித்த மருத்துவத்தை சார்ந்து சட்டத்தை உருவாக்குவதில் ஒரு
உறுப்பினராகவும் இருந்து கங்கு வகித்து வருகின்றேன் என்றார் டாக்டர் ஜனனி.
தற்பொழுது எம்டி மருத்துவப்
பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறேன். குழந்தை மருத்துவத்துறையில் நிபுணத்துவம்
பெறுவதற்கு பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறேன். இரண்டாவது முறையாக இந்தப்
பட்டப்படிப்பைத் தொடருவதற்கு இந்தக் கல்வித் உதவித்தொகையைதான் விண்ணப்பித்துள்ளேண்.
பொதுவாக, பெரியவர்களுக்குத்தான் என்ன நோய் என்பதனை ஆராய்ந்து
பார்ப்போம். குழந்தை மருத்துவத்துறையில்
பிறந்த குழந்தை முதல் 12 வயது வரை
உள்ள குழந்தைகள் எதிர்கொள்ளும் நோட்களுகளையும் அதனை தீர்க்கும் சிகிச்சை
வழிமுறைகளையும் ஆழமாகக் கற்று வருகிறேன்.
குழந்தைகள் எதிர்கொள்ளும்
நிரம்பு சார்ந்த பிரச்சினைகளுக்குச் சித்த மருத்துவத்தில் நிறைய தீர்வுகள்
இடம்பெறுகின்றன. ஹோதிசம், எடிஎஸ்டி, நியுரோ வளர்ச்சி சிக்கல் ஆகியவற்ரை நிவர்த்தி செய்வதற்கு
சித்த மருத்துவத்தில் முறையான மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
சுறுக்கமாகச் சொன்னால்
அலோபதியில் தீர்க்க முடியாத வியாதிகளுக்கு சித்த மருத்துவத்தில் தீர்வு உள்ளதுடன்
பலர் அதனையே நாடி வருகின்றனர்.
இந்தியாவில் இதுபோன்ற பல
குழந்தைகளின் தீர்க்க முடியாத நோர்களுக்குச் சித்த மருத்துவத்தின் வழி தீர்வு
கண்டதுண்டு.
நவீன மருத்துவத்தில் இருக்கும்
மருத்துவர்களுக்குச் சித்த மருத்துவத்தைச் சார்ந்த தங்களின் கருத்து என்ன?
மலேசியாவில் சித்த மருத்துவம்
தமிழர்கள் மத்தில் மட்டுமல்லது பிற இனத்தவர்களின் சித்த மருத்துவ முறையும் உள்ளது.
ஆக,
நவீன மருத்துவர்கள் இந்த மருத்துவர்களுடனும் மருத்துவ
முறைகளுடனும் இணைந்து எவ்வாறு தீர்வு காண முடியாத நோய்களுக்குத் தீர்வுகளைக்
காணலாம் என்பதனை யோசிக்க வேண்டும்.
ஒன்றுக்கூடி நோயுடன் சண்டைப்போடுவதுதான் மருத்துவர்களின் கடமையாக உள்ளது. ஆக, எந்த நோய்க்கு, எந்த முறை சிறப்பு என்பதனை ஆராய்ந்து செயல்பட்டால் பல நோய்களுக்குத் தீர்வுகளைச் சுலபமாகக் காணலாம் என்றார் டாக்டர் ஜனனி!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *