டூத் பேஸ்ட் மற்றும் அதன் கவர் மேல் உள்ள வண்ணங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்!
- Muthu Kumar
- 05 Jul, 2024
காலையில் எழுந்ததும் அனைவரும் செய்யும் முதல் விஷயம் பல் துலக்குவது தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பமான டூத் பேஸ்ட் இருக்கும். அதனை பயன்படுத்தி பல் துலக்குவது வழக்கம். இந்நிலையில் ஒவ்வொரு டூத் பேஸ்ட்டின் நுனியிலும் ஒவ்வொரு வண்ணங்கள் கொண்ட குறியீடுகள் இடம் பெற்று இருக்கும்.
அது பற்றி பெரிதாக யாரும் கவனித்து இருக்க மாட்டோம். இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலின்படி, ஒவ்வொரு வண்ணங்களும் டூத் பேஸ்ட்டில் பயன்படுத்தப்படும் பொருட்களை பற்றி கூறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. டூத் பேஸ்ட்டில் பச்சை நிறம் இருந்தால் இயற்கையான பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது என்றும், நீல வண்ணம் இருந்தால் இயற்கையான பொருட்கள் மற்றும் மருந்துகளின் கலவையைக் கொண்டுள்ளது என்றும், சிவப்பு வண்ணம் இருந்தால் இயற்கை மற்றும் இரசாயன பொருட்கள் இரண்டையும் கொண்டுள்ளது என்றும், கருப்பு நிறம் இருந்தால் அதில் ரசாயன பொருட்கள் மட்டுமே உள்ளன என்று அர்த்தம் என்று இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த தகவல் முற்றிலும் தவறானது என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். டூத் பேஸ்ட்டில் பயன்படுத்தப்படும் இந்த வண்ணங்கள் பேக்கேஜிங் மற்றும் கட்டிங் நோக்கங்களுக்காக அச்சிடப்படுகின்றன என்றும் விளக்கம் அளிக்கின்றனர்.
தற்போது இயந்திரங்களின் உதவியால் தான் இவை தயாரிக்கப்படுவதால் சரியான அளவில் பேக்கேஜிங் செய்ய இந்த வண்ண குறியீடுகள் இடம் பெறுகின்றன. இதற்கும் டூத் பேஸ்ட்டில் உள்ள பொருட்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் மருத்துவர்கள் விளக்கம் அளிக்கின்றனர். மேலும் டூத் பேஸ்ட்டில் என்ன என்ன பொருட்கள் சேர்க்கப்படுகின்றன என்பது பற்றிய விவரங்கள் தெளிவாக அதில் இடம் பெற்று இருக்கும் என்றும், மக்கள் அதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
டூத் பேஸ்ட் வறண்டு போகாமல் இருக்க கிளிசரின், சர்பிடால் போன்ற பொருட்கள் சேர்க்கப்படுகிறது. பல் துலக்கும் போது பற்களில் இருந்து பிளேக் மற்றும் கறைகளை அகற்ற கால்சியம் கார்பனேட், சிலிக்கா போன்ற பொருட்கள் சேர்க்கப்படுகிறது. டூத் பேஸ்ட்டின் நிலைத்தன்மையை பராமரிக்க சாந்தன் கம், கராஜீனன் போன்றவை சேர்க்கப்படுகின்றன. பல் சிதைவை தடுக்கவும், அதன் சுவையை அதிகரிக்கவும் சாக்கரின், சைலிட்டால் போன்ற பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. மேலும் கூடுதல் சுவைக்காக புதினா, இலவங்கப்பட்டை ஆகியவை சேர்க்கப்படுகின்றன. பல் துலக்கும் போது நுரை உருவாகுதற்கு சோடியம் லாரில் சல்பேட் சேர்க்கப்படுகிறது. பற்களை வலுப்படுத்த ஸ்டானஸ் புளோரைடு சேர்க்கப்படுகிறது. பற்களில் ஏற்படும் பிளேக் மற்றும் ஈறு நோய்களை தடுக்க ட்ரைக்ளோசன், ஜிங்க் சிட்ரேட் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.
டூத் பேஸ்ட்களில் சேர்க்கப்படும் இந்த பொருட்கள் பற்களை சுத்தம் செய்யவும், பல் சொத்தையை தடுக்கவும், சுவாசத்தை புத்துணர்ச்சியடையச் செய்யவும், ஒட்டுமொத்த வாய் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் செயல்படுகின்றன. ஒவ்வொரு நிறுவனங்கள் மற்றும் அந்த டூத் பேஸ்ட்டின் நோக்கம் ஆகியவற்றை பொறுத்து மேல குறிப்பிட்டுள்ள பொருட்கள் மாறுபடலாம். உங்கள் டூத் பேஸ்ட்டில் என்ன என்ன பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ள அதன் பேக்கேஜிங்கில் உள்ள பட்டியலின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *