சமையல் எண்ணெய் பயன்படுத்தப்பட்டு பூஜை எண்ணெய்யாக விற்கப்படும் அவலம்-பினாங்கு இந்து இயக்கம்!

- Muthu Kumar
- 27 Jun, 2025
பினாங்கு, ஜூன் 27-
ஏழை மக்களுக்காகவும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்காகவும் அரசு தரப்பில் குறைந்த விலைக்கு விற்கப்படும் சமையல் எண்ணெய்யை தவறாகப் பயன்படுத்தி அது பூஜை எண்ணெய்யாக 200 சதவிகித இலாபத்திற்கு சந்தைகளில் விற்கப்படும் அவலம் தொடர்பில், பினாங்கு இந்து இயக்கம் அம்பலப்படுத்தியிருப்பதோடு, இந்த விவகாரம் தொடர்பில் தனது வருத்தத்தையும் முன் வைத்திருக்கிறது.
இந்து மக்கள் மத்தியிலும் கோயில்களிலும் பயன்படுத்தப்படும் பூஜை எண்ணெய் வகைகள் உண்மையில் சமையல் தரம் மிக்க எண்ணெய்யே ஆகுமென்பதை உணர்த்தியிருக்கும் இந்து இயக்கம், அரசாங்கத்தால் விநியோகிக்கப்படுகின்ற ஒரு கிலோ எடையிலான ரி.ம 2.50 பெறுமானமுள்ள சாதாரண சமையல் எண்ணெயை பூஜை என்ற பெயரில் சட்டவிரோதமாக விற்கப்படும் அதிர்ச்சியூட்டும் தகவலை புலப்படுத்தியிருக்கிறது.
பொருளீட்டும் நோக்கத்தை மட்டுமே கொண்டிருக்கும் குறிப்பிட்ட சில நேர்மையற்ற தயாரிப்பாளர்கள் தங்களின் முரணான செயல்களால், இத்தகைய ரீதியில் இந்து மக்களை ஏமாற்றி கொள்ளை இலாபம் ஈட்டுவதாக, உண்மையில் பூஜை எண்ணெய் என்ற பெயரில் இத்தகைய தரப்பினர் ஒரு லிட்டர் எண்ணெய் புட்டியை ரி.ம 8.20 என்ற விலைக்கு விற்பனை செய்வதன் மூலம் 228% சதவிகித இலாபத்தை ஈட்டுவதாக, மாநில இந்து இயக்கத் தலைவர் டத்தோ பி.முருகையா கூறினார்.
இவ்வாறு முரணான முறையில் தயாரிக்கப்படும் பூஜை எண்ணெய் வெவ்வேறான பெயர்களில் விற்கப்படுவதாகவும், இத்தகைய சில எண்ணெய் வகைகள் வண்ணக் கலவைகளால், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதத்தில் உருவாக்கம் கண்டு சந்தைகளை ஆக்கிரமித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த சட்டவிரோத எண்ணெய் தயாரிப்பு குறித்து, உள்நாட்டு வாணிப அமைச்சு தீவிரக் கண்காணிப்பு மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டு, போலிகளை முறியடிக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.அரசு சார்பில் விநியோகிக்கப்படும் குறைந்த விலையிலான சமையல்எண்ணெய் இத்தகைய முரணான வகையில் செல்லும் அவல நிலையை
அமலாக்கப் பிரிவினர் கண்டறிந்து தடுத்து நிறுத்துவதோடு, அவை உரிய முறையில் எளிய மக்களுக்கு தடையின்றி கிடைப்பதையும் உறுதிப்படுத்த வேண்டுமெனவும் கோரிக்கை எழுப்பியுள்ளார்.
மேலும் உண்மையாக தயாரிக்கப்படும் பூஜை எண்ணெய் குறித்த தெளிவான விவரங்கள் புட்டிகளின் பசைக் காகித ஒட்டிகளில் குறிப்பிடப்பட்டிருப்பதையும் உள்நாட்டு வாணிப அமைச்சு உறுதிப்படுத்துவது அவசியமெனவும் வேண்டுகோள் விடுத்திருக்கும் அவர், சரியான வணிக முத்திரைகளும் விவரத் துணுக்குகளும் இல்லாத தயாரிப்புகளுக்கு வர்த்தக அனுமதி வழங்கிடாதவாறு தடை விதிக்க வேண்டுமெனவும் முறையிட்டுள்ளார்.
Minyak masak subsidi dijual sebagai minyak sembahyang dengan keuntungan 228%, didedahkan oleh Pemimpin Hindu Pulau Pinang. Beliau menggesa penguatkuasaan tegas oleh KPDN untuk menghalang penipuan ini dan memastikan minyak subsidi sampai kepada golongan sasar.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *