கீழ்த்தரமான சுயநலத்திற்கு மக்களை பலிகடா ஆக்காதீர்கள்! - ஓம்ஸ் பா.தியாகராஜன்
- Tamil Malar (Reporter)
- 05 May, 2024
கோலகுபு பாரு இடைத்தேர்தலில் நடக்கின்ற
பிரச்னைகள் குறித்து நாம் அறிவோம். பலரும் பலவிதமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். அதிலும்
நம் இனத்தைச் சார்ந்த சிலரே நம் சமுதாயத்தை வாக்களிக்க வேண்டாம் என்று சொல்வது மிகப்பெரிய
துரோகம். தான் வந்த பாதையை மறந்து இந்த அளவிற்குத் தரம் தாழ்ந்து பேசுவது அரசியலுக்கு
அழகல்ல. அரசின் முக்கியப் பொறுப்பில், சட்டத்திட்டங்களுக்கு கீழ்ப்படிந்து பொறுப்பு வகித்த ஒருவர் ஜனநாயகக் கடமையான
வாக்களிக்கும் உரிமையைத் தடுக்க வேண்டும் என நினைப்பது, வாக்களிக்க
வேண்டாம் எனச் சொல்வது வேடிக்கையாய்தான் இருக்கிறது. சுயநலத்திற்காக எதை வேண்டுமானாலும்
செய்யலாம் என நினைக்கும் இதுபோன்ற அரசியல்வாதிகளை நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.
இவர்களைப் போன்றவர்களுக்குத்தான் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று கோலகுபு பாருவில் நடைபெற்ற 18 அரசு சாரா இயக்கங்களுடனான நிகழ்வில் மலேசிய அரிமா சங்கத்தின் தோற்றுநரும், ஓம்ஸ் அறவாரியத் தலைவருமான ஓம்ஸ் பா.தியாகராஜன் தெரிவித்தார்.
நம் சமுதாயத்தில் இன்னும் குடியுரிமை
இல்லாமல், அடையாள அட்டை இல்லாமல் சிரமத்தில் இருக்கிறார்கள்.
ஆனால், அடையாள அட்டை வைத்திருந்தும், அவர்களை
எல்லாம் வாக்களிக்கக்கூடாது என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது? அப்படி வாக்களிக்கவில்லை என்றால், அடையாள அட்டை இருந்தும்
புண்ணியம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அடையாள அட்டை என்பது நமக்கான உரிமையை நிலைநாட்டுவது.
வாக்களிக்க வேண்டாம் என்று சொல்வது உரிமையை இழப்பதற்குச் சமம்.
குடியுரிமை இல்லை என்று குரல் கொடுக்கிறார்கள்.
ஆனால், அப்படி
குடியிரிமை உள்ள மக்களிடம் அவர்களின் உரிமையை, ஜனநாயகக் கடமையைச்
செய்யக் கூடாது என்கிறார்கள். உங்கள் கீழ்த்தரமான சுயநலத்திற்கு மக்களைப் பலிகடா ஆக்காதீர்கள்.
எனவே, மக்கள் இதுபோன்ற அரசியல்வாதிகளிடம் விழிப்புணர்வாக இருங்கள். உங்களுக்கான
குடியுரிமை எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்து, அறிந்து தெரிந்து
உங்கள் வாக்குகளைச் செலுத்தி உங்கள் குடியுரிமையை நிலைநிறுத்துவீர்கள் என்று நம்புகிறேன் என்று அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *